2 தீமோத்தேயு 4
4
1இறைவனின் முன்னிலையிலும், உயிரோடிருக்கின்றவர்களையும் இறந்தவர்களையும் நியாயம் தீர்க்கவிருக்கும் கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும் அவரது வருகையையும் அவருடைய அரசையும் முன்னிட்டு நான் உனக்கு ஆணையிட்டுக் கூறுவதாவது: 2வார்த்தையைப் பிரசங்கம் பண்ணு. வாய்ப்பு உள்ள காலத்திலும் சரி, இல்லாத காலத்திலும் சரி; அதற்கு ஆயத்தமாய் இரு. தவறை உணர்த்து, கண்டனம் செய், ஊக்கப்படுத்து. இதை மிகுந்த பொறுமையுடன், கவனமான அறிவுறுத்தலின் ஊடாகச் செய். 3ஏனெனில் மக்கள் உண்மையான போதனைகளை ஏற்றுக்கொள்ளாத காலம் வரும். அதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் ஆசைகளுக்கிணங்க தங்களுடைய காதுகளுக்கு இதமானவற்றைச் சொல்கின்ற அநேக ஆசிரியர்களைத் தங்களுக்கென்று சேர்த்துக்கொள்வார்கள். 4அவர்கள் சத்தியத்தை கேட்பதிலிருந்து விலகி, கட்டுக்கதைகளையே காதுகொடுத்துக் கேட்பார்கள். 5ஆனால் நீயோ எல்லா சூழ்நிலைகளிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு. கஷ்டங்களைத் தாங்கிக்கொள். நற்செய்தி ஊழியனுக்குரிய பணியைச் செய். உனது ஊழியத்தின் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்று.
6ஏனெனில் நான் ஒரு பானபலி#4:6 யாத். 29:38-41 பானபலி – பழைய ஏற்பாட்டு காலத்தில் பலிகளில் இறுதியாக செலுத்தப்படுவதே பானபலி போன்று ஊற்றப்படுவதானது#4:6 பிலி. 2:17ஊற்றப்படுவதானது – பவுல், தனது முழு வாழ்வையும் ஊழியத்துக்காக அர்ப்பணித்துவிட்டதை இங்கு குறிப்பிடுகிறார் ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; நான் தேகத்தைவிட்டுப் பிரியும் காலம் வந்துவிட்டது. 7போராட்டத்தை நான் நன்றாகப் போராடினேன். ஓட்டத்தை ஓடி முடித்தேன். நான் விசுவாசத்தை பேணிக் காத்துக்கொண்டேன். 8இப்போது நீதியின் கிரீடம்#4:8 கிரீடம் – அக்காலத்தில் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களைக் கெளரவிக்கப் பரிசாக வழங்கப்படும், இலைகளினாலான ஓர் மலர் வளையம். எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நீதிபதியாகிய ஆண்டவர், தாம் திரும்பி வரும் நாளில் அதை எனக்குப் பரிசாகத் தருவார். எனக்கு மட்டுமன்றி, அவருடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்ற எல்லோருக்கும் தருவார்.
பவுலின் அறிவுரை
9விரைவில் என்னிடம் வருவதற்கு உன்னால் முடிந்தளவு முயற்சி செய். 10ஏனெனில் தேமா இந்த உலகத்தின்மீது ஆசை வைத்து என்னைக் கைவிட்டு தெசலோனிக்கேயாவுக்குச் சென்று விட்டான். கிரேஸ்கே கலாத்தியாவுக்கும், தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்று விட்டார்கள். 11லூக்கா மட்டுமே என்னுடன் இருக்கின்றான். மாற்குவையும் உன்னுடன் அழைத்துக்கொண்டு வா. ஏனெனில் அவன் ஊழியத்தில் எனக்கு உதவியாயிருப்பான். 12தீகிக்குவை நான் எபேசுவிற்கு அனுப்பியிருக்கிறேன். 13துரோவாவில் இருக்கின்ற கார்புவிடம் நான் விட்டுவந்த எனது மேலாடையையும், அத்துடன் என் புத்தகச் சுருள்களையும், முக்கியமாக தோற் சுருள்களையும் நீ வரும்போது எடுத்துக்கொண்டு வா.
14உலோகத் தொழிலாளியான அலெக்சாந்தர் எனக்கு மிகவும் கெடுதல் செய்தான். அவனுடைய செயல்களுக்கான பிரதிபலனை கர்த்தர் அவனுக்குக் கொடுப்பார். 15நீயும் அவனைக் குறித்து எச்சரிக்கையாயிரு. ஏனெனில் நமது செய்தியை அவன் கடுமையாக எதிர்த்தான்.
16எனது முதல் வழக்கு விசாரணையின்போது எனக்கு ஆதரவாக யாரும் வரவில்லை. எல்லோரும் என்னைக் கைவிட்டு விட்டார்கள். அது அவர்களுக்கு எதிரான குற்றமாய் கணக்கிடப்படாதிருப்பதாக. 17ஆனால் கர்த்தர் என் அருகில் நின்று எனக்குப் பலத்தைக் கொடுத்தார். அதனால் என் மூலமாக செய்தி முழுமையாக அறிவிக்கப்படவும், யூதரல்லாத மக்களும் அதைக் கேட்கக் கூடியதாகவும் இருந்தது. சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் காப்பாற்றப்பட்டேன். 18ஆம், கர்த்தர் என்னை தீயவனின் தாக்குதல்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுவித்து, தமது பரலோக அரசுக்குள் என்னைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பார். அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
இறுதி வாழ்த்துரை
19பிரிஸ்கில்லாளுக்கும், ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போரின் குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துதல்களைச் சொல்.
20எரஸ்து கொரிந்துவில் தங்கிவிட்டான். துரோபீமு வியாதியாய் இருந்ததால் நான் அவனை மிலேத்துவில் விட்டுவந்தேன். 21குளிர் காலத்துக்கு முன்பு இங்கு வந்து சேர முடிந்தளவு முயற்சி செய்.
ஐபூலூவும், புதேஞ்சும், லீனூவும், கலவுதியாளும், மற்ற எல்லா சகோதரர்களும் உனக்கு வாழ்த்துதல்களைத் தெரிவிக்கின்றார்கள்.
22கர்த்தர் உன்னோடு#4:22 உன்னோடு – கிரேக்க மொழியில் உனது ஆவியோடு இருப்பாராக. கிருபை உன்னோடு இருப்பதாக.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
2 தீமோத்தேயு 4: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.