2 கொரி 13

13
கடைசி எச்சரிப்புகள்
1இத்துடன் மூன்றாவது முறையாக நான் உங்களிடம் வருகின்றேன். “எல்லா விடயமும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.”#13:1 உபா. 19:15 2எனது இரண்டாவது பயணத்தில் நான் அங்கு வந்திருந்தபோது, முன்பு பாவம் செய்தவர்களையும் மற்ற எல்லோரையும் நேரில் வைத்து எச்சரித்தேன், அதுபோல இப்போது நான் அங்கு இல்லாவிட்டாலும் முன்னதாகவே எச்சரித்து வைக்கிறேன். நான் மீண்டும் அங்கு வந்தால் அப்படிப்பட்டவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டேன். 3கிறிஸ்து என் மூலமாய்ப் பேசுகின்றார் என்பதற்கு அத்தாட்சி தேடுகின்றவர்களாய் இருக்கின்றீர்களே. கிறிஸ்து உங்களோடு பலவீனராக அன்றி அவர் உங்களோடு வல்லமையுள்ளவராக செயலாற்றுகின்றவராய் இருக்கின்றார். 4உண்மையில் அவர் பலவீன நிலையிலேயே சிலுவையில் அறையப்பட்டார், ஆனாலும் இறைவனுடைய வல்லமையால் உயிர் வாழ்கின்றார். அதேபோல உண்மையில் நாங்களும் அவருக்குள் பலவீனர்களாய் இருக்கின்றோம்; ஆனாலும் உங்களோடு செயல்படுகின்ற விடயத்தில் நாம் இறைவனுடைய வல்லமையினால் அவருக்குள் உயிர் வாழ்வோம்.
5நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். அதை நீங்களே சோதித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்து உங்களுக்குள் இருக்கின்றார் என்பதை நீங்கள் உணர்வதில்லையா? அப்படி உணர முடியாவிட்டால் நீங்கள் சோதனையில் தோல்வியுற்றவர்கள். 6நாங்கள் சோதனையில் தோல்வியடையவில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். 7மேலும், நீங்கள் எந்த தீமையும் செய்யக் கூடாது என நாங்கள் இறைவனிடம் மன்றாடுகிறோம். நாங்கள் சோதனையை எதிர்கொண்டவர்கள் என எங்களைக் காட்டிக்கொள்வதற்காக அல்ல, அப்படியே நாங்கள் தோல்வியடைந்தவர்கள் போல காணப்பட்டாலும், நீங்கள் சரியானதைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே உங்களுக்காக மன்றாடுகிறோம். 8ஏனெனில் உண்மைக்கு விரோதமாக எதையும் எங்களால் செய்ய முடியாது, உண்மைக்காக மட்டுமே செயல்படுகிறோம். 9நாங்கள் பலவீனர்களாகவும், நீங்கள் பலமுள்ளவர்களாகவும் இருப்பதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறோம். நீங்கள் முழுநிறைவுள்ளவர்கள் ஆகும்படி மன்றாடுகிறோம். 10இவைகளை நான் தூரமாய் இருக்கும்போதே எழுதுகிறேன். அதற்குக் காரணம், நான் உங்களிடம் வரும்போது கர்த்தர் எனக்குத் தந்திருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, உங்களோடு கடுமையாக நடந்துகொள்ள விரும்பவில்லை. உங்களை இடித்துப் போடுவதற்காக அன்றி உங்களை கட்டியெழுப்புவதற்காகவே எனக்கு அந்த அதிகாரம் தரப்பட்டிருக்கிறது.
கடைசி வாழ்த்துதல்
11கடைசியாக பிரியமானவர்களே, மகிழ்ச்சியாயிருங்கள், முழுநிறைவுள்ளவர்களாக வாழ முயற்சி செய்யுங்கள், ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள், ஒரே மனதுடையவர்களாய் இருங்கள், சமாதானமாய் வாழுங்கள். அப்போது அன்புக்கும் சமாதானத்திற்குமான இறைவன் உங்களுடனே இருப்பார்.
12ஒருவருக்கொருவர் பரிசுத்தமான பரிவன்பைக் காட்டி#13:12 பரிவன்பைக் காட்டி – கிரேக்க மொழியில் பரிசுத்த முத்தம் கொடுத்து என்றுள்ளது. வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
13பரிசுத்தவான்கள் எல்லோரும் தங்களுடைய வாழ்த்துதலைத் தெரிவிக்கிறார்கள்.
14நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையும், இறைவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் உங்கள் எல்லோருடனும் இருப்பதாக.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

2 கொரி 13: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்