எபேசியர் 4

4
கிறிஸ்துவின் உடலில் ஐக்கியம்
1ஆகையால் கர்த்தருக்காக கைதியாய் இருக்கின்ற நான் உங்களிடம் வேண்டிக்கொள்வதாவது: நீங்கள் இறைவனிடம் இருந்து பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ற தகுதியுடைய வாழ்க்கை வாழுங்கள். 2தாழ்மையும் சாந்தமும் நிறைந்தவர்களாய், பொறுமையுடன் அன்பினால் ஒருவர் மீது ஒருவர் சகிப்புத் தன்மையுடன் இருந்து, 3ஆவியானவரால் தரப்பட்டிருக்கும் ஒருமைப்பாட்டை சமாதானத்தின் பிணைப்பினாலே காத்துக்கொள்ள உங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்கின்றவர்களாக வாழுங்கள். 4நீங்கள் அழைக்கப்பட்டபோது ஒரே எதிர்பார்ப்பிற்கே அழைக்கப்பட்டது போல ஒரே உடலும் ஒரே ஆவியானவரும் உண்டு. 5ஒரே கர்த்தரும் ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமுமே உண்டு. 6எல்லாருக்கும் தந்தையாய் இருக்கின்றவரான ஒரே இறைவனும் இருக்கின்றார், அவர் எல்லோருக்கும் மேலாக இருந்து எல்லோரோடும் எல்லோருக்குள்ளும் செயலாற்றுகின்றவர்.
7ஆனாலும் நம் ஒவ்வொருவருக்கும் அருளப்பட்டுள்ள கிருபை வரங்களோ, கிறிஸ்துவின் கொடைக்கு ஏற்ற அளவின்படி அருளப்பட்டுள்ளன. 8அதனால்தான்:
“அவர் மேலெழுந்து போனபோது,
அநேகரைச் சிறைப்பிடித்து கைதிகளாகத் தம்முடன் கொண்டுசென்றார்.
மனிதருக்கு அவர் வரங்களையும் கொடுத்தார்”#4:8 சங். 68:18
என்று சொல்லப்பட்டிருக்கிறது.
9“அவர் மேலெழுந்து போனார்” என்றால், அதற்கு முன் அவர் பூமியின் தாழ்வான இடங்களுக்கு இறங்கினார் என்பது அர்த்தமாகிறது அல்லவா? 10கீழே இறங்கிச் சென்றவரே பிரபஞ்சம் முழுவதையும் நிரப்பும் பொருட்டு எல்லா வானங்களுக்கும் மேலாக எழுந்து சென்றார். 11அவர் சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரை இறைவாக்கினர்களாகவும், சிலரை நற்செய்தியாளர்களாகவும், இன்னும் சிலரை மேய்ப்பர்களாகவும், இறை ஆசிரியர்களாகவும் திருச்சபைக்கு ஒப்புவித்தார். 12ஏனெனில், ஊழியத்தின் பணிகளைச் செய்வதற்கு இறைவனுடைய மக்களை ஆயத்தப்படுத்துவதன் ஊடாக, கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையைக் கட்டியெழுப்புவதே அவரது நோக்கமாயிருந்தது. 13இவ்விதமாக நாம் எல்லோரும் இறைவனுடைய மகனைப் பற்றிய அறிவிலும் விசுவாசத்திலும் ஒருமனப்பட்டு, கிறிஸ்துவினுடைய முழுநிறைவான வளர்ச்சியின் அளவைப் பெற்ற முதிர்ச்சியடைந்த மனிதராக வேண்டும் என்பதே அந்த நோக்கத்தின் முடிவாயிருக்கிறது.
14அப்போது, நாம் தொடர்ந்தும் குழந்தைகளைப் போல் இருக்க மாட்டோம். அலைகளினால் அங்கும் இங்கும் அடித்துச் செல்லப்படுவது போல், வெவ்வேறு போதனைகளாகிய காற்றினாலோ, மனிதரின் தந்திரமும் கபடமும் உள்ள ஏமாற்றும் சூழ்ச்சியினாலோ அலைக்கழிக்கப்பட மாட்டோம். 15மாறாக, அன்புடனே உண்மையைப் பேசுகின்றவர்களாய், நம் தலைவராயிருக்கின்ற கிறிஸ்துவுக்குள் எல்லா வகையிலும் வளர்ச்சியடைவோம். 16அவராலேயே முழு உடலும் மூட்டுகளினால் ஒன்றாக இணைக்கப்பட்டு, அங்கங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்குக் குறிக்கப்பட்ட வேலையைச் செய்வதால் முழு உடலும் வளர்ச்சியடையும் விதமாக அன்பில் கட்டப்படுகிறது.
கிறிஸ்துவுக்குள்ளான புதிதாக்கப்பட்ட வாழ்வு
17எனவே, கர்த்தரில் இதை நான் வலியுறுத்திச் சொல்கின்றேன், நீங்கள் யூதரல்லாதவர்கள் வாழ்வது போல இனிமேல் வாழக் கூடாது, அவர்களது சிந்தனைகள் பயனற்றவை. 18அவர்களுடைய பிடிவாதமான இருதயத்தின் காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள அறிவீனத்தினால், அவர்களது சிந்தை புரிந்துகொள்ளும் தன்மை அற்றுப்போய் இருள் அடைந்துள்ளது. அவர்கள் இறைவன் தரும் வாழ்விலிருந்து தூர விலகி இருக்கின்றார்கள். 19அவர்கள் முற்றிலும் உணர்வற்றவர்களாகி, எல்லாவித அசுத்தமான செயல்களையும் ஆசை வெறியோடு செய்தவதற்காக தங்களை சிற்றின்பங்களுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.
20ஆனால் நீங்களோ கிறிஸ்துவைப்பற்றி இவ்விதமாக அறிந்துகொள்ளவில்லை. 21உண்மையில், நீங்கள் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டதும், போதிக்கப்பட்டதும் அவரில் இருக்கும் சத்தியத்திற்கு ஏற்பவே இருந்தது. 22உங்கள் முந்திய வாழ்க்கை முறையைப் பொறுத்தவரையில், அது வஞ்சித்து கெடுக்கின்ற இச்சைகளால் சீர்கெடுவதால் உங்கள் பழைய மனித சுபாவத்தைக் களைந்துவிட வேண்டும் எனப் போதிக்கப்பட்டீர்கள்; 23உங்கள் உள்ளத்தின் மனப்பான்மையில் நீங்கள் புதிதாக்கப்பட வேண்டும். 24இறைவனுடைய தன்மையைக் கொண்டதாக இருக்கும்படி, உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் உருவான புதிய மனிதனுக்குரிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.
25ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் பொய் சொல்வதைவிட்டு உங்கள் அயலவருடன் உண்மையையே பேச வேண்டும். ஏனெனில், நாம் எல்லோரும் ஒரே உடலின் அங்கத்தவர்களாய் இருக்கின்றோம். 26“நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்துவிட வேண்டாம்.”#4:26 சங். 4:4 பொழுது சாய்வதற்குள் உங்கள் கோபம் தணிய வேண்டும். 27பிசாசுக்கு ஒரு சந்தர்ப்பமும் கொடுக்க வேண்டாம். 28திருடன் இனி திருடக் கூடாது. மாறாக, அவன் தனது கைகளினால் பயனுள்ள வேலையைச் செய்து உழைத்து, தேவை உள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
29தீமையான வார்த்தைகள் எதுவும் உங்கள் வாயிலிருந்து வெளியே வர வேண்டாம். மாறாக, கேட்பவர்கள் பயனடையும்படி அவர்களது தேவைக்கு ஏற்றவாறு, அவர்கள் வளர்ச்சியடைய உதவும் வார்த்தைகளையே பேசுங்கள். 30அத்துடன் இறைவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துயரப்படுத்தாமல் இருங்கள், உங்கள் மீட்பின் நாளுக்காக அவரால் நீங்கள் முத்திரை இடப்பட்டுள்ளீர்கள். 31எல்லாவிதமான மனக்கசப்பு, சினம், கோபம், வாய்த் தர்க்கம், அவதூறான பேச்சு மற்றும் எல்லாவிதமான தீமையையும் விட்டுவிடுங்கள். 32ஒருவரில் ஒருவர் தயவுள்ளவர்களாயும் மன உருக்கமுள்ளவர்களாயும் இருங்கள். கிறிஸ்துவில் இறைவன் உங்களை மன்னித்தது போல, நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எபேசியர் 4: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்