அப்போஸ்தலருடைய நடபடிகள் 11

11
பேதுரு தனது செயல்களைக் குறித்து விளக்குதல்
1யூதரல்லாதவர்கள் இறைவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அப்போஸ்தலர்களும், யூதேயா முழுவதிலுமுள்ள சகோதரரும் கேள்விப்பட்டார்கள். 2எனவே பேதுரு எருசலேமுக்குப் போனபோது, விருத்தசேதனம் செய்துகொண்ட விசுவாசிகள் அவன்மீது குற்றம் சுமத்தி, 3“நீ விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களிடம் சென்று அவர்களுடன் சாப்பிட்டாயே” என்றார்கள்.
4பேதுரு ஒன்றுவிடாமல் நடந்த எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கிக் கூறத் தொடங்கினான்: 5“நான் யோப்பா பட்டணத்தில் மன்றாடிக் கொண்டிருந்தபோது, பரவசமடைந்து ஒரு தரிசனத்தைக் கண்டேன். பெரிய விரிப்புத் துணி போன்ற ஒன்று, அதன் நான்கு மூலைகளிலும் பிடித்து, வானத்திலிருந்து இறக்கப்படுவதைக் கண்டேன். அது நான் இருந்த இடத்தை நோக்கி இறங்கி வந்தது. 6நான் அதற்குள் பார்த்தபோது பூமியிலுள்ள நான்கு கால் மிருகங்களையும், காட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், வானத்துப் பறவைகளையும் கண்டேன். 7அப்போது ஒரு குரல் என்னிடம், ‘பேதுரு எழுந்திரு. கொன்று சாப்பிடு’ என்று சொன்னது.
8“நானோ, ‘இல்லை ஆண்டவரே! தூய்மையற்றதும் அசுத்தமானதுமான எதையும் நான் ஒருபோதும் உண்டதில்லை’ என்றேன்.
9“வானத்திலிருந்து அந்தக் குரல் இரண்டாவது முறையும் என்னுடன் பேசி, ‘இறைவன் சுத்தமாக்கியதைத் தூய்மையற்றது என்று நீ சொல்லாதே’ என்றது. 10இப்படி மூன்று முறை நடந்தன. பின்பு, அது திரும்பவும் வானத்திற்கு இழுத்தெடுக்கப்பட்டது.
11“அதேவேளையில் நான் தங்கியிருந்த வீட்டின் வாயிலில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூன்று மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். 12நான் அவர்களுடன் போகத் தயங்கக் கூடாது என்று பரிசுத்த ஆவியானவர் எனக்குச் சொன்னார். இந்த ஆறு சகோதரர்களும் என்னுடன் வந்தார்கள். நாங்கள் அந்த மனிதனுடைய வீட்டிற்குள் போனோம். 13அவனோ, எப்படியாக ஒரு இறைதூதன் தனது வீட்டிலே தனக்குக் காட்சியளித்தான் என்றும், அந்தத் தூதன், ‘பேதுரு என்று அழைக்கப்படும் சீமோனை அழைத்து வரும்படி யோப்பா பட்டணத்திற்கு ஆட்களை அனுப்பு. 14அந்த சீமோன் கொண்டுவரவிருக்கின்ற செய்தியினால், நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள்’ என்று தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு அவன் அறிவித்தான்.
15“நான் பேசத் தொடங்கியபோது, பரிசுத்த ஆவியானவர் தொடக்கத்தில் நமது மேல் இறங்கியதுபோலவே அவர்கள்மீதும் இறங்கினார். 16அப்போது, ‘யோவான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுத்தான். ஆனால் நீங்களோ பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்’ என்று ஆண்டவர் சொன்னதை நான் நினைவுபடுத்திக் கொண்டேன். 17எனவே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தவர்களாகிய நமக்குக் கொடுக்கப்பட்ட அதே வரத்தை இறைவன் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் இறைவனைத் தடுக்கின்ற வல்லமை எனக்கு உண்டோ?” என்றான்.
18யூத விசுவாசிகள் இதைக் கேட்டபோது, அதற்குமேல் அவர்களுக்கு மறுப்பு ஏதும் இருக்கவில்லை, யூத விசுவாசிகள் இறைவனைத் துதித்து, “அப்படியானால் இறைவன் யூதரல்லாத மக்களுக்கும் வாழ்வு கொடுக்கும் மனந்திரும்புதலைக் கொடுத்திருக்கிறார்!” என்றார்கள்.
அந்தியோகியாவில் திருச்சபை
19ஸ்தேவானுடைய மரணத்தின் பின் ஏற்பட்ட துன்புறுத்தலின் காரணமாக சிதறிப் பரவியவர்கள் பெனிக்கேயா, சீப்புரு தீவு, அந்தியோகியா வரை போனார்கள். அவர்களோ யூதருக்கு மட்டுமே இறைவார்த்தையை அறிவித்தார்கள். 20ஆயினும் சீப்புரு, சிரேனே ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களில் சிலர் அந்தியோகியாவுக்குப் போய் கிரேக்கருடன் பேசத் தொடங்கி, ஆண்டவர் இயேசுவைக் குறித்த நற்செய்தியை அவர்களுக்குச் சொன்னார்கள். 21கர்த்தருடைய கரம் அவர்களுடன்கூட இருந்தது. பெரும் எண்ணிக்கையான மக்கள் விசுவாசித்து ஆண்டவரிடம் திரும்பினார்கள்.
22இந்தச் செய்தி எருசலேமிலுள்ள திருச்சபையோரின் காதுக்கு எட்டியது. அப்போது அவர்கள் பர்னபாவை அந்தியோகியாவுக்கு அனுப்பினார்கள். 23அவன் அங்கே போய்ச் சேர்ந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இறைவனுடைய கிருபையின் செயல்களைக் கண்டான். அப்போது அவன் மகிழ்ச்சியடைந்து, அவர்கள் எல்லோரும் தங்கள் முழு இருதயத்தோடும், கர்த்தருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்தினான். 24ஏனெனில் அவன் பரிசுத்த ஆவியானவரினாலும் விசுவாசித்தினாலும் நிறைந்த நல்ல மனிதனாக இருந்தான். இதனால் அநேக மக்கள் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள்.
25அதன்பின்பு பர்னபா சவுலைத் தேடி தர்சுவுக்குச் சென்றான். 26அவன் சவுலைக் கண்டுபிடித்து, அவனை அந்தியோகியாவுக்கு அழைத்து வந்தான். எனவே ஒரு வருடமாக பர்னபாவும் சவுலும் அங்குள்ள திருச்சபையுடன் சேர்ந்து, பெருந்தொகையான மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அந்தியோகியாவிலேயே முதன்முதலில் சீடர்கள், கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
27அந்நாட்களில் சில இறைவாக்கினர் எருசலேமிலிருந்து அந்தியோகியாவுக்கு வந்தார்கள். 28அவர்களில் ஒருவனான அகபு என்பவன் எழுந்து நின்று, உலகமெங்கும் ஒரு கடும் பஞ்சம் ஏற்படப் போகின்றது என்று பரிசுத்த ஆவியானவராலே முன்னறிவித்தான். அப்படியே ரோமப் பேரரசன் கிலவுதியுவின் ஆட்சியில் பஞ்சம் ஏற்பட்டது. 29சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய ஆற்றலுக்கு ஏற்றபடி, யூதேயாவில் வாழ்கின்ற சகோதரருக்கு உதவி செய்யத் தீர்மானித்தார்கள். 30பர்னபா, சவுல் என்பவர்கள் மூலமாக அங்குள்ள மூப்பர்களுக்கு நன்கொடையை அனுப்பி அவர்கள் இந்த உதவியைச் செய்தார்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்