1 கொரிந்தியர் 12

12
ஆவிக்குரிய வரங்கள்
1இப்போது பிரியமானவர்களே, ஆவியானவர் அருள்பவற்றைக் குறித்து நீங்கள் அறியாமல் இருப்பதை நான் விரும்பவில்லை. 2நீங்கள் இறைவனை அறியாதவர்களாய் இருந்தபோது பேச முடியாத விக்கிரகங்களினால் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்பட்டு தவறான வழியிலே நடத்தப்பட்டீர்கள். 3ஆகவே, இறைவனின் ஆவியானவரால் பேசுகின்ற எவனும் “இயேசு சபிக்கப்பட்டவர்” என்று சொல்ல மாட்டான். அவ்வாறே பரிசுத்த ஆவியானவராலேயன்றி எவராலும், “இயேசுவே ஆண்டவர்” என்று சொல்லவும் முடியாது என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
4ஆவியானவர் அளிக்கும் வரங்கள்#12:4 வரங்கள் – பரிசுத்த ஆவியின் வல்லமையால் வரும் செயற்திறன்கள் பல்வேறு வகையானவை, ஆனால் ஆவியானவர் ஒருவரே. 5செய்யப்படும் இறைபணிகளும் பல்வேறு வகையானவை, ஆனால் கர்த்தர் ஒருவரே. 6அவற்றின் செயற்பாடுகளும் பல்வேறு வகையானவை, ஆனால் ஒரே இறைவனே அவற்றை எல்லோரிலும் செயற்படுத்துகின்றவர்.
7பொதுவான நன்மைக்காகவே ஒவ்வொருவருக்கும் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்படையான செயற்பாடு கொடுக்கப்பட்டிருக்கிறது. 8பரிசுத்த ஆவியானவர் மூலமாக ஒருவருக்கு ஞானத்தின் வார்த்தையும், இன்னொருவருக்கு அதே ஆவியானவர் மூலமாக அறிவை உணர்த்தும் வார்த்தையும், 9அதே ஆவியானவர் மூலமாக மற்றொருவருக்கு விசுவாசமும், இன்னொருவருக்கு குணமளிக்கும் வரங்களும், 10மற்றொருவருக்கு அற்புதங்களைச் செய்யும் வல்லமையும், வேறொருவருக்கு இறைவாக்கு உரைத்தலும், இன்னொருவருக்கு ஆவிகளை பகுத்தறியும் ஆற்றலும், ஒருவருக்கு ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்றுமொழிகளும், மற்றொருவருக்கு அந்தப் பல்வகையான வேற்றுமொழிகளை விளக்கிச் சொல்லும் ஆற்றலும் கொடுக்கப்படுகின்றன. 11இவையெல்லாவற்றையும், ஒரே ஆவியானவர் செயற்படுத்தி தாம் தீர்மானிக்கின்றபடியே ஒவ்வொருவருக்கும் இவற்றை பகிர்ந்து கொடுக்கின்றார்.
ஒரு உடல், பல உறுப்புகள்
12ஒரு உடல் பல அங்கங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. அங்கங்கள் பலவாயினும் ஒரே உடலாயிருப்பது போல கிறிஸ்துவும் ஒரே உடலாயிருக்கிறார். 13நாம் யூதராகவோ, கிரேக்கராகவோ, அடிமைகளாகவோ, சுதந்திரமுடைய ஒருவராகவோ இருந்தாலும் ஒரே ஆவியானவராலே ஒரே உடலுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம். நாம் பருகி அனுபவிப்பதற்கு ஒரே ஆவியானவரே கொடுக்கப்பட்டிருக்கிறார்.
14ஏனெனில், உடல் ஒரு அங்கமாயிராமல் பல அங்கங்களைக் கொண்டது.
15காலானது, “நான் கையாக இல்லாததனால், நான் உடலுக்குச் சொந்தமல்ல” என்று சொன்னால், அது உடலுக்குச் சொந்தமில்லாமல் போவதில்லை. 16காதானது, “நான் கண்ணாக இல்லாததனால் நான் உடலுக்குச் சொந்தமல்ல” என்று சொன்னால். அது உடலுக்குச் சொந்தமில்லாமல் போவதில்லை. 17முழு உடலுமே ஒரு கண்ணாயிருக்குமானால் கேட்கும் திறன் எங்கிருக்கும்? முழு உடலுமே ஒரு காதாக இருக்குமானால், அதற்கு முகரும் திறன் எங்கிருக்கும்? 18ஆனால் இறைவனோ தாம் விரும்பியபடியே உடலின் அங்கங்களை, அவை ஒவ்வொன்றையும் முறையாக ஒருங்கமைத்திருக்கிறார். 19முழு உடலுமே ஒரே அங்கமானால் அது உடலாய் இருக்க முடியுமா? 20அங்கங்கள் அநேகமாய் இருப்பினும் உடல் ஒன்றாகவே இருக்கின்றது.
21எனவே கண்ணானது கையைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்ல முடியாது. அல்லது தலையானது காலைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்ல முடியாது. 22மாறாக பலவீனமாய் காணப்படுகின்ற உடலின் அங்கங்களே நமக்கு மிகவும் அவசியமாய் இருக்கின்றன. 23உடலின் மதிப்புக் குறைந்த அங்கங்கள் என்று நாம் எவற்றை நினைக்கிறோமோ, அவற்றுக்கே நாம் அதிக மதிப்பு கொடுக்கின்றோம். உடலின் மறைவான அங்கங்களையே அதிக கண்ணியமாக எண்ணுகிறோம். 24அவ்விதமான எண்ணம் உடலின் மறைந்திராத அங்கங்களுக்குத் தேவையில்லை. ஆனால் இறைவனோ மதிப்புக் குறைந்த அங்கங்களுக்கு அதிக மதிப்பைக் கொடுத்து உடலின் அங்கங்களை ஒன்றிணைத்துள்ளார். 25ஆகவே உடலில் பிரிவினை இல்லாமல் ஒன்று மற்றொன்றில் அக்கறையாய் இருப்பதற்காகவே அவ்வாறு உருவாக்கினார். 26ஆகையால், உடலின் ஒரு அங்கம் வேதனைப்படும்போது எல்லா அங்கங்களுமே வேதனைப்படுகின்றன. ஒரு அங்கம் மேன்மை பெறும்போது மற்றெல்லா அங்கங்களும் ஒன்றுசேர்ந்து மகிழ்கின்றன.
27இப்போது நீங்கள் கிறிஸ்துவின் உடலாகவும், தனித்தனியே அதன் ஒரு அங்கமாகவும் இருக்கின்றீர்கள். 28ஆகவே, திருச்சபையிலே முதலாவதாக அப்போஸ்தலர்களையும், இரண்டாவதாக இறைவாக்கினர்களையும், மூன்றாவதாக ஆசிரியர்களையும் இறைவன் நியமித்தார். அதற்குப் பின்னால் அற்புதங்களையும், குணமாக்கும் வரங்களையும், உதவியாளர்களையும், நிர்வகிக்கும் வரங்களையும், பல்வேறு மொழி பேசுதலையும் ஏற்படுத்தினார். 29எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் இறைவாக்கினர்களா? அல்லது எல்லோரும் ஆசிரியர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கின்றார்களா? 30எல்லோரும் குணமாக்கும் வரங்களைப் பெற்றிருக்கிறார்களா? எல்லோரும் ஆவியானவரால் வேற்றுமொழிகளைப் பேசுகின்றார்களா? எல்லோரும் அவற்றை மொழிபெயர்க்கும் ஆற்றலுடையவர்களா? இல்லையே. 31அதனால் மேன்மையான வரங்களை விரும்புங்கள்.
அன்பு
இன்னும், அதிக மேன்மையான வழியை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

1 கொரிந்தியர் 12: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்