1 யோவான் 1

1
வாழ்வாகிய வார்த்தை
1ஆரம்பத்தில் இருந்த வாழ்வு தரும் வார்த்தையை நாங்கள் கேட்டோம், எங்கள் கண்களால் கண்டோம், உற்றுப் பார்த்தோம், எங்கள் கைகளால் தொட்டுப் பார்த்தோம், 2அந்த வாழ்வு வெளிப்பட்டது. நாங்கள் அதைக் கண்டு, அதைக் குறித்து சாட்சியளித்து, பிதாவோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்பட்டதுமான அந்த நித்திய வாழ்வை உங்களுக்கு அறிவிக்கிறோம். 3எங்களுடைய ஐக்கியம், பிதாவோடும் அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கின்றபடியால், நீங்களும் எங்களுடன் ஐக்கியம் வைத்துக்கொள்வதற்காக நாங்கள் கண்டதையும் கேட்டதையும் உங்களுக்கு அறிவிக்கிறோம். 4அத்தோடு நமது மனமகிழ்ச்சி முழுநிறைவடையும்படி இவைகளை எழுதுகின்றோம்.
இருளும் ஒளியும், பாவமும் மன்னிப்பும்
5இறைவன் ஒளியாய் இருக்கின்றார். அவரில் சிறிதேனும் இருள் இல்லை என்பதே நாங்கள் அவரிடமிருந்து கேட்டதும், உங்களுக்கு அறிவிக்கின்ற செய்தியுமாயிருக்கிறது. 6எனவே நாம் இறைவனுடன் ஐக்கியமாய் இருக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு இருளிலே நடந்தால், உண்மையின்படி வாழ்கின்றவர்களாக இராமல் பொய் சொல்கின்றவர்களாக இருப்போம். 7ஆனால், இறைவன் ஒளியில் இருப்பதைப் போல, நாமும் ஒளியிலே நடந்தால் நம்மிடையே ஐக்கியம் இருக்கும். இறைவனின் மகனாகிய இயேசுவின் இரத்தம் பாவம் அனைத்திலிருந்தும் நம்மைச் சுத்திகரிக்கும்.
8நாம் பாவமற்றவர்கள் என்று சொல்வோமேயானால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். நமக்குள் உண்மை இல்லை. 9நம்முடைய பாவங்களை நாம் ஏற்றுக்கொண்டு இறைவனிடம் அறிக்கையிட்டால், நம்முடைய பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையுள்ளவரும் நீதியுள்ளவருமாக இருக்கின்றார். 10நாம் பாவம் செய்யவில்லை என்று சொல்வோமேயானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறோம். அவருடைய வார்த்தை நமக்குள் இல்லை.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

1 யோவான் 1: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்