அப்போஸ்தலருடைய நடபடிகள் 10

10
பேதுருவை கொர்நேலியு அழைத்தல்
1செசரியாவில், கொர்நேலியு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான். அவன் இத்தாலியா படைப் பிரிவு எனப்பட்ட இராணுவப்படை அணியில் நூற்றுக்குத் தளபதியாய்#10:1 நூற்றுக்குத் தளபதி என்பது நூறு காலாட் படையினருக்கு தளபதி. இருந்தான். 2அவனும், அவன் குடும்பத்தவர்கள் எல்லோரும் பக்தியுள்ளவர்களும், இறைவனுக்குப் பயந்து நடக்கின்றவர்களுமாய் இருந்தார்கள். அவன் ஏழைகளுக்குத் தாராளமாய் கொடுக்கின்றவனாகவும், தவறாமல் எப்போதும் இறைவனிடம் மன்றாடுகின்றவனாகவும் இருந்தான். 3ஒரு நாள் பிற்பகல் மூன்று மணியளவில், அவனுக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. அதிலே இறைவனின் தூதன் ஒருவனை அவன் மிகத் தெளிவாகக் கண்டான். அந்தத் தூதன், “கொர்நேலியு!” என்றான்.
4கொர்நேலியு, பீதியடைந்தவனாய் அவனை உற்றுப் பார்த்து, “ஆண்டவரே இது என்ன?” என்றான்.
அதற்கு அத்தூதன், “உனது மன்றாடல்களும், ஏழைகளுக்கு நீ கொடுத்த நன்கொடைகளும் இறைவனுக்கு முன்பாக ஒரு நினைவுக் காணிக்கையாக வந்திருக்கின்றன. 5ஆகவே இப்போது சிலரை யோப்பாவுக்கு அனுப்பி பேதுரு என அழைக்கப்படுகின்ற சீமோன் என்னும் பெயருடைய ஒரு மனிதனை அழைத்து வரும்படி சொல். 6அவன் தோல் பதனிடும் சீமோனுடன் தங்கியிருக்கிறான், அவனுடைய வீடு கடலோரமாய் இருக்கின்றது” என்றான்.
7தன்னோடு பேசிய தூதன் போன பின்பு, கொர்நேலியு தனது பணியாட்களில் இருவரையும், தனது ஏவலாட்களில் ஒருவனான பக்தியுள்ள ஒரு இராணுவ வீரனையும் அழைத்தான். 8அவன் நடந்த எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொல்லி, அவர்களை யோப்பாவுக்கு அனுப்பினான்.
பேதுருவின் தரிசனம்
9அவர்கள் பயணம் செய்து, மறுநாள் ஏறத்தாழ மத்தியான வேளையில் யோப்பா பட்டணத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது பேதுரு, வீட்டின் மேல்பகுதிக்கு மன்றாடுவதற்காகச் சென்றான். 10அவனுக்குப் பசியாய் இருந்தது. அதனால் அவன் எதையாவது சாப்பிட விரும்பினான். ஆனால் உணவு தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், அவன் ஒரு பரவச நிலைக்குள்ளானான். 11அப்போது வானம் திறந்திருப்பதையும், பெரிய விரிப்புத் துணி போன்ற ஒன்று, அதன் நான்கு மூலைகளிலும் பிடித்து பூமியை நோக்கி இறக்கி விடப்படுவதையும் அவன் தரிசனமாகக் கண்டான். 12அதற்குள் பூமியிலுள்ள நான்கு கால் மிருகங்களும், ஊரும் பிராணிகளும், வானத்துப் பறவைகளும் இருந்தன. 13அப்போது ஒரு குரல், “பேதுரு, எழுந்திரு. கொன்று சாப்பிடு” என்று சொன்னது.
14அதற்குப் பேதுரு, “இல்லை ஆண்டவரே! நான் ஒருபோதும் தூய்மையற்றதும் அசுத்தமானதுமான எதையும் உண்டதில்லை#10:14 உண்டதில்லை – கிரேக்க மொழியில் என் வாய்க்குள்ளே ஒருபோதும் போனதில்லை என்றுள்ளது” என்றான்.
15இரண்டாவது முறையும் அந்தக் குரல் அவனுடன் பேசி, “இறைவன் சுத்தமாக்கியதைத் தூய்மையற்றது என்று நீ சொல்லாதே” என்றது.
16இவ்விதம் மூன்று முறை நடந்தன. பின்பு அந்த விரிப்புத் துணி சடுதியாக திரும்பவும் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
17பேதுரு இந்தத் தரிசனத்தின் அர்த்தத்தைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனிதர்கள் சீமோனுடைய வீட்டைத் தேடி வந்து, அதன் வாயிலில் நின்றார்கள். 18அவர்கள், “பேதுரு என அழைக்கப்படுகிற சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரோ?” என்று கூப்பிட்டுக் கேட்டார்கள்.
19பேதுரு இன்னும் அந்தத் தரிசனத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அவனிடம், “சீமோன், மூன்று மனிதர்கள் உன்னைத் தேடுகிறார்கள். 20எனவே நீ எழுந்து கீழே இறங்கிப் போ. நீ அவர்களுடன் போகத் தயங்காதே, ஏனெனில், நானே அவர்களை அனுப்பியிருக்கிறேன்” என்றார்.
21எனவே பேதுரு இறங்கிப் போய், “நீங்கள் தேடுகிற அந்த மனிதன் நான்தான். நீங்கள் ஏன் வந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டான்.
22அதற்கு அந்த மனிதர்கள், “நாங்கள் நூற்றுக்குத் தளபதியான கொர்நேலியுவிடமிருந்து வந்திருக்கிறோம். அவர் நீதிமானும் இறைவனுக்குப் பயந்து நடக்கின்றவருமான ஒருவர். அவர் யூத மக்கள் எல்லாரினதும் நன்மதிப்பைப் பெற்றவர். நீர் சொல்வதைக் கேட்கும்படி உம்மை அவர் தன்னுடைய வீட்டிற்கு அழைக்க வேண்டுமென்று ஒரு பரிசுத்த தூதன் அவருக்குச் சொல்லியிருக்கின்றார்” என்றார்கள். 23அப்போது பேதுரு, அவர்களைத் தனது விருந்தாளிகளாக வீட்டிற்குள் அழைத்தான்.
கொர்நேலியுவின் வீட்டில் பேதுரு
மறுநாள், பேதுரு அவர்களுடன் புறப்பட்டுச் சென்றான். யோப்பாவைச் சேர்ந்த சில சகோதரர்களும் அவர்களோடு போனார்கள். 24அடுத்த நாள் அவன் செசரியாவைச் சென்றடைந்தான். கொர்நேலியு அவர்களை எதிர்பார்த்து தனது உறவினர்களையும், நெருங்கிய நண்பர்களையும் ஒன்றுகூட்டி வைத்திருந்தான். 25பேதுரு வீட்டிற்குள் போனதும் கொர்நேலியு அவனைச் சந்தித்து, பயபக்தியுடன் அவனுடைய கால்களில் விழுந்தான். 26ஆனால், பேதுரு அவனை எழுந்திருக்கப் பண்ணி, “எழுந்திரு, நானும் ஒரு மனிதனே” என்றான்.
27பேதுரு அவனுடன் பேசிக்கொண்டு உள்ளே போனபோது அங்கே மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருந்ததைக் கண்டான். 28பேதுரு அவர்களிடம்: “யூதனொருவன் யூதரல்லாதவருடன் கூடிப் பழகுவதோ அல்லது அவர்களின் வீட்டிற்குப் போவதோ எங்கள் யூத நீதிச்சட்டத்திற்கு முரணானது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், நான் எவரையும் தூய்மையற்றவர் என்றோ, அசுத்தமானவர் என்றோ அழைக்கக் கூடாதென்று இறைவன் எனக்குக் காண்பித்திருக்கிறார். 29எனவேதான் நான் அழைக்கப்பட்டபோது, எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் இங்கே வந்தேன். என்னை எதற்காக அழைத்தீர்கள் என்று, நான் இப்போது தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்டான்.
30அப்போது கொர்நேலியு, “நான்கு நாட்களுக்கு முன்பு நான் எனது வீட்டிலே, மாலை மூன்று மணியளவில் இதே நேரத்தில் மன்றாடிக் கொண்டிருந்தேன். திடீரென்று பிரகாசிக்கின்ற உடைகள் உடுத்திய ஒரு மனிதன் எனக்கு முன்பாக நின்றான். 31அவன் என்னிடம், ‘கொர்நேலியுவே, இறைவன் உன் மன்றாடுதலையும், நீ ஏழைகளுக்குக் கொடுத்த நன்கொடைகளையும் நினைவிற் கொண்டார். 32பேதுரு என்று அழைக்கப்படும் சீமோனை அழைத்து வர, யோப்பாவுக்கு ஆட்களை அனுப்பு. அவன் கடலோரமாய் வாழுகின்ற தோல் பதனிடும் சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்’ என்றான். 33எனவேதான் உடனடியாக உம்மை அழைத்து வர நான் ஆட்களை அனுப்பினேன். நீங்களும் தயவுடன் வருகை தந்தது நல்லதே. கர்த்தர் எங்களுக்குச் சொல்லும்படி உமக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் கேட்கவே, இப்போது நாங்கள் எல்லோரும் இங்கே இறைவனுக்கு முன்பாக ஒன்றுகூடி வந்திருக்கிறோம்” என்றான்.
34அப்போது பேதுரு பேசத் தொடங்கினான்: “இறைவன் பக்கச்சார்பு உள்ளவர் அல்ல என்பது எவ்வளவு உண்மை என்பதை நான் இப்போது அறிந்திருக்கிறேன். 35எந்த நாட்டைச் சேர்ந்தவரானாலும், அவர்கள் இறைவனுக்குப் பயந்து சரியானதைச் செய்யும்போது அவர் அவர்களை ஏற்றுக்கொள்கின்றார். 36இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பிய செய்தியை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எல்லோருக்கும் ஆண்டவராயிருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் மூலமாய் சமாதானத்தின் நற்செய்தியை அவர் அறிவித்தார். 37யோவான் ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கித்த பின் கலிலேயா தொடங்கி யூதேயா முழுவதிலும் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். 38இறைவன் எவ்விதம் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவை பரிசுத்த ஆவியானவராலும், வல்லமையாலும் அபிஷேகம் செய்தார் என்பதையும், அவர் எவ்விதம் எங்கும் போய் நன்மை செய்தார் என்பதையும், இறைவன் தம்முடன் இருந்ததால் பிசாசின் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டிருந்த எல்லோரையும் அவர் குணமாக்கினார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
39“யூதருடைய நாட்டிலும், எருசலேமிலும் இயேசு கிறிஸ்து செய்த எல்லாவற்றுக்கும், நாங்கள் சாட்சிகளாய் இருக்கின்றோம். அவர்கள் இயேசுவை ஒரு சிலுவை மரத்தில்#10:39 சிலுவை – கிரேக்க மொழியில் மரத்தில் என்று உள்ளது. தொங்கவிட்டுக் கொலை செய்தார்கள். 40ஆனால் இறைவனோ மூன்றாம் நாளிலே அவரை இறந்தோரிலிருந்து எழுப்பி சிலருக்கு தென்படச் செய்தார். 41அவர் எல்லோருக்கும் தென்படவில்லை, ஆனால் இறைவனால் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்ட சாட்சிகளாகிய நாங்களே அவரைக் கண்டோம். அவர் இறந்தோரிலிருந்து எழுந்த பின்பு அவருடனே உணவு உட்கொண்டு அருந்திய நாங்களே அந்த சாட்சிகள். 42உயிர் வாழ்கின்றவர்களுக்கும் இறந்தோருக்கும் நீதிபதியாக தம்மையே இறைவன் நியமித்தார் என்று மக்களுக்குப் பிரசங்கித்து சாட்சி கூறும்படி இயேசு கிறிஸ்து எங்களுக்குக் கட்டளையிட்டார். 43அவரிடம் விசுவாசமாய் இருக்கும் ஒவ்வொருவனும் அவருடைய பெயரின் மூலமாக பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொள்கின்றான் என்று எல்லா இறைவாக்கினரும் அவரைக் குறித்தே சாட்சி கொடுக்கின்றார்கள்” என்றான்.
44பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்கையில், அந்தச் செய்தியைக் கேட்ட எல்லோர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். 45பேதுருவுடன் வந்திருந்த விருத்தசேதனம் பெற்ற#10:45 விருத்தசேதனம் பெற்ற என்பது யூதராயிருந்த விசுவாசிகள் விசுவாசிகள், யூதரல்லாத மக்கள்மேலும் பரிசுத்த ஆவியானவர் நன்கொடையாக ஊற்றப்பட்டதைக் கண்டு வியப்படைந்தார்கள். 46ஏனெனில், அவர்கள் வேறு மொழிகளில் பேசுவதையும், இறைவனைத் துதிக்கின்றதையும் இவர்கள் கேட்டார்கள்.
அப்போது பேதுரு, 47“இவர்கள் தண்ணீரினால் ஞானஸ்நானம் பெறுவதை யாராவது தடை செய்யலாமா? நாம் பெற்றிருப்பது போலவே, இவர்களும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கிறார்களே” என்று சொன்னான். 48எனவே, இயேசு கிறிஸ்துவின் பெயரிலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்குமாறு பேதுரு உத்தரவிட்டான். அப்போது அவர்கள், சில நாட்கள் தங்களுடன் தங்கியிருக்கும்படி பேதுருவைக் கேட்டுக்கொண்டார்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்