1 யோவான் 4

4
போலி இறைவாக்கினர்கள்
1அன்பானவர்களே, பல போலி இறைவாக்கினர்கள் உலகமெங்கும் பரவியிருக்கின்றபடியால் நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் இறைவனிடம் இருந்து வந்தனவா என்று அவைகளைச் சோதித்துப் பாருங்கள். 2இறைவனுடைய ஆவியை நீங்கள் இவ்விதமாக அறிந்துகொள்ள முடியும்: மனித உடலில் வந்த இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கின்ற ஒவ்வொரு ஆவியும், இறைவனிடமிருந்து வந்திருக்கிறது. 3மனித உடலில் வந்த இயேசுவை ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு ஆவியும் இறைவனிடமிருந்து வரவில்லை. இப்படியாக வரும் என்று நீங்கள் கேள்விப்பட்ட போலி கிறிஸ்துவின் ஆவி இதுவே, அது இப்பொழுதே உலகத்தில் இருக்கின்றது.
4அன்பான பிள்ளைகளே, உலகத்தில் இருக்கின்றவனைவிட உங்களில் இருக்கின்றவர் பெரியவராய் இருக்கின்றார். அதனால், இறைவனுக்கு உரியவர்களாகிய நீங்கள் அந்த போலி இறைவாக்கினர்களை#4:4 போலி இறைவாக்கினர்களை – கிரேக்க மொழியில் அவர்களை என குறிப்பிடப்பட்டுள்ளது. வெற்றி கொண்டீர்கள். 5அவர்கள் உலகத்திற்கு உரியவர்கள். ஆகவே அவர்கள் உலக நோக்கத்தின்படி பேசுகின்றார்கள். உலகமும் அவர்கள் சொல்வதைக் கேட்கின்றது. 6நாம் இறைவனுக்கு உரியவர்கள். இறைவனை அறிந்தவர்கள் நாம் சொல்வதைக் கேட்கின்றார்கள். இறைவனை அறியாதவர்கள் நாம் சொல்வதைக் கேட்பதில்லை. இவ்விதமாக, சத்திய ஆவியையும் தவறான ஆவியையும் நாம் அறிந்திருக்கிறோம்.
இறைவனது அன்பும், நமது அன்பும்
7அன்பானவர்களே, நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பாயிருப்போமாக. ஏனெனில் அன்பு இறைவனிடமிருந்து வருகின்றது. அன்பாயிருக்கின்ற ஒவ்வொருவரும் இறைவனால் பிறந்து, இறைவனை அறிந்திருக்கிறார்கள். 8அன்பில்லாதோர் இறைவனை அறியாதிருக்கிறார்கள். ஏனெனில், இறைவன் அன்பாகவே இருக்கின்றார். 9நாம் அவர் மூலமாக வாழ்வடையும்படி அவரது ஒரே பேறான மகனை இந்த உலகத்திற்கு அனுப்பியதால், அவர் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. 10நாம் இறைவனை அன்பு செய்தோம் என்பதல்ல, அவர் நம்மில் அன்பு காட்டி, நம்முடைய பாவநிவாரண பலியாகத் தமது மகனை அனுப்பியதே அன்பு. 11அன்பானவர்களே, இறைவன் நம்மீது இந்தளவு அன்பாயிருந்தபடியால், நாமும் ஒருவர் மீது ஒருவர் அன்பாயிருக்கக் கடமைப்பட்டவர்கள். 12ஒருவரும் ஒருபோதும் இறைவனைக் கண்டதில்லை. நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பாயிருந்தால், இறைவன் நமக்குள் நிலைகொண்டிருக்கிறார். அவருடைய அன்பும் நம்மில் முழுநிறைவாகின்றது.
13அவர் தமது ஆவியை நமக்குக் கொடுத்திருக்கின்றதனால் நாம் அவரில் வாழ்கின்றோம் என்றும், அவர் நம்மில் வாழ்கின்றார் என்றும் நாம் அறிந்திருக்கின்றோம். 14பிதா, தமது மகனை உலகத்தின் இரட்சகராக அனுப்பினார் என்பதைக் கண்டு அதற்கு நாம் சாட்சி அளிக்கின்றோம். 15யாராவது இயேசுவை இறைவனுடைய மகன் என்று ஏற்றுக்கொண்டால் இறைவன் அவனில் வாழ்கிறார், அவனும் இறைவனில் வாழ்கின்றான். 16இவ்விதமாய், இறைவன் நம்மீது வைத்திருக்கும் அன்பை நாம் அறிந்திருக்கிறோம், அதை நம்புகின்றோம்.
இறைவன் அன்பாகவே இருக்கின்றார். அன்பில் வாழ்கின்றவன், இறைவனில் வாழ்கின்றான், இறைவனும் அவனில் வாழ்கின்றார். 17இவ்விதமாய், இந்த உலகத்தில் நாம் இயேசுவைப்போல இருக்கின்றபடியால், நியாயத்தீர்ப்பு நாளில் மனவுறுதியாயிருக்கும்படி, அன்பு நமக்குள் முழுநிறைவடைகிறது. 18அன்பில் பயமில்லை. முழுநிறைவான அன்பு பயத்தை வெளியேற்றும். தண்டனைத்தீர்ப்பை குறித்தே பயமுண்டாகும். எனவே பயப்படுகின்றவன் அன்பில் முழுநிறைவானவன் அல்ல.
19அவர் முதலில் அன்பாய் இருந்ததனாலேயே, நாமும் அவரில் அன்பாயிருக்கிறோம். 20“நான் இறைவனில் அன்பாயிருக்கிறேன்” என்று சொல்லுகின்ற ஒருவன் தனது சகோதரனை வெறுத்தால் அவன் பொய்யன். ஏனெனில், தான் காண்கின்ற தன் சகோதரனில் அன்பாயிராத ஒருவன், காணாத இறைவனில் அன்பாயிருக்க முடியாது. 21இதனால், இறைவனிடத்தில் அன்பாயிருக்கின்றவன் தன் சகோதரரிடத்திலும் அன்பாயிருக்க வேண்டும் என்ற கட்டளையை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

1 யோவான் 4: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்