எபேசியர் 6
6
1பிள்ளைகளே! கர்த்தரைப் பின்பற்றுகின்றவர்களாக நீங்கள் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள், இதுவே சரியானது. 2“உங்கள் தந்தையையும் தாயையும் மதித்து நடவுங்கள்.” இதுவே வாக்குறுதியுடன் சேர்த்துக் கொடுக்கப்பட்ட முதலாவது கட்டளை. 3“அதன்படி உங்களுக்கு நன்மை உண்டாகும்; இந்த உலகத்தில் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள்”#6:3 உபா. 5:16 என்பதே அந்த வாக்குறுதி.
4தந்தையரே! உங்கள் பிள்ளைகளுக்கு கோபமூட்டாதீர்கள். மாறாக, கர்த்தருக்குரிய முறையில் அவர்களை நெறிப்படுத்தி, அவரது அறிவுறுத்தல்களின்படி அவர்களைப் பராமரித்திடுங்கள்.
5அடிமைகளே, நீங்கள் உண்மையான மனதுடன் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போல, இந்த உலகத்தில் உங்களுக்கு எஜமான்களாய் இருக்கின்றவர்களுக்கும் பணிவுடனும் மரியாதையுடனும் கீழ்ப்படியுங்கள். 6தாம் மேற்பார்வை செய்யப்படும்போது மட்டும் கீழ்ப்படிகின்றவர்களைப் போலவோ அல்லது மனிதரை பிரியப்படுத்துவதற்காக மட்டும் கீழ்ப்படிகின்றவர்களைப் போலவோ இல்லாமல், இறைவனுடைய விருப்பத்தை முழு மனதோடு நிறைவேற்றும் கிறிஸ்துவின் அடிமைகளைப் போல கீழ்ப்படியுங்கள். 7நீங்கள் மனிதர்களுக்கு அல்ல, கர்த்தருக்குப் பணி செய்கின்றவர்களாக முழு உற்சாகத்தோடு பணி செய்யுங்கள். 8ஏனெனில் ஒருவன் அடிமையாக இருந்தாலும் சுதந்திரமானவனாக இருந்தாலும் அவனவன் செய்கின்ற நன்மைக்குப் பதிலாக, கர்த்தர் அதற்குரிய பலனை அவனவனுக்குக் கொடுப்பார் என்பது உங்களுக்குத் தெரியும்.
9எஜமானரே, நீங்களும் உங்கள் அடிமைகளை அப்படியே நடத்துங்கள். அவர்களைப் பயமுறுத்த வேண்டாம். ஏனெனில், நீங்களும் அவர்களும் பரலோகத்திலுள்ள ஒரே எஜமானுக்கே உரியவர்கள் என்பதையும், அவர் பக்கச்சார்பு அற்றவர் என்பதையும் அறிந்திருக்கிறீர்கள்.
இறைவனின் போர்க் கவசம்
10இறுதியாக, கர்த்தரிலும், அவருடைய பெரிதான வல்லமையிலும் ஆற்றல் பெற்றவர்களாக இருங்கள். 11பிசாசின் தந்திரமான யுக்திகளை நீங்கள் எதிர்த்து நிற்கத் தக்கவர்களாய் இருக்கும்படி, இறைவனின் முழுப் போர்க் கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள். 12ஏனெனில், நமக்கு இருக்கும் போராட்டம் மனிதர்களோடு அல்ல. அது தீமையான ஆளுகைகளுக்கும், உலகத்தின் அதிகாரங்களுக்கும், இந்த இருண்ட உலகில் ஆட்சி செய்யும் வல்லமைகளுக்கும் எதிரானதாகவும், வானமண்டலங்களிலுள்ள தீய ஆவிகளின் சேனைகளுக்கு எதிரானதாகவும் இருக்கின்றது. 13எனவே, இறைவனின் முழுப் போர்க் கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள். அப்போது, தீமையின் நாளில்#6:13 தீமையின் நாளில் – வேதனை, துன்பம், தீமையான நிகழ்வுகள் நமக்கு நேரிடக் கூடிய காலத்தை இது குறிக்கிறது. எதிரியின் தாக்குதலை எதிர்த்துப் போரிடவும், எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு உறுதியுடன் நிலைநிற்கவும் முடியும். 14ஆகவே உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள, சத்தியத்தை உங்கள் இடுப்பைச் சுற்றி இடைப்பட்டியாகக் கட்டிக்கொண்டு, நீதியை மார்புக் கவசமாக அணிந்துகொண்டு, 15சமாதான நற்செய்தியை அறிவிப்பதற்கான தயார் நிலையை#6:15 சமாதான நற்செய்தியை அறிவிப்பதற்கான தயார் நிலையை – கிரேக்க மொழியில் நற்செய்தியின் தயார் நிலையை என்றுள்ளது. உங்கள் காலணியாக அணிந்துகொள்ளுங்கள். 16இவை அனைத்துடன், விசுவாசத்தை கேடயமாக எடுத்துக்கொள்ளுங்கள். அதைக்கொண்டே, தீயவன்#6:16 தீயவன் – இது பிசாசானவனைக் குறிக்கின்றது. எய்கின்ற நெருப்பு அம்புகளை உங்களால் அணைக்க முடியும். 17இரட்சிப்பைத் தலைக் கவசமாக அணிந்துகொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவரால் தரப்பட்டிருக்கும் இறைவனுடைய வார்த்தையாகிய வாளை எடுத்துக்கொள்ளுங்கள்.
18நீங்கள் அனைத்து வேளைகளிலும் எல்லாவிதமான மன்றாடல்களையும் வேண்டுதல்களையும் பரிசுத்த ஆவியானவரால் மன்றாடுங்கள். இதை மனதில்கொண்டு, விழிப்புடன் இருங்கள். பரிசுத்தவான்கள் அனைவருக்காகவும் எப்போதும் மன்றாடுங்கள்.
19நான் செய்தி கொடுக்கும் போதெல்லாம் நற்செய்தியின் மறைபொருளை தைரியமாக எடுத்துக் கூற, இறைவன் எனக்கு வார்த்தைகளைத் தரும்படி எனக்காகவும் மன்றாடுங்கள். 20அந்த நற்செய்திக்காகவே நான் இப்போது சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கின்ற இறை அரசின் ஒரு பிரதிநிதியாக இருக்கின்றேன். பேச வேண்டியவிதத்தில் நான் அதைத் தைரியமாக அறிவிக்க எனக்காக மன்றாடுங்கள்.
இறுதி வாழ்த்துரை
21நமது அன்பு சகோதரனும், கர்த்தருடைய ஊழியத்தில் உண்மையுள்ள ஊழியக்காரனுமான தீகிக்கு, என்னைப் பற்றிய எல்லாவற்றையும் உங்களுக்குத் தெரிவிப்பான். ஆகவே, நான் எப்படியிருக்கிறேன் என்றும் என்ன செய்கின்றேன் என்றும் நீங்கள் அறிந்துகொள்ளலாம். 22நாங்கள் எப்படியிருக்கிறோம் என்பதை உங்களுக்குச் சொல்லி, உங்கள் உள்ளங்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்திற்காகவே அவனை உங்களிடம் அனுப்புகிறேன்.
23பிதாவாகிய இறைவனிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும், விசுவாசத்தோடு இணைந்த அன்பும் சமாதானமும் சகோதரர் அனைவருக்கும் உரித்தாகட்டும்.
24நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அழியாத அன்புடன் நேசிக்கும் அனைவருடனும் கிருபை இருப்பதாக.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
எபேசியர் 6: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.