1 தெசலோனிக்கேயர் 1
1
1பவுல், சீலா,#1:1 சீலா – இவனது பெயர் கிரேக்க மொழியில் சில்வானு என்றுள்ளது. தீமோத்தேயு,
ஆகிய நாங்கள் பிதாவாகிய இறைவனிலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிலும் இணைந்து இருக்கின்ற தெசலோனிக்கேயருடைய திருச்சபைக்கு எழுதுவதாவது:
கிருபையும் சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக.
தெசலோனிக்கேயருக்காக நன்றி செலுத்துதல்
2நாங்கள் எங்களுடைய மன்றாடுதல்களில் உங்களை நினைவுகூர்ந்து, உங்கள் எல்லோருக்காகவும் இறைவனுக்கு எப்போதும் நன்றி செலுத்துகிறோம். 3விசுவாசத்தினால் வரும் உங்கள் செயலையும், அன்பினால் உண்டான உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிலுள்ள எதிர்பார்ப்பினால் உருவான உங்கள் சகிப்புத் தன்மையையும் நமது இறைவனும் பிதாவுமாயிருக்கின்றவருக்கு முன்பாக நாங்கள் எப்போதும் நினைவுகூருகிறோம்.
4இறைவனால் அன்பு செலுத்தப்படுகின்ற பிரியமானவர்களே, அவர் உங்களைத் தெரிவு செய்தார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். 5ஏனெனில், எங்களுடைய நற்செய்தி வெறும் வார்த்தைகளாக மட்டும் உங்களிடம் வந்து சேரவில்லை. மாறாக அது வல்லமையுடனும், பரிசுத்த ஆவியானவருடனும், உறுதியான நம்பிக்கையுடனும் உங்களிடத்தில் வந்தது. உங்களுக்காக, உங்கள் மத்தியில் நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். 6உங்களுக்கு ஏற்பட்ட கடும் துன்பத்தையும் பொருட்படுத்தாமல், பரிசுத்த ஆவியானவரிடமிருந்து பெற்றுக்கொண்ட மனமகிழ்ச்சியுடன் நற்செய்தியை ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் எங்களையும் கர்த்தரையும் பின்பற்றி நடக்கின்றவர்களாகினீர்கள். 7இவ்விதமாக, மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் உள்ள விசுவாசிகள் அனைவருக்கும் நீங்கள் முன்மாதிரிகளாகினீர்கள். 8கர்த்தரின் செய்தி மக்கெதோனியாவுக்கும் அகாயாவுக்கும் மட்டுமல்லாது, எல்லா இடங்களில் உள்ளவர்களுக்கும் உங்களிடமிருந்து எதிரொலித்துப் பரவியிருக்கிறது. நீங்கள் இறைவனில் வைத்திருக்கும் விசுவாசம் எங்கும் தெரிய வந்திருக்கிறது. எனவே, இதைக் குறித்து நாங்கள் எதையும் சொல்ல வேண்டியதில்லை. 9ஏனெனில், நாங்கள் உங்களிடம் வந்தபோது நீங்கள் எங்களை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் என்பதைப்பற்றி அந்த மக்களே அறியத் தருகிறார்கள். நீங்கள் விக்கிரகங்களை வழிபடுவதைக் கைவிட்டு, உயிருள்ள உண்மையான இறைவனுக்கு அர்ப்பணித்துப் பணி செய்கின்றவர்களாக இறைவனிடம் எவ்விதமாக திரும்பினீர்கள் என்பது பற்றியும் அவர்கள் கூறி வருகின்றார்கள். 10அத்துடன், இறந்தவர்களிலிருந்து இறைவனால் உயிரோடு எழுப்பப்பட்ட அவரது மகனாகிய இயேசு, பரலோகத்திலிருந்து வரும்வரை நீங்கள் காத்திருப்பதைப் பற்றியும் அறிவிக்கிறார்கள். இறைமகனாகிய இயேசுவே வரப்போகும் தண்டனைக் கோபத்திலிருந்து நம்மை காப்பாற்றுகின்றவர்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
1 தெசலோனிக்கேயர் 1: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.