1 யோவான் 3

3
1நாம் இறைவனுடைய பிள்ளைகள் என அழைக்கப்படுவதற்காக, பிதா நம்மீது வைத்த பேரன்பு எவ்வளவு பெரியது என்று பாருங்கள். அப்படியே நாம் அவரின் பிள்ளைகளாயிருக்கிறோம். உலகம் அவரை அறியாதிருப்பதால் நம்மையும் அறியாதிருக்கிறது. 2அன்பானவர்களே, இப்போது நாம் இறைவனுடைய பிள்ளைகளாய் இருக்கின்றோம். இனிமேல் எப்படி இருப்போம் என்பது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் அவர் மீண்டும் வெளிப்படும்போது நாம் அவரைப் போலவே இருப்போம் என்பதை அறிந்திருக்கிறோம். ஏனெனில், அவர் இருக்கின்றபடியே நாம் அவரைக் காண்போம். 3அவரில் இவ்விதமான நம்பிக்கையுடைய ஒவ்வொருவனும், கிறிஸ்து தூய்மையாய் இருப்பது போலவே தன்னையும் தூய்மையாக்கிக்கொள்கின்றான்.
4பாவம் செய்கின்ற எவரும் நீதிச்சட்டத்தை மீறுகிறார்கள். நீதிச்சட்டத்தை மீறுவதே பாவம். 5ஆனால், நம்முடைய பாவங்களை நீக்கும்படி கிறிஸ்து வந்தார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவரிலோ, ஒரு பாவமும் இல்லை. 6ஆகவே கிறிஸ்துவில் வாழ்பவன் தொடர்ந்து பாவம் செய்வதில்லை. தொடர்ந்து பாவம் செய்கின்ற எவனும் கிறிஸ்துவைக் கண்டதும் இல்லை, அவரை அறிந்ததும் இல்லை.
7அன்பான பிள்ளைகளே, ஒருவரும் உங்களை ஏமாற்றி வழிவிலகச் செய்வதற்கு இடங்கொடுக்க வேண்டாம். நீதியானதைச் செய்கின்றவன், கிறிஸ்து நீதியுள்ளவராய் இருப்பதைப் போல அவனும் நீதியுள்ளவனாய் இருக்கின்றான். 8ஆனால் பாவம் செய்கின்றவனோ, பிசாசுக்குரியவனாக இருக்கின்றான். ஏனெனில், பிசாசு ஆரம்பத்திலிருந்தே பாவம் செய்கின்றான். பிசாசின் செய்கைகளை அழிக்கவே இறைவனின் மகன் தோன்றினார். 9இறைவனால் பிறந்த எவனும், தொடர்ச்சியாக பாவம் செய்ய மாட்டான். ஏனெனில் இறைவனுடைய வித்து அவனுக்குள் இருக்கின்றது. அவன் இறைவனால் பிறந்திருப்பதனால் தொடர்ச்சியாக பாவம் செய்ய முடியாது. 10இவ்விதமாக, இறைவனுடைய பிள்ளைகள் யார் என்றும், பிசாசின் பிள்ளைகள் யார் என்றும் அறிந்துகொள்கின்றோம். நீதியைச் செய்யாத எவரும் இறைவனுடைய பிள்ளைகள் அல்ல; தமது சகோதரனில் அன்பு செலுத்தாத எவரும் இறைவனுடைய பிள்ளைகள் அல்ல.
ஒருவர் மீது ஒருவர் அன்பாயிருத்தல்
11நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பாயிருக்க வேண்டும் என்பதே ஆரம்பத்திலிருந்து நீங்கள் கேட்ட செய்தியாய் இருக்கின்றது. 12காயீனைப் போல் இருக்க வேண்டாம். அவன் தீயவனுக்குரியவனாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்தான். அவன் ஏன் தன் சகோதரனைக் கொலை செய்தான்? ஏனெனில் தனது செயல்கள் தீமையாய் இருந்தபடியினாலும், தனது சகோதரனுடைய செயல்கள் நீதியாய் இருந்தபடியினாலுமே அவன் அப்படிச் செய்தான். 13எனக்கு பிரியமானவர்களே, உலகம் உங்களை வெறுத்தால், அதைக் குறித்து நீங்கள் வியப்படையாதீர்கள். 14நாம் சகோதரரில் அன்பாயிருக்கின்றபடியால், மரணத்தைக் கடந்து வாழ்வுக்கு உட்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். அன்பில்லாதோர் எவருமே மரணத்தில்தான் நிலைத்திருக்கிறார்கள். 15தனது சகோதரனையோ சகோதரியையோ வெறுக்கின்ற எவனும் கொலைகாரனாய் இருக்கின்றான். அவனுக்குள் நித்திய வாழ்வு இல்லை என்பதை அறிந்திருக்கிறீர்கள்.
16அன்பு என்ன என்பதை, இயேசு கிறிஸ்து தமது உயிரை நமக்காகக் கொடுத்ததனால் நாம் அறிந்திருக்கிறோம். நாமும் நமது சகோதர உறவுகளுக்காக உயிரைக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். 17வசதி படைத்த ஒருவன், தனது சகோதர உறவுகள் தேவையோடு இருப்பதைக் கண்டும், அவன் தனது இருதயத்தை அவர்களுக்காக திறக்காது போனால், இறைவனின் அன்பு அவனில் நிலைகொள்வது எப்படி? 18அன்பான பிள்ளைகளே, வெறும் வார்த்தையினாலும் பேச்சினாலும் மட்டுமல்லாமல், நமது செயலினாலும் உண்மையினாலும் அன்பு காட்டுவோமாக.
19இப்படியாக நாம் உண்மைக்கு உரியவர்கள் என்று அறிந்து, இறைவன் முன்னிலையில் எமது இருதயங்களை நிலைப்படுத்திக்கொள்ளலாம். 20ஏனெனில், நம்முடைய இருதயங்களே நம்மைக் குற்றவாளியாக தீர்க்கும்போதெல்லாம், இறைவன் நமது இருதயத்தைப் பார்க்கிலும் பெரியவராயிருந்து எல்லாவற்றையும் அறிவார்.
21அன்பானவர்களே, நம்முடைய இருதயங்கள் நம்மைக் குற்றவாளிகளாய் தீர்க்காதிருந்தால் நாம் இறைவனுக்கு முன்பாக தைரியம் கொண்டிருந்து, 22அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகின்றதனாலும், அவருக்கு பிரியமானவைகளைச் செய்கின்றதனாலும் நாம் கேட்கின்ற எதையும் அவரிடத்தில் இருந்து கேட்டுப் பெற்றுக்கொள்வோம். 23தமது மகனாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் விசுவாசமாய் இருக்க வேண்டும் என்பதும், அவர் கட்டளையிட்டபடி ஒருவர் மீது ஒருவர் அன்பாயிருக்க வேண்டும் என்பதுமே அவருடைய கட்டளையாயிருக்கின்றது. 24இறைவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றவர்கள் அவரில் நிலைத்திருக்கிறார்கள். அவரும் அவர்களில் நிலைத்திருக்கிறார். இவ்விதமாக இறைவன் நமக்குள் நிலைத்திருக்கிறார் என்பதை அவர் நமக்குத் தந்த பரிசுத்த ஆவியானவரின் மூலமாக அறிந்திருக்கிறோம்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

1 யோவான் 3: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்