1 கொரிந்தியர் 13
13
1நான் பல்வேறு மனித மொழிகளிலும் இறைதூதர்களின் மொழிகளிலும் பேசினாலும் அன்பற்றவனாய் இருந்தால், நான் வெறும் பேரொலி எழுப்பும் வெண்கலம், ஓசையெழுப்பும் கைத்தாளம். 2நான் இறைவாக்கு உரைக்கும் வரத்தை உடையவனாய், எல்லா மறைபொருள்களையும் எல்லா அறிவையும் விளங்கிக்கொள்ளும் ஆற்றல் உடையவனாய் இருந்தாலும், அத்துடன் மலைகளைப் பெயர்க்கும் விசுவாசமுடையவனாய் இருந்தாலும், அன்பற்றவனாய் இருந்தால் நான் அறவே வெற்று மனிதன். 3எனது உடைமைகளை நான் ஏழைகளுக்குக் கொடுத்தாலும், எனது உடலையே நெருப்பில் எரிக்கப்படும்படி ஒப்புக்கொடுத்தாலும், நான் அன்புள்ளவனாய் இல்லாது போனால், எனக்கு எப்பயனும் இல்லை.
4அன்பு பொறுமையுள்ளது, தயவுள்ளது. அன்பு பொறாமையற்றது, தற்பெருமை பேசாது, அகந்தையாயிராது, 5வீம்புகொள்ளாது, அது தன்னலமற்றது, இலகுவில் கோபமடையாது, வன்மம் வைத்திருக்காது; 6தீமையில் மகிழ்ச்சியடையாமல், மெய்மையில் மகிழ்ச்சியடையும். 7அன்பு அனைத்தையும் தாங்கிக்கொள்ளும், அனைத்தையும் விசுவாசிக்கும், எப்போதும் எதிர்பார்ப்பு உடையதாய் இருக்கும். அன்பு அனைத்திலும் நிலைகுலையாது உறுதியாய் இருக்கும்.
8அன்பு ஒருபோதும் தோல்வியடைந்து ஓயாது, இறைவாக்கு ஓய்ந்து போகும், வேற்றுமொழிகள் ஒழிந்து போகும், அறிவும் மறைந்து போகும், 9நமது அறிவு குறைவுள்ளது, நமது இறைவாக்கு உரைத்தலும் முழுமையற்றது. 10நிறைவுள்ளது வரும்போது குறைவுள்ளது மறைந்து போகும். 11நான் சிறு பிள்ளையாய் இருந்தபோது, ஒரு சிறு பிள்ளையைப் போலவே பேசினேன். ஒரு சிறு பிள்ளையைப் போலவே சிந்தித்தேன். ஒரு சிறு பிள்ளையின் மன எண்ணமே எனக்கிருந்தது. ஆனால் நான் ஒரு முழு வளர்ச்சி பெற்ற மனிதனானபோது சிறு பிள்ளைத்தனமான வழிகளைக் கைவிட்டேன். 12இப்போது ஒரு கண்ணாடியில் தெளிவற்ற விம்பத்தைக் காண்கின்றோம். பின்னால் வரும் காலத்தில், நாம் நேருக்கு நேராகப் பார்ப்போம். இப்போது பகுதியளவே அறிந்திருக்கிறேன். பின்னால் வரும் காலத்தில் நான் முழுமையாக அறிந்துகொள்வதோடு முழுமையாக அறிந்துகொள்ளப்படுவேன்.
13இப்போது நிலைத்திருப்பவைகளான விசுவாசம், நல்ல எதிர்பார்ப்பு, அன்பு என்பவற்றுள் அன்பே மேன்மையானது.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
1 கொரிந்தியர் 13: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.