1 யோவான் 2

2
1என் அன்பான பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்கும்படி இவற்றை நான் உங்களுக்கு எழுதுகிறேன். யாராவது பாவம் செய்தால், நீதியுள்ளவரான இயேசு கிறிஸ்து நமக்காக பிதாவிடம் பரிந்து பேசுகின்றவராக இருக்கின்றார். 2நம்முடைய பாவங்களுக்காக மட்டுமல்ல, முழு உலகத்தினதும் பாவங்களுக்கான பாவநிவாரண பலி அவரே.
சக விசுவாசிகளில் கொண்டிருக்கும் அன்பும் வெறுப்பும்
3அவருடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிந்தால், அவரை அறிந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளலாம். 4“இறைவனை நான் அறிந்திருக்கிறேன்” என்று ஒருவன் சொல்லியும், இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால் அவன் பொய்யன். சத்தியம் அவனுக்குள் இல்லை. 5ஆனால் யாராவது அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தால், இறைவனின் அன்பு அவனில் உண்மையிலேயே நிறைவு பெறுகிறது. இவ்விதமாக நாம் இறைவனில் இருக்கின்றோம் என்பதை அறிந்துகொள்கின்றோம். 6ஒருவன் தான் இறைவனில் வாழ்வதாகச் சொல்லிக்கொண்டால் இயேசுவைப் போலவே தானும் நடக்க வேண்டும்.
7அன்பானவர்களே, நான் உங்களுக்கு புதிய கட்டளையை அன்றி உங்களுக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருந்த பழைய கட்டளையையே எழுதுகிறேன். நீங்கள் ஏற்கெனவே கேட்ட உண்மை வார்த்தையே அந்தக் கட்டளை. 8அதேநேரம், ஒரு புதிய கட்டளையையும் உங்களுக்கு எழுதுகிறேன். இருள் அகன்று போகின்றது, மெய்யான ஒளி பிரகாசிக்கிறது, அது அவரிலும் உங்களிலும் காணப்படும் உண்மையாயிருக்கிறது.
9ஒளியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் யாராவது தன் சகோதரனை வெறுத்தால், அவன் இன்னும் இருளில் இருக்கின்றான். 10தன் சகோதரனை நேசிக்கின்ற ஒருவனோ ஒளியில் இருக்கின்றான். மற்றவரை தடுக்கி விழச் செய்யும் எதுவும் அவனிடம் இல்லை. 11ஆனால் தன் சகோதரனை வெறுக்கின்றவன் எவனோ, அவன் இருளுக்குள் இருந்து, இருளிலே நடக்கின்றான். இருள் அவனது கண்களை குருடாக்கியபடியால், தான் போகுமிடத்தை அறியாதிருக்கிறான்.
இதை எழுதுவதற்கான காரணம்
12அன்பான பிள்ளைகளே,
அவருடைய பெயரின் பொருட்டு உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருப்பதால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
13தந்தையரே,
தொடக்கத்திலிருந்தே இருக்கின்றவரை நீங்கள் அறிந்திருக்கின்றபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
இளைஞரே,
தீயவனை நீங்கள் வெற்றி கொண்டிருக்கின்றபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
14அன்பான பிள்ளைகளே,
நீங்கள் பிதாவை அறிந்திருக்கின்றபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
தந்தையரே, தொடக்கத்திலிருந்தே இருக்கின்றவரை நீங்கள் அறிந்திருக்கின்றபடியால்,
நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
இளைஞரே, நீங்கள் பலம் உள்ளவர்களாகவும்,
இறைவனுடைய வார்த்தை உங்களுக்குள் நிலைத்திருப்பதாலும்,
நீங்கள் தீயவனை வெற்றிகொண்டிருப்பதாலும்,
நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
உலகத்தில் அன்பு செலுத்த வேண்டாம்
15உலகத்திலும் உலகத்திலுள்ள எவற்றிலும் அன்பு செலுத்த வேண்டாம். யாராவது உலகத்தில் அன்பு செலுத்தினால், அவனில் பிதாவின் அன்பு இல்லை. 16ஏனெனில் உலகத்தில் உள்ளவைகளான மனித இயல்பின் ஆசைகள், கண்களின் ஆசை, வாழ்வின் பெருமை ஆகிய அனைத்தும் பிதாவிடமிருந்து வருவதில்லை, உலகத்திலிருந்தே வருகின்றன. 17உலகமும் உலகத்திற்குரிய ஆசைகளும் மறைந்து போகின்றன. ஆனால் இறைவனுடைய விருப்பத்தைச் செய்கின்றவனோ என்றென்றும் வாழ்வான்.
போலி கிறிஸ்துக்கள் குறித்த எச்சரிப்பு
18அன்பான பிள்ளைகளே, இது கடைசி மணிநேரமாய் இருக்கின்றது. போலி கிறிஸ்து வருவான் என நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றபடி, போலி கிறிஸ்துக்கள் பலர் இப்பொழுதே வந்திருக்கிறார்கள். இதனால் இதுவே கடைசி மணி நேரம் என்று நாம் அறிந்துகொள்கின்றோம். 19நம்மைவிட்டு அவர்கள் பிரிந்து போனார்கள். ஆனால், அவர்கள் நம்முடையவர்கள் அல்ல. அவர்கள் நம்முடையவர்களாய் இருந்திருந்தால் நம்மோடு இருந்திருப்பார்கள். அவர்கள் பிரிந்து சென்றமை அவர்களில் எவருமே நம்முடையவர்கள் அல்ல என்பதைக் காண்பித்துவிட்டது.
20ஆனால் நீங்கள் எல்லோரும் பரிசுத்தமானவரிடமிருந்து#2:20 பரிசுத்தமானவரிடமிருந்து – பரிசுத்தமானவராகிய இறைவனிடமிருந்து என்பது இதன் பொருள். அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டவர்களாகவும் உண்மையை அறிந்துகொண்டவர்களாகவும் இருக்கின்றீர்கள். 21உங்களுக்கு உண்மை தெரியாது என்பதற்காக அல்ல, நீங்கள் அதை அறிந்திருப்பதனாலும், எந்தவொரு பொய்யும் உண்மையிலிருந்து வருவதில்லை என்பதாலுமே இதை நான் எழுதுகின்றேன். 22இயேசுவே, மனிதனாக வந்த கிறிஸ்து என்பதை மறுதலிப்பவனே அல்லாமல், வேறு யார் பொய்யன்? பிதாவையும் அவருடைய மகனையும் மறுதலிக்கின்றவனே போலி கிறிஸ்துவாயிருக்கிறான். 23மகனை மறுதலிக்கின்ற எவனும் பிதாவினுடையவன் அல்ல, மகனை அறிக்கையிடுகின்றவன் எவனோ அவனுடன் பிதா இருக்கின்றார்.
24எனவே, நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்தவை உங்களில் நிலைத்திருக்கட்டும். அப்படியிருந்தால், நீங்கள் கிறிஸ்துவிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். 25அவர் நமக்குத் தருவதாக வாக்குக் கொடுத்திருக்கின்ற நித்திய வாழ்வு இதுவே.
26உங்களை ஏமாற்றி வழிவிலகப் பண்ணுகின்றவர்களை மனதிற்கொண்டே இவற்றை உங்களுக்கு எழுதுகிறேன். 27நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கின்றபடியால் யாரும் உங்களுக்கு போதிக்க வேண்டிய அவசியம் இல்லை; அந்த அபிஷேகம் உங்களுக்கு எல்லாவற்றையும் போதிக்கிறது. அது உண்மையாயிருக்கிறது, போலியானது அல்ல. அது உங்களுக்கு போதித்தபடியே அவரில் நிலைத்திருங்கள்.
இறைவனின் பிள்ளைகள்
28இப்போதும் அன்பான பிள்ளைகளே, மீண்டும் அவர் தமது வருகையில் தோன்றும்போது#2:28 தோன்றும்போது – இயேசு தமது இரண்டாம் வருகையில் தோன்றுவதைக் குறிக்கின்றது. நாம் மனவுறுதியுடனும் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கும்படி அவரில் நீங்கள் நிலைத்திருங்கள்.
29இறைவன் நீதியுள்ளவர் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், நீதியாய் நடக்கின்ற ஒவ்வொருவனும் அவரால் பிறந்திருக்கின்றான் என்பதை அறிவீர்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

1 யோவான் 2: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்