எபேசியர் 3
3
யூதரல்லாதவர்களின் பிரசங்கியான பவுல்
1இதன் காரணமாகவே, யூதரல்லாத உங்களுக்காக பவுலாகிய நான் கிறிஸ்து இயேசுவின் கைதியாய் இருக்கின்றேன்.
2இறைவனின் கிருபையை உங்களுக்குக் கொண்டுவரும் பொறுப்பான வேலை எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் நிச்சயமாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 3முன்பு நான் சுருக்கமாய் எழுதியதைப் போலவே இந்த மறைபொருளானது வெளிப்படுத்தலின் மூலமாக எனக்குத் தெரியப்படுத்தப்பட்டது. 4இதை வாசிக்கும்போது கிறிஸ்துவினுடைய மறைபொருளைக் குறித்து நான் பெற்றுள்ள நுண்ணறிவை நீங்களும் புரிந்துகொள்வீர்கள். 5இந்த மறைபொருள் இறைவனின் பரிசுத்த அப்போஸ்தலர்களுக்கும், இறைவாக்கினர்களுக்கும் பரிசுத்த ஆவியானவராலே இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது போல முன்னிருந்த தலைமுறையினருக்கு வெளிப்படுத்தப்படவில்லை. 6நற்செய்தியின் ஊடாக, இஸ்ரயேல் மக்களைப் போன்றே யூதரல்லாத மக்களும் இறைவனின் உரிமைச் சொத்தில் கூட்டு வாரிசுகளாகவும், அவர்களோடு ஒரே உடலின் சக அங்கத்தினர்களாகவும், இயேசு கிறிஸ்துவுக்குள் இறைவனின் வாக்குறுதியில் ஒன்றிணைந்து பங்குகொள்கிறவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதே இந்த மறைபொருள்.
7இறைவனுடைய வல்லமை எனக்குள் செயலாற்றுவதன் மூலமாக எனக்குக் கொடுக்கப்பட்ட அவரது கிருபையின் கொடையினால் நான் இந்த நற்செய்தியின் ஊழியனானேன். 8இறைவனுடைய எல்லா மக்களையும்விட நான் குறைவானவனாக இருந்தும், கிறிஸ்துவின் அளவற்ற நிறைவைக் குறித்து யூதரல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்க இந்தக் கிருபை எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 9மேலும், எல்லாவற்றையும் படைத்த இறைவனால் காலங்காலமாக மறைவாய் வைக்கப்பட்டிருந்த இந்த மறைபொருளின் திட்டத்தை எல்லோருக்கும் தெளிவுபடுத்தவும் இந்த ஊழியம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. 10இறைவனின் பலதரப்பட்ட ஞானத்தை, வான மண்டலங்களில் ஆளுகை செய்பவர்களுக்கும் அதிகாரங்களுக்கும் திருச்சபையின் மூலமாய் தெரியப்படுத்த வேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும். 11இவ்விதமாக அவர் தமது நித்திய நோக்கத்தை நமது ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் நிறைவேற்றினார். 12கிறிஸ்து இயேசுவில் நமக்கிருக்கும் விசுவாசத்தினாலே, அவர் மூலமாக துணிச்சலுடனும் நம்பிக்கையுடனும் இறைவனை நாம் அணுக முடிகின்றது. 13எனவே உங்களுக்காக நான் அனுபவிக்கின்ற கஷ்டங்களே உங்களது பெருமையாய் இருப்பதனால், அவற்றைக் குறித்து நீங்கள் மனச்சோர்வு அடைய வேண்டாம் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
எபேசியருக்கான மன்றாடல்
14இந்தக் காரணத்துக்காக, பிதாவுக்கு முன்பாக முழந்தாழிட்டு மன்றாடுகிறேன். 15பரலோகத்திலும் பூமியிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவரது வழித்தோன்றல்களாய் அவரிடமிருந்து தம் பெயரைப் பெறுகின்றன. 16விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்து உங்கள் இருதயங்களில் குடியிருக்கும்படி, இறைவன் தமது மகிமையின் நிறைவிலிருந்து தமது ஆவியானவர் மூலமாக வல்லமையைத் தந்து, 17உங்கள் உள்ளார்ந்த மனிதனை உறுதியாகப் பலப்படுத்த வேண்டும் என்று அவரிடம் மன்றாடுகிறேன். இதனால் நீங்கள் அன்பிலே வேரூன்றியவர்களாகவும், அதில் அத்திவாரம் இடப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் மன்றாடுகிறேன். 18இவ்விதமாய் பரிசுத்தவான்கள் அனைவருடனும் சேர்ந்து, கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு அகலமானது, நீளமானது, உயரமானது, ஆழமானது என்பதை விளங்கிக்கொள்ளும் வல்லமையை நீங்கள் பெற்றுக்கொண்டவர்களாக, 19அறிவாற்றல்கள் அனைத்துக்கும் அப்பாற்பட்ட கிறிஸ்துவின் அன்பை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் நீங்கள் இறைவனின் முழுநிறைவினால் முழுவதுமாய் நிரப்பப்பட வேண்டும் என்றும் மன்றாடுகிறேன்.
20நமக்குள் செயலாற்றுகின்ற தம்முடைய வல்லமையினால், நாம் கேட்பதையும் நினைப்பதையும்விட அளவுக்கு எட்டாதளவு அதிகமாகச் செய்ய வல்லமையுள்ள அவருக்கே, 21திருச்சபையில் கிறிஸ்து இயேசுவின் மூலமாக தலைமுறை தலைமுறை தோறும் என்றென்றுமாய் மகிமை உண்டாவதாக. ஆமென்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
எபேசியர் 3: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.