2 கொரி 12

12
பவுலின் தரிசனம்
1நான் பெருமையாக பேசிக் கொண்டே இருப்பேன். அதில் நன்மை எதுவும் இல்லை என்றாலும், கர்த்தர் எனக்குக் கொடுத்த தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் குறித்து நான் சொல்ல வேண்டும். 2கிறிஸ்துவுக்குள் ஒரு மனிதனை எனக்குத் தெரியும். பதினான்கு வருடங்களுக்கு முன்பதாக அவன் மூன்றாம் வானம் வரைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டான். அவன் தன் உடலோடு சென்றானோ, அல்லது உடலின்றி சென்றானோ நான் அறியேன்; இறைவனே அறிவார். 3இந்த மனிதனை எனக்குத் தெரியும். அவன் தன் உடலோடு சென்றானோ, அல்லது உடலின்றி சென்றானோ நான் அறியேன், இறைவனே அறிவார். 4அவன் பரதீசுக்குள்#12:4 பரதீசுக்குள் – மகிமையானதும் பரிபூரணமானதுமான இடம் அல்லது அழகிய தோட்டம் என்றும் அர்த்தம்கொள்ளலாம். எடுக்கப்பட்டு விபரிக்க முடியாததும், மனிதரால் உச்சரிக்க முடியாததுமான காரியங்களைக் கேட்டான். 5இப்படிப்பட்ட மனிதனைக் குறித்து நான் பெருமையாகப் பேசுவேன். ஆனால் என்னைக் குறித்தோ, என் பலவீனங்களைத் தவிர வேறு எதிலுமோ பெருமைப்பட மாட்டேன். 6அப்படி நான் பெருமையாகப் பேசினாலும் அது மடைமையாய் இருக்காது. ஏனெனில் நான் சொல்வது உண்மை. ஆனால் நான் அப்படி பேசப் போவதில்லை. மற்றவர்கள் என்னில் பார்க்கின்றதற்கும் கேட்கின்றதற்கும் மேலாக என்னைக் குறித்து அவர்கள் பெரிதாக எண்ணி விடாமல் இருக்க நான் அப்படி செய்யப் போவதில்லை.
7எனக்குக் கொடுக்கப்பட்ட அதிமேன்மையான வெளிப்பாடுகளின் காரணமாக, நான் அகந்தைகொள்ளாதபடி, எனது உடலில் ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது என்னை கொடுமைப்படுத்தும் சாத்தானின் தூதுவனாயிருக்கிறது. 8அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்று முறை கர்த்தரிடம் மன்றாடினேன். 9ஆனால் அவர் என்னிடம், “என்னுடைய கிருபை உனக்குப் போதும். உன் பலவீனத்தில், என் வல்லமை முழு நிறைவாக விளங்கும்” என்றார். எனவே கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, நான் எனது பலவீனங்களைக் குறித்து அதிக மகிழ்ச்சியுடன் பெருமிதம்கொள்வேன். 10அதனால் கிறிஸ்துவுக்காக நான் அனுபவித்த பலவீனங்கள், அவமானங்கள், பாடுகள், துன்புறுத்தல்கள், இடர்பாடுகள் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நான் பலவீனமுள்ளவனாய் இருக்கும்போது பலமுள்ளவனாய் இருக்கின்றேன்.
கொரிந்தியரில் பவுலின் அக்கறை
11நான் மதியற்ற ஒருவனைப் போல் என்னை ஆக்கிக் கொண்டேன். நீங்களே என்னை அந்நிலைக்கு உள்ளாக்கினீர்கள். உங்களால் நான் பாராட்டப்பட்டிருக்க வேண்டும். நான் ஒரு வெற்று மனிதனாய் இருந்தாலும், உங்களுடைய இந்த “மகா அப்போஸ்தலர்களை” விட எவ்விதத்திலும் நான் குறைந்தவனல்ல. 12உண்மையில், ஒரு அப்போஸ்தலன் என்பதை வெளிப்படுத்துகின்ற அடையாளங்களும், அற்புதங்களும், வல்லமையான செயல்களும் உங்கள் மத்தியில் மிகுந்த பொறுமையுடன் செய்தும் காட்டப்பட்டன. 13மற்ற திருச்சபைகளைவிட நீங்கள் எந்த விதத்தில் குறைந்து போனீர்கள்? நான் உங்களுக்கு சுமையாக இருக்காத விடயத்திலா? இதுவே நான்விட்ட ஒரு குறையென்றால் இந்தத் தவறுக்காக என்னை மன்னியுங்கள்.
14இப்போதும் நான் மூன்றாவது முறையாக உங்களிடம் வர ஆயத்தமாக இருக்கின்றேன். ஆனாலும், உங்களுக்கு பாரமாக இருக்க மாட்டேன். ஏனென்றால் எனக்கு வேண்டியது உங்களிடம் இருப்பவை அல்ல, நீங்கள்தான் எனக்கு வேண்டும். பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்காக சேமித்து வைக்க வேண்டியதில்லை. பெற்றோரே தங்கள் பிள்ளைகளுக்காக சேமித்து வைக்க வேண்டும். 15நான் என்னிடம் உள்ளவற்றை உங்களுக்காக மிக்க மகிழ்ச்சியோடு செலவு செய்வேன். என்னையும்கூட தந்து விடுவேன். இவ்விதமாக நான் உங்களில் அதிக அன்பாயிருக்கும்போது, நீங்கள் என்மீது காட்டும் அன்பு குறைந்து காணப்படலாமா? 16எது எப்படியிருந்தாலும், நான் உங்களுக்குப் பாரமாய் இருக்கவில்லை. ஆனாலும் நான் ஒரு சூழ்ச்சிக்காரன் என்றும், உங்களைத் தந்திரமாய் பிடித்தேன் என்றும் பேசப்படுகிறது. 17நான் உங்களிடம் அனுப்பிய யார் மூலமாவது உங்களிடமிருந்து நன்மை எதையும் தேடினேனா? 18உங்களிடம் போகும்படி நானே தீத்துவைக் கேட்டுக் கொண்டேன். அவனுடன் மற்றச் சகோதரனையும் அனுப்பினேன். தீத்து உங்களிடமிருந்து நன்மை எதையும் தேடினானா? நாங்கள் ஒரே நோக்கமுள்ளவர்களாய் செயல்படவில்லையா? ஒரே பாதையைப் பின்பற்றவில்லையா?
19உங்களுக்கு முன்பாக நாங்கள் எங்களை குற்றமற்றவர்களாக நிரூபிக்க முயற்சிக்கிறோம் என்றா எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்? இறைவனுடைய பார்வையில், கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களாக இவைகளை பேசிக் கொண்டிருக்கிறோம். அன்பானவர்களே, உங்களைக் கட்டியெழுப்புவதற்காகவே நாங்கள் எல்லாவற்றையும் செய்கின்றோம். 20நான் உங்களிடம் வரும்போது ஒருவேளை நான் விரும்புகின்றபடி நீங்கள் காணப்படாதவர்களாகவும், நீங்கள் விரும்புகின்றபடி நான் காணப்படாதவனாகவும் இருப்பேனோ என்று பயப்படுகிறேன். அதாவது, உங்களிடையே வாக்குவாதம், பொறாமை, கோபம், சுயநலம், அவதூறு பேசுதல், புறங்கூறுதல், அகங்காரம், ஒழுங்கீனம் என்பன காணப்படுமோ என்றும் அஞ்சுகிறேன். 21நான் மீண்டும் உங்களிடம் வரும்போது, என்னுடைய இறைவன் உங்களுக்கு முன்பாக என்னைத் தாழ்த்தி விடுவாரோ என்று பயப்படுகிறேன். அத்தோடு, உங்களில் பலர் முன்பு செய்த பாவங்களான அசுத்தத்தையும், பாலியல் ஒழுக்கக்கேட்டையும், சிற்றின்ப ஆசைகளையும் விட்டு மனந்திரும்பாது இருப்பதைக் குறித்து நான் துக்கப்பட வேண்டியிருக்குமோ என்றும் அஞ்சுகிறேன்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

2 கொரி 12: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்