அப்போஸ்தலருடைய நடபடிகள் 23

23
1பவுல் நியாயசபையில் உள்ளவர்களை நேருக்கு நேராகப் பார்த்து, “சகோதரரே, இன்றுவரை ஒரு நல்ல மனசாட்சியுடனே நான் இறைவனுக்கு முன்பாக எனது வாழ்க்கையை வாழ்ந்துள்ளேன்” என்றான் 2அப்போது, தலைமை மதகுருவான அனனியா, பவுலின் அருகில் நின்றவர்களைப் பார்த்து, அவனுடைய வாயிலே அடிக்கும்படி உத்தரவிட்டான். 3அப்போது பவுல் அவனிடம், “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே! இறைவன் உம்மை அடிப்பார். நீதிச்சட்டத்தின்படி என்னை நியாயம் விசாரிப்பதற்கு நீர் அங்கே உட்கார்ந்திருக்கிறீர். ஆயினும் என்னை அடிக்கும்படி கட்டளையிட்டு, நீரே நீதிச்சட்டத்தை மீறுகிறீரே!” என்றான்.
4அப்போது பவுலின் அருகே நின்றவர்கள், “இறைவனுடைய தலைமை மதகுருவை அவமதிக்கத் துணிகிறாயா?” என்றார்கள்.
5அதற்குப் பவுல், “சகோதரரே, அவர் தலைமை மதகுரு என்று எனக்குத் தெரியாது; ஏனெனில், ‘உங்கள் மக்களின் ஆளுநரைக் குறித்துத் தீமையாய்ப் பேச வேண்டாம்’ என்று எழுதியிருக்கிறதே”#23:5 யாத். 22:28 என்றான்.
6பின்பு பவுல், அவர்களில் சிலர் சதுசேயர் என்றும் மற்றவர்கள் பரிசேயர் என்றும் அறிந்து, நியாயசபையில் உள்ளவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “என் சகோதரரே, நான் ஒரு பரிசேயன், ஒரு பரிசேயனுடைய மகன். இறந்தவர்களின் உயிர்த்தெழுதல் இடம்பெறும் என்ற எனது எதிர்பார்ப்பின் காரணமாகவே, நான் இங்கு விசாரிக்கப்படும்படி நிற்கிறேன்” என்றான். 7அவன் இதைச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையில் விவாதம் மூண்டது. அங்கு கூடியிருந்தவர்களுக்குள்ளே ஒரு பிரிவினை ஏற்பட்டது. 8ஏனெனில் சதுசேயர், இறந்தவர் உயிர்த்தெழுவதில்லை என்றும் இறைதூதர்கள், ஆவிகள் என்று எதுவுமில்லையென்றும் சொல்பவர்கள். ஆனால் பரிசேயரோ, இவைகளெல்லாம் உண்டென்று ஏற்றுக்கொண்டவர்கள்.
9அங்கு ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டது. பரிசேயராய் இருந்த சில நீதிச்சட்ட ஆசிரியர்கள் எழுந்து நின்று மிகக் கடுமையாக விவாதித்தார்கள். அவர்கள், “இவனிடத்தில் நாங்கள் குற்றம் எதையும் காணவில்லை. ஒருவேளை ஒரு ஆவியோ, ஒரு இறைதூதனோ அவனுடனே பேசியிருக்கலாம்” என்றார்கள். 10அவர்களின் விவாதம் வன்முறையாக மாறியபோது, பவுலை அவர்கள் சின்னாபின்னமாக்கி விடுவார்களோ என்று தளபதி பயந்தான். அவன் அவர்களிடமிருந்து பவுலை விடுவித்து முகாமுக்குக் கொண்டுவரும்படி இராணுவ வீரருக்கு உத்தரவிட்டான்.
11மறுநாள் இரவு ஆண்டவர், பவுலின் அருகே நின்று, “நீ தைரியமாய் இரு! நீ எருசலேமில் என்னைக் குறித்து சாட்சி கொடுத்தது போல், ரோம் நகரத்திலும் சாட்சி கொடுக்க வேண்டும்” என்றார்.
பவுலைக் கொலை செய்யச் சூழ்ச்சி
12மறுநாள், சில யூதர்கள் காலையிலேயே ஒன்றுகூடி பவுலைக் கொன்றுவிட சூழ்ச்சி செய்தார்கள். தாங்கள் அதை நிறைவேற்றும் வரை சாப்பிடுவதோ குடிப்பதோ இல்லை என்றும், அதை நிறைவேற்றாவிடில் அது தங்களுக்கு சாபமாய் அமைவதாக என்றும் பொருத்தனை செய்துகொண்டார்கள். 13நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டார்கள். 14அவர்கள் தலைமை மதகுருக்களிடமும், சமூகத் தலைவர்களிடமும் சென்று, “நாங்கள் பவுலைக் கொலை செய்யும் வரை, எதையும் சாப்பிடுவதில்லை என்று பொருத்தனை செய்திருக்கின்றோம். 15இப்போது நீங்களும், நியாயசபையைச் சேர்ந்தவர்களும் பவுலின் வழக்கை இன்னும் தெளிவாய் விசாரிக்கப் போவதாகக் காண்பித்து, அவனை உங்களுக்கு முன்பாகக் கொண்டுவரும்படி படைத்தளபதியிடம் மனுச் செய்யுங்கள். அவன் இங்கே வருவதற்கு முன்பதாக, அவனைக் கொன்றுவிட நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம்” என்றார்கள்.
16ஆனால் பவுலின் சகோதரியின் மகன் இந்தச் சூழ்ச்சியைக் குறித்துக் கேள்விப்பட்டு, முகாமுக்குள் போய் இதைப் பவுலுக்குச் சொன்னான்.
17அப்போது பவுல் நூற்றுக்குத் தளபதிகளில் ஒருவனை அழைத்து, “இந்த வாலிபனை படைத்தளபதியிடம் அழைத்துக்கொண்டு போ. இவன் தளபதியிடம் ஏதோவொன்றை அறிவிக்க வேண்டி இருக்கின்றது” என்றான். 18அப்படியே அவன் அந்த வாலிபனை படைத்தளபதியிடம் அழைத்துக்கொண்டு சென்றான்.
அந்த நூற்றுக்குத் தளபதி, படைத்தளபதியிடம், “சிறைக் கைதியாய் இருக்கின்ற பவுல் என்னை ஆளனுப்பி அழைப்பித்து, இந்த வாலிபனை உங்களிடம் அழைத்துக்கொண்டு போகும்படி கேட்டுக்கொண்டான். ஏனென்றால், உங்களிடம் சொல்ல ஏதோவொன்று இவனிடம் இருக்கின்றதாம்” என்றான்.
19படைத்தளபதி அந்த வாலிபனின் கையைப் பிடித்து, ஒரு பக்கமாய் அழைத்துச் சென்று, “நீ எனக்கு சொல்ல விரும்புவது என்ன?” என்று கேட்டான்.
20அதற்கு அவன், “பவுலைக் குறித்து இன்னும் அதிக தெளிவாய் விசாரணை செய்யப் போவதாகக் காண்பித்து, அவரை நியாயசபையின் முன்பாக நாளைக்குக் கொண்டுவர வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்வதற்கு யூதர்கள் இணங்கியிருக்கின்றார்கள். 21ஆனால், நீங்கள் அவர்களுக்கு சம்மதிக்க வேண்டாம். ஏனெனில் அவர்களில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் பவுலை வழியில் கொலை செய்வதற்காக மறைந்திருக்கிறார்கள். அவரைக் கொலை செய்யும் வரை, தாங்கள் சாப்பிடுவதோ குடிப்பதோ இல்லையென்று அவர்கள் சபதம் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது ஆயத்தமாகி அவர்களின் வேண்டுகோளுக்கு நீங்கள் சம்மதிக்க வேண்டுமென்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றான்.
22படைத்தளபதி, “இதை நீ எனக்கு அறிவித்ததைப்பற்றி ஒருவருக்கும் சொல்லாதே” என்று அந்த வாலிபனை எச்சரித்து அனுப்பினான்.
பவுல் செசரியாவுக்குக் கொண்டு செல்லப்படுதல்
23பின்பு படைத்தளபதி, தனக்குக் கீழுள்ள நூற்றுக்குத் தளபதிகள் இருவரை அழைத்து அவர்களுக்கு உத்தரவிட்டதாவது: “இன்று இரவு ஒன்பது மணிக்கு செசரியாவுக்குப் போவதற்கு இருநூறு இராணுவ வீரரையும், எழுபது குதிரை வீரரையும், இருநூறு ஈட்டி ஏந்தும் வீரரையும் கொண்ட ஒரு படைப்பிரிவை ஆயத்தமாக்குங்கள். 24ஆளுநர் பேலிக்ஸினிடம் பவுலை பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்கு ஏற்றபடி பவுலுக்கும் குதிரைகளை ஆயத்தமாக்குங்கள்.”
25அத்துடன் அந்த படைத்தளபதி ஒரு கடிதத்தை பின்வருமாறு எழுதினான்:
26கிலவுதியு லீசியா ஆகிய நான்,
மாண்புமிகு ஆளுநர் பேலிக்ஸ் அவர்களுக்கு எழுதுகின்றதாவது:
வாழ்த்துதல்கள்.
27இந்த மனிதன் யூதரால் பிடிக்கப்பட்டிருந்தான். அவர்கள் இவனைக் கொலை செய்ய முயற்சிக்கையில், இவன் ஒரு ரோம குடிமகன் என்று அறிந்து எனது இராணுவ வீரருடன் சென்று நான் இவனைக் காப்பாற்றினேன். 28அவர்கள் இவனைக் குற்றம் சாட்டுவது ஏன் என்று அறிய விரும்பி, நான் இவனை அவர்களுடைய நியாயசபைக்கு முன்பாகக் கொண்டுவந்தேன். 29அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டு, அவர்களது சமய நீதிச்சட்டம் சம்பந்தப்பட்டதாகவே இருந்தது. அவை மரணதண்டனைக்கோ, சிறைத்தண்டனைக்கோ உரிய குற்றச்சாட்டாய் இருக்கவில்லை. 30கொலை முயற்சி சூழ்ச்சியொன்று இவனுக்கெதிராக செய்யப்படுவதாக எனக்கு அறிவிக்கப்பட்டபோது, உடனே நான் இவனை உம்மிடத்திற்கு அனுப்பினேன். அத்துடன், இவனைக் குற்றம் சாட்டியவர்களிடம், இவனுக்கு விரோதமான தங்களது வழக்கை உம்மிடம் கொண்டுவரும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.
31இராணுவ வீரர்களும் தங்களுக்கு இடப்பட்ட உத்தரவின்படியே, பவுலைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு பயணமாகி, அன்றிரவே அந்திப்பத்திரி பட்டணத்தைச் சென்றடைந்தார்கள். 32மறுநாள் குதிரை வீரரை அவனுடன் போகும்படி அனுப்பிவிட்டு மற்றவர்கள் தங்களது முகாமுக்குத் திரும்பினார்கள். 33குதிரை வீரர்கள் செசரியாவைச் சென்றடைந்தபோது, கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து பவுலையும் அவனிடம் ஒப்படைத்தார்கள். 34ஆளுநர் கடிதத்தை வாசித்துவிட்டு பவுல் எந்த மாகாணத்தைச் சேர்ந்தவன் என்று கேட்டான். அவன் சிலிசியாவைச் சேர்ந்தவன் என்று அறிந்து, 35பவுலிடம், “உன்னைக் குற்றம் சாட்டுகின்றவர்கள் இங்கே வரும்போது நான் உனது வழக்கை விசாரிப்பேன்” என்றான். பின்பு அவன் ஏரோதுவின் அரண்மனையில் பவுலைக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்