1 தெசலோனிக்கேயர் 2

2
தெசலோனிக்கேயாவில் பவுலின் ஊழியம்
1பிரியமானவர்களே, நாங்கள் உங்களிடம் வந்த நோக்கம் வீண் போகவில்லை என்பது உங்களுக்கே தெரியும். 2உண்மையில் அங்கு வருவதற்கு முன்பதாக நாங்கள் பிலிப்பி பட்டணத்திலே துன்புறுத்தப்பட்டதும், அவமானப்படுத்தப்பட்டதும் உங்களுக்குத் தெரியும். பலத்த எதிர்ப்பின் மத்தியில், நமது இறைவனுடைய உதவியினாலே அவருடைய நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கத் துணிவு பெற்றோம். 3ஏனெனில், எங்களுடைய போதனையானது தவறான ஒன்றையோ, ஒழுக்கக்கேடான நோக்கத்தையோ, அல்லது உங்களை ஏமாற்றுவதையோ அடிப்படையாகக் கொண்டதல்ல. 4மாறாக, நற்செய்தியை ஒப்படைப்பதற்கு நம்பத்தகுந்தவர்களென இறைவனால் பரிசீலித்து அங்கீகரிக்கப்பட்ட மனிதர்களாக நாங்கள் பேசுகின்றோம். நாம் மனிதர்களை அன்றி, எங்கள் உள்ளங்களை பரிசீலித்து அறிகின்ற இறைவனைப் பிரியப்படுத்தவே முயலுகிறோம். 5நாங்கள் ஒருபோதும் உங்களைப் போலியாகப் புகழ்ந்து பேசியதும் இல்லை, பேராசை கொண்டவர்களாய் அதை மறைக்க முகமூடி அணிந்து வெளிவேடம் போட்டதும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்; இறைவனே இதற்கு சாட்சி. 6உங்களிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ நாங்கள் மனிதர்களின் புகழ்ச்சியைத் தேடியதில்லை.
கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் என்ற முறையில், எங்களது அதிகாரத்தைப் பிரயோகித்து நாங்கள் உங்களுக்கு ஒரு பாரமாக இருந்திருக்க முடியும்.
7ஆனால், பாலூட்டுகின்ற தாய் தன் குழந்தையைப் பராமரிப்பது போல, நாங்கள் உங்களிடம் கனிவாய் நடந்தோம். 8இவ்விதமாக, உங்களில் நாம் அதிக அன்பு கொண்டிருந்ததால், இறைவனுடைய நற்செய்தியை அறிவிப்பதில் மட்டுமல்ல, எங்கள் வாழ்க்கையை உங்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் மகிழ்ச்சி கொண்டோம். ஏனெனில், நீங்கள் எங்களது அன்புக்குரியவர்களாக ஆகிவிட்டீர்கள். 9பிரியமானவர்களே, நாங்கள் கஷ்டப்பட்டு கடினமாக உழைத்தது நிச்சயமாக உங்களுக்கு நினைவிருக்குமே. நாங்கள் யாருக்கும் பாரமாய் இராதவாறு, இரவும் பகலும் தொழில் புரிந்துகொண்டே இறைவனுடைய நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம்.
10நற்செய்தியை விசுவாசித்தவர்களாகிய உங்களிடம் நாங்கள் எந்தளவு பரிசுத்தமாகவும் நீதியுள்ளவர்களாகவும் குற்றம் சாட்டப்படாதவர்களாகவும் நடந்துகொண்டோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, இறைவனும் சாட்சி. 11ஒரு தந்தை தன் பிள்ளைகளை நடத்துவது போல, நாங்கள் உங்கள் ஒவ்வொருவரையும் நடத்தினோம் என்பது உங்களுக்கே தெரியும். 12அதற்கமைய உங்களுக்கு அறிவுறுத்தலும் ஊக்குவிப்பும் தந்து, தம்முடைய அரசுக்குள்ளும் மகிமைக்குள்ளும் உங்களை அழைக்கின்ற இறைவனுக்கேற்ற வாழ்க்கை வாழுங்கள் என்று உங்களை வலியுறுத்தி வருகின்றோம்.
13மேலும், நாங்கள் இறைவனுக்கு தொடர்ந்து நன்றி செலுத்துகிறோம். ஏனெனில், இறைவனின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனிதருடைய வார்த்தையாக அன்றி இறைவனுடைய வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். உள்ளபடியே அது இறைவனுடைய வார்த்தையே. உண்மையில் அதுவே விசுவாசிக்கின்றவர்களாகிய உங்களுக்குள்ளே வல்லமையுடன் செயலாற்றுகிறது. 14பிரியமானவர்களே, யூதேயாவில் உள்ள கிறிஸ்து இயேசுவில் இணைந்திருக்கும் இறைவனுடைய திருச்சபைகள் செய்ததையே நீங்களும் பின்பற்றி நடந்துகொண்டீர்கள். அந்தத் திருச்சபைகள் யூதர்களால் துன்பப்பட்டது போலவே நீங்களும் உங்கள் சொந்த மக்களால் துன்பப்பட்டீர்கள். 15அந்த யூதர்களே ஆண்டவர் இயேசுவையும் இறைவாக்கினரையும் கொலை செய்தார்கள், எங்களையும் வெளியே துரத்தினார்கள். அவர்கள் இறைவனின் விருப்பத்திற்கு விரோதமாய் நடக்கின்றவர்களாகவும், அநேகருக்குப் பகைவர்களாகவும் இருக்கின்றார்கள். 16ஏனெனில் யூதரல்லாதவர்கள் இரட்சிக்கப்படும்படி நாங்கள் நற்செய்தி அறிவிப்பதை அவர்கள் தடுக்கிறார்கள். இவ்விதமாக அவர்கள் எப்போதும் பாவத்துக்கு மேல் பாவம் செய்து தங்கள் பாவத்தை பெருக்கிக்கொள்கின்றார்கள். இறுதியாக, இறைவனுடைய தண்டனைக் கோபம் அவர்கள்மீது வந்திருக்கிறது.
தெசலோனிக்கேயரைக் காண்பதற்கான பவுலின் ஏக்கம்
17பிரியமானவர்களே, சிறிது காலம் உங்களைவிட்டு நாங்கள் பிரிந்து தவித்தோம். நாம் உடலால் பிரிந்திருந்தோமே அல்லாமல் உள்ளத்தால் பிரிந்திருக்கவில்லை. உங்களை நேரில் காண மிகுந்த ஆவலோடு இருந்தபடியால் உங்களைப் பார்ப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம். 18ஆகையால், உங்களிடம் நாங்கள் வருவதற்கு, அதிலும் பவுலாகிய நான் உங்களிடம் வருவதற்கு மீண்டும் மீண்டும் அதற்கான முயற்சிகளை எடுத்தேன். ஆனாலும், சாத்தான் எங்களுக்குத் தடை ஏற்படுத்தினான். 19நம்முடைய ஆண்டவர் இயேசு வரும்போது அவருக்கு முன்பாக எங்களுடைய எதிர்பார்ப்பாகவும், மனமகிழ்ச்சியாகவும், எங்களுக்கு பெருமை சேர்க்கும் வெற்றிக் கிரீடமாகவும்#2:19 கிரீடமாகவும் – அக்காலத்தில் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களைக் கெளரவிக்கப் பரிசாக வழங்கப்படும், இலைகளினாலான ஓர் மலர் வளையம். இருக்கப் போகின்றவர்கள் யார்? அது நீங்கள் அல்லவா? 20உண்மையில் நீங்களே எங்கள் மகிமையும் மனமகிழ்ச்சியுமாய் இருக்கின்றீர்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

1 தெசலோனிக்கேயர் 2: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்