எபேசியர் 5

5
1ஆகவே, நீங்கள் இறைவனுடைய அன்பான பிள்ளைகளாய் இருப்பதனால், அவருடைய மாதிரியைப் பின்பற்றுங்கள். 2கிறிஸ்து நம்மில் அன்பாயிருந்து, இறைவனுக்கு நறுமணமுள்ள காணிக்கையாகவும் பலியாகவும் நமக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தார். அதுபோல நீங்களும் அன்புள்ள வாழ்க்கை வாழுங்கள்.
3பாலியல் ஒழுக்கக்கேடோ, எந்தவிதமான அசுத்தமோ, பேராசையோ எதைக் குறித்தும் உங்களுக்குள் ஒரு பேச்சும் அடிபடக் கூடாது. இப்படியாக பேசாமல் இருப்பதே இறைவனுடைய பரிசுத்த மக்களுக்கு ஏற்றது. 4அதேபோல, வெட்கக்கேடான செயலும், மூடத்தனமான பேச்சுக்களும், கீழ்த்தரமான கேலிப் பேச்சுக்களும் உங்களுக்கு ஏற்றதல்ல. இறைவனுக்கு நன்றி செலுத்துவதே ஏற்றது. 5ஒழுக்கக்கேடாய் நடக்கின்றவனோ, தூய்மையற்றவனோ, சிலை வணக்கம் செய்பவனுக்கு ஒப்பாயிருக்கிற பேராசைக்காரனோ கிறிஸ்துவுக்கும் இறைவனுக்கும் உரிய அரசின் சொத்துரிமையில் எவ்வித பங்கும் பெறுவதில்லை; இதை நிச்சயமாய் அறிந்துகொள்ளுங்கள். 6வீண் வார்த்தைகளினால் ஒருவரும் உங்களை ஏமாற்ற இடமளிக்காதீர்கள். இதன் காரணமாகவே, கீழ்ப்படியாதவர்கள்மீது இறைவனுடைய தண்டனை வருகின்றது. 7எனவே, இப்படிப்பட்டவர்களோடு பங்காளிகளாய் இருக்க வேண்டாம்.
8ஏனெனில் ஒரு காலத்தில் நீங்கள் இருளாய் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுதோ கர்த்தரில் வெளிச்சமாய் இருக்கின்றீர்கள். எனவே, வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழுங்கள். 9(எல்லா நன்மையும் நீதியும் உண்மையும் வெளிச்சத்தின் கனியாக இருக்கின்றன) 10எனவே, கர்த்தரை சந்தோஷப்படுத்துவது எது என்பதை ஆராய்ந்து அறிந்துகொள்ளுங்கள். 11இருளின் பலனற்ற செயல்களில் பங்காளிகளாய் இருக்க வேண்டாம். மாறாக அவைகளை பகிரங்கப்படுத்துங்கள். 12ஏனெனில், கீழ்ப்படியாதவர்கள் இரகசியமாக செய்கின்ற காரியங்களைக் குறித்து சொல்வதற்குக்கூட வெட்கமாக இருக்கின்றது. 13வெளிச்சத்தினால் உண்மை நிலை பகிரங்கமாகும்போது யாவும் வெளிப்படை ஆகின்றன. 14ஏனெனில் தெளிவாய் வெளிப்படுத்தப்படுவதே வெளிச்சம். அதனால்தான்,
“நித்திரை செய்பவனே விழித்தெழு,
இறந்தவர்களைவிட்டு உயிர்த்தெழு,
கிறிஸ்து உன்மேல் பிரகாசிப்பார்”
என சொல்லப்பட்டுள்ளது.
15எனவே நீங்கள் எப்படி வாழ்கின்றீர்கள் என்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். ஞானமற்றவர்களைப் போல் வாழாமல், ஞானமுள்ளவர்களாய் வாழுங்கள். 16நாட்கள் தீயதாக இருப்பதனால் கிடைக்கும் காலத்தை மிகவும் பயனுள்ளவிதத்தில் செலவிடுங்கள். 17அதனால், மதியற்றவர்களாய் நடக்காமல் அதற்குப் பதிலாக கர்த்தரின் விருப்பம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 18மதுபானம் குடித்து வெறிகொள்ள வேண்டாம், அது சீர்கேட்டிற்கே வழிநடத்தும். மாறாக பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, 19சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஆவிக்குரிய பாடல்களினாலும் ஒருவரோடு ஒருவர் பேசி, உங்கள் உள்ளத்திலே இசைபாடி கர்த்தரைப் போற்றுங்கள். 20நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் எப்போதும் எல்லாவற்றுக்காகவும் பிதாவாகிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
கிறிஸ்தவ குடும்பங்களுக்கான அறிவுரைகள்
21கிறிஸ்துவில் உங்களுக்கிருக்கும் பயபக்தியின் காரணமாக ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்.
22எனவே மனைவியரே, ஆண்டவருக்கு பணிந்திருப்பது போல, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். 23ஏனெனில், கிறிஸ்து தமது உடலாகிய திருச்சபையின் தலைவராய் இருப்பது போல, கணவன் தனது மனைவியின் தலைவனாய் இருக்கின்றான். கிறிஸ்துவே தமது திருச்சபையின் இரட்சகராகவும் இருக்கின்றார். 24அப்படியே, திருச்சபையானது கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பது போல, மனைவியரும் தங்கள் கணவருக்கு எல்லாவற்றிலும் பணிந்திருக்க வேண்டும்.
25கிறிஸ்து திருச்சபை மீது அன்பு காட்டி அதற்காகத் தம்மை ஒப்புக்கொடுத்தது போல், கணவர்களே நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பாய் இருங்கள். 26திருச்சபையை வார்த்தையைக் கொண்டு தண்ணீரால் கழுவிச் சுத்திகரித்து, அதைப் பரிசுத்தம் ஆக்கும்படியாகவே அவர் தம்மை ஒப்புக்கொடுத்தார். 27எவ்வித கறையோ, சுருக்கமோ,#5:27 கறையோ, சுருக்கமோ – இது நமது சருமத்தில் அல்லது உடையில் காணப்படும் கறை மற்றும் சுருக்கம் என்றும் அர்த்தம்கொள்ளலாம். வேறு எவ்வித குறையோ இல்லாமல் பரிசுத்தமும், குற்றமற்றதும், மகிமையானதுமான திருச்சபையாக அதைத் தம் முன் நிறுத்தவே தம்மை அதற்காக ஒப்புக்கொடுத்தார். 28இதேவிதமாக, கணவர்களும் தங்கள் சொந்த உடல் மீது அன்பு காட்டுவது போல் தங்கள் மனைவியர் மீது அன்பு காட்ட வேண்டும். தன் மனைவி மீது அன்பாயிருக்கின்றவன் தன்மீது அன்பாயிருக்கிறான். 29எவனும் தன் சொந்த உடலை ஒருபோதும் வெறுப்பதில்லை. மாறாக, தனது உடலுக்கு வேண்டியதைக் கொடுத்து அதைப் பராமரிப்பான். இதுபோலவே கிறிஸ்துவும் தமது திருச்சபையைப் பராமரிக்கிறார். 30நாமும் கிறிஸ்துவினுடைய உடலின் அங்கங்களாய் இருக்கின்றோம். 31“இக்காரணத்தினால் ஒருவன் தன் தந்தையையும் தாயையும்விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான், இருவரும் ஒரே உடலாக இருப்பார்கள்.”#5:31 ஆதி. 2:24 32இது மிகவும் ஆழ்ந்த இரகசியம், இதை தெளிவுபடுத்திச் சொல்கின்றேன். உண்மையில் இது கிறிஸ்துவையும் திருச்சபையையும்பற்றிக் குறிப்பிடுகிறது. 33எப்படி இருந்தாலும், ஒவ்வொருவரும் தன்மீது அன்பாயிருப்பது போல தன் மனைவி மீதும் அன்பாயிருக்க வேண்டும். மனைவியும் தன் கணவனை மதித்து நடக்க வேண்டும்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எபேசியர் 5: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்