அப்போஸ்தலருடைய நடபடிகள் 24

24
பேலிக்ஸின் முன் பவுல்
1ஐந்து நாட்களுக்குப் பின்னர், தலைமை மதகுரு அனனியாவும், சமூகத் தலைவரில் சிலரும், தெர்த்துல்லு என்னும் பெயருடைய வழக்கறிஞனும் செசரியாவுக்குப் போனார்கள். அங்கே அவர்கள் பவுலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆளுநருக்கு முன் வைத்தார்கள். 2பவுல் அழைத்து வரப்பட்டபோது வழக்கறிஞனாகிய தெர்த்துல்லு, ஆளுநர் பேலிக்ஸின் முன்பாக தன் வழக்கை எடுத்துரைத்தான்: “மாண்புமிகு ஆளுநர் அவர்களே, உங்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலமாக நாங்கள் சமாதானத்தை அனுபவித்து வருகின்றோம், உங்களுடைய முன்நோக்குள்ள நடவடிக்கையால் இந்த நாட்டில் பல சீர்திருத்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 3எல்லா இடங்களிலும், எல்லாவிதத்திலேயும் இதை நாங்கள் மிகுந்த நன்றியுடன் ஏற்றுக்கொள்கின்றோம். 4நான் உங்களுடைய அதிக நேரத்தை விரயமாக்காமல் சுருக்கமாக சொல்கின்றேன். எனவே நான் சொல்வதைத் தயவாய் கேட்கும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
5“இந்த மனிதன் குழப்பம் விளைவிக்கின்றவனாய் இருப்பதை நாங்கள் கண்டோம்; உலகம் முழுவதிலுமுள்ள யூதர்கள் வாழுமிடங்களில் எல்லாம் இவன் கலவரங்களை தூண்டிவிடுகிறான். இவனே நசரேய மதப்பிரிவினரின் தலைவனாயிருக்கிறான். 6அத்துடன் எருசலேம் ஆலயத்தையும் தூய்மைக்கேடாக்க முயன்றான். அதனால் எங்கள் நீதிச்சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கவே, நாங்கள் இவனைப் பிடித்தோம். 7ஆனால் படைத்தளபதி லீசியா வந்து பலவந்தமாக இவனை எங்கள் கைகளிலிருந்து இழுத்துக் கொண்டுபோய், 8இவன்மேல் குற்றம் சாட்டுகின்றவர்களை உங்களுக்கு முன் வரும்படி கட்டளையிட்டான். நீங்களே இவனை நேரடியாக விசாரிப்பதன் மூலமாக நாங்கள் இவனுக்கு எதிராகக் கொண்டுவரும் எல்லாக் குற்றச்சாட்டுக்களைப் பற்றியும் இவனிடமிருந்தே நீங்கள் விசாரித்து அறிந்துகொள்வீர்கள்.”#24:8 சில பிரதிகளில் 7 ஆம் வசனமும் 8 ஆம் வசனத்தின் முற்பகுதியும் காணப்படுவதில்லை.
9தெர்த்துல்லுவுடன் வந்திருந்த யூதர்களும் தொடர்ந்து அதே குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவனது குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தினார்கள்.
10பவுல் பதிலளிக்கும்படி ஆளுநர் சைகை காட்டியபோது பவுல் சொன்னதாவது: “நீங்கள் பல வருடங்களாக இந்த நாட்டின் மேல் நீதிபதியாய் இருக்கின்ற அனுபவம் வாய்ந்த ஒருவர் என்று நான் அறிவேன். எனவே நான் மகிழ்ச்சியுடனே எனது சார்பாய் எனது எதிர்த்தரப்பு வாதத்தை முன்வைக்கின்றேன். 11நான் வழிபாடு செய்வதற்காக எருசலேமுக்கு சென்ற நாளிலிருந்து இன்றுவரை பன்னிரண்டு நாட்கள் ஆகவில்லை என்பதனை இலகுவாக நீங்கள் விசாரித்து அறிந்துகொள்வீர்கள். 12நான் ஆலயத்திலே எவருடனும் விவாதம் செய்ததையோ, ஜெபஆலயங்களிலோ, பட்டணத்தின் வேறு இடங்களிலோ மக்களைக் கலவரம் செய்யத் தூண்டியதையோ என்னைக் குற்றம் சாட்டுகின்றவர்கள் கண்டறிந்ததில்லை. 13இவர்கள் இப்போது எனக்கு எதிராகக் கொண்டுவந்த குற்றச்சாட்டுக்களை உங்களுக்கு முன்னால் நிரூபிக்கவும் இவர்களால் முடியாது. 14ஆயினும் பிழையான மதப்பிரிவினை மார்க்கம் என்று இவர்கள் கருதுகின்ற கிறிஸ்துவின் மார்க்கத்தைப்#24:14 மார்க்கம் – 14, 22 ஆகிய வசனங்களில் காணப்படும் இச் சொல்லானது கிரேக்க மொழியில் வழி என்று குறிக்கப்பட்டுள்ளது இது கிறிஸ்துவின் மார்க்கத்தை குறிக்கின்றது. பின்பற்றி, எங்கள் முற்பிதாக்களின் இறைவனை நான் வழிபடுகின்றேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். யூதர்களின் நீதிச்சட்டத்தில் கூறப்பட்டவற்றுடன், இறைவாக்கினரின் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் நானும் ஏற்றுக்கொள்கின்றேன். 15அவற்றின் அடிப்படையில், நீதிமான்களும் கொடியவர்களும் இறந்தோரிலிருந்து உயிர்த்தெழுவார்கள் என்ற இறைவனுக்குள்ளான நல் எதிர்பார்ப்பு, இவர்களைப் போலவே எனக்கும் இருக்கின்றது. 16அதனால்தான் இறைவனுக்கு முன்பாகவும், மனிதனுக்கு முன்பாகவும் என் மனசாட்சியைச் சுத்தமுள்ளதாகக் காத்துக்கொள்ள நான் எப்போதும் பிரயாசப்படுகிறேன்.
17“இப்பொழுது பல வருடங்களுக்குப் பின் என் மக்களிடம் திரும்பி வந்து, ஏழைகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்காகவும் காணிக்கைகளை செலுத்துவதற்காகவும் எருசலேமுக்கு சென்றேன். 18இதை நான் ஆலய முற்றத்தில் செய்துகொண்டிருக்கும் போதே இவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது நான் சம்பிரதாய முறைப்படி சுத்தமாகவே இருந்தேன். என்னுடன் மக்கள் கூட்டம் எதுவும் இருக்கவில்லை. எந்தவிதமான குழப்பத்திலும் நான் ஈடுபடவும் இல்லை. 19ஆனால் அச்சந்தர்ப்பத்தில் ஆசியா மாகாணத்திலிருந்து வந்திருந்த சில யூதர்கள் அங்கே இருந்தார்களல்லவா? அப்படி, எனக்கெதிராக அவர்களுக்கு ஏதாவது இருக்குமானால், அக்குற்றத்தை என்மேல் சுமத்துவதற்கு இங்கே உங்கள் முன்பாக அவர்கள் இருக்க வேண்டுமே. 20அப்படியில்லாவிட்டால், நான் யூதர்களின் நியாயசபையின் முன் நின்றபோது என்னிடம் என்ன குற்றத்தைக் கண்டார்கள் என்று இங்கிருக்கும் இவர்களே கூறட்டும். 21‘இறந்தவர்களின் உயிர்த்தெழுதல் இடம்பெறும் என்பதைப்பற்றியே இன்று நான் உங்களுக்கு முன்பாக விசாரணை செய்யப்படுகின்றேன்’ என்று நான் அவர்கள் முன்பாக நின்றபோது அன்று சத்தமிட்டுச் சொன்னேன். அதை மாத்திரமே அவர்கள் எனக்கெதிராகக் கொண்டுவரலாம்” என்று பவுல் சொல்லி முடித்தான்.
22அப்போது கிறிஸ்துவின் மார்க்கத்தை நன்கு நுணுக்கமாக அறிந்திருந்த பேலிக்ஸ், “படைத்தளபதி லீசியா வரும்போது உங்கள் வழக்கிற்குத் தீர்ப்பு கூறுவேன்” என்று சொல்லி, விசாரணையை ஒத்தி வைத்தான். 23அத்துடன் பவுலைக் காவலில் வைக்கும்படியாகவும், ஆனாலும் அவனுக்கு ஓரளவு சுதந்திரம் கொடுக்கும்படியாகவும், அவனுடைய தேவைகளைக் கொடுத்து உதவுவதற்கு அவனது நண்பர்களை அனுமதிக்கும்படியாகவும் நூற்றுக்குத் தளபதிக்கு பேலிக்ஸ் உத்தரவிட்டான்.
24சில நாட்களுக்குப் பின்பு, பவுல் பேசுவதைக் கேட்பதற்காக யூதப் பெண்ணான தன் மனைவி துருசில்லாளுடன் பேலிக்ஸ் வந்தான். அவன் பவுலை அழைத்து வரச்சொல்லி, கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தைக் குறித்து பவுல் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். 25ஆனால் பவுலோ நீதியையும், தன்னடக்கத்தையும், வரப்போகும் நியாயத்தீர்ப்பையும் குறித்துப் பேசியபோது பேலிக்ஸ் பயமடைந்தான். அவன் பவுலிடம், “இப்போதைக்கு இதுபோதும்! நீ போகலாம். வசதியான நேரம் கிடைக்கும்போது, நான் உன்னைத் திரும்பவும் கூப்பிடுவேன்” என்றான். 26அதேவேளை, பவுல் தனக்கு இலஞ்சம் கொடுப்பான் என்று அவன் எதிர்பார்த்து, பவுலை அடிக்கடி வரவழைத்து அவனிடம் பேசினான்.
27இரண்டு வருடங்கள் கடந்த பின், பேலிக்ஸின் இடத்தில் பொர்க்கியு பெஸ்து என்பவன் பதவிக்கு வந்தான். ஆயினும் பேலிக்ஸ் யூதருக்குத் தயவு காட்ட விரும்பி, பவுலை சிறையிலே விட்டுச் சென்றான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்