1 கொரிந்தியர் 11

11
1நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவது போல நீங்கள் என் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.
வழிபாட்டில் தலையை மூடிக்கொள்ளல்
2நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைவுகூர்ந்து, நான் உங்களுக்குக் கற்றுக் கொடுத்த சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் அதேவிதமாக பின்பற்றுவதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.
3ஒவ்வொரு மனிதனுக்கும் கிறிஸ்துவே தலைவராய் இருக்கின்றார், ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய கணவனே தலைவனாய் இருக்கின்றான், கிறிஸ்துவுக்கு இறைவனே தலைவராய் இருக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். 4எனவே தன் தலையை மூடிக்கொண்டு மன்றாடுகின்றவனோ, அல்லது இறைவாக்கு உரைக்கின்றவனோ தன் தலையை#11:4 தலையை என்பது தலைவராகிய கிறிஸ்துவை அவமதிக்கிறான். 5ஒவ்வொரு பெண்ணும் தான் மன்றாடும்போது அல்லது இறைவாக்கு உரைக்கும்போது தன் தலையை மூடிக்கொள்ளாதுவிட்டால், தன் தலையை#11:5 தலையை என்பது தலைவனை அவமதிக்கிறாள். அது அவளது தலை மொட்டையடிக்கப்பட்டதற்கு சமமாயிருக்கும். 6இவ்விதம் ஒரு பெண்#11:6 இவ்வசனத்திலும் 10,13 வசனங்களிலும் உள்ள பெண் என்ற பதம் திருமணமான பெண்ணைக் குறிக்கும். தன் தலையை மூடிக்கொள்ளாவிட்டால் அவள் தன் தலைமுடியை கட்டையாக கத்தரித்துக்கொள்ள வேண்டும். அப்படியாக, தன் தலைமுடியை கட்டையாக கத்தரித்துக்கொள்வதோ, தலையை மொட்டையடிப்பதோ அவளுக்கு அவமானமாக இருந்தால் அவள் தன் தலையை மூடிக்கொள்ள வேண்டும்.
7ஒரு ஆண் இறைவனுடைய சாயலும் மகிமையுமாய் இருக்கின்றான். எனவே தன் தலையை மூடிக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் ஒரு பெண்ணோ ஆணின் மகிமையாய் இருக்கின்றாள். 8ஏனெனில் பெண்ணிலிருந்து ஆண் படைக்கப்படவில்லை, ஆணிலிருந்தே பெண்ணானவள் படைக்கப்பட்டாள். 9அத்தோடு, பெண்ணுக்காக ஆண் படைக்கப்படவில்லை. ஆணுக்காகவே பெண்ணானவள் படைக்கப்பட்டாள். 10எனவே தூதர்களின் பொருட்டு ஒரு பெண் அதிகாரத்துக்குட்பட்டவள் என்பதைக் காட்ட தன் தலையின்மேல் அதிகாரத்தின் அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும்.#11:10 அன்றைய கலாசாரத்தில், ஒரு பெண் தான் தனது கணவனின் அதிகாரத்துக்குட்பட்டவள் அல்லது மணமுடித்தவள் என்பதைக் காட்ட வேண்டியிருந்தது.
11எவ்வாறாயினும் கர்த்தருக்குள் ஆண் இல்லாமல் பெண்ணோ, பெண் இல்லாமல் ஆணோ இல்லை. 12ஏனெனில் ஆணிலிருந்து பெண் படைக்கப்பட்டது போலவே பெண்ணிலிருந்து ஆண் பிறக்கிறான். ஆனால் எல்லாம் இறைவனிடத்திலிருந்தே வருகின்றன.
13ஒரு பெண் வழிபாட்டின்போது தலையை மூடிக்கொள்ளாமல் இறைவனை நோக்கி மன்றாடுவது தகுதியானதோ? நீங்களே தீர்மானியுங்கள். 14ஒரு மனிதன் தன் தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால் அது அவனுக்குத் தகுந்தது அல்ல என்று இயற்கையும் போதிக்கிறதே? 15ஆனால், ஒரு பெண் தனது தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால், அது அவளுக்கு மகிமையாயிருக்கும். நீளமான தலைமுடியே அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 16இதைக் குறித்து யாரேனும் விவாதிக்க விரும்பினால் எங்களுக்கோ இறைவனின் திருச்சபைக்கோ அப்படிப்பட்ட வழக்கம் இல்லை என்று அறியுங்கள்.
ஆண்டவரின் திருவிருந்து
17நான் உங்களுக்குக் கூறும் பின்வரும் அறிவுரைகளில் உங்களைப் புகழப் போவதில்லை, ஏனெனில் நீங்கள் ஒன்றுகூடி வருவது நன்மையைவிட தீமையையே உண்டாக்குகின்றது. 18முதலாவதாக, நீங்கள் திருச்சபையாக ஒன்றுகூடும்போது உங்களிடையே பிரிவினைகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அதை நான் ஓரளவு நம்புகிறேன். 19உங்களில் உண்மையானவர்கள் யார் என்று அறியும் பொருட்டு உங்கள் மத்தியில் பிரிவினைகள் இருக்க வேண்டியது அவசியம். 20நீங்கள் ஒன்றுகூடும்போது உண்பது ஆண்டவருடைய திருவிருந்து அல்ல. 21ஏனெனில் நீங்கள் அதை உட்கொள்ளும் வேளையில் ஒருவன் மற்றவனுக்காக காத்திராமல் சொந்த உணவை முந்தி உட்கொள்கிறான். இதனால் ஒருவன் பசியாயிருக்கிறான், மற்றொருவன் குடிவெறியில் இருக்கின்றான். 22உண்ணவும் குடிக்கவும் உங்களுக்கு வீடுகள் இல்லையோ? நீங்கள் இறைவனுடைய திருச்சபையை அவமதித்து, எளியவர்களை வெட்கத்துக்கு உள்ளாக்குகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்வேன்? இதைக் குறித்து நான் உங்களைப் பாராட்டுவேனா? நிச்சயமாக இல்லை.
23ஆண்டவர் எனக்குக் கற்றுக் கொடுத்ததையே நான் உங்களுக்கு ஒப்புவித்தேன். ஆண்டவர் இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட இரவிலே அப்பத்தை எடுத்து, 24நன்றி செலுத்திய பின்பு, அவர் அதைத் துண்டுகளாக்கி, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகின்ற என்னுடைய உடல், என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார். 25அவ்விதமாகவே உணவருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, “இந்தக் கிண்ணம், என்னுடைய இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை. இதை நீங்கள் அருந்தும் போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார். 26ஏனெனில், நீங்கள் இந்த அப்பத்தை உட்கொண்டு, இந்தக் கிண்ணத்தில் அருந்தும் போதெல்லாம், ஆண்டவர் மீண்டும் வரும்வரை அவருடைய மரணத்தை பிரசித்தப்படுத்துகிறீர்கள்.
27ஆகையால், எவனாவது தகுதியற்ற விதத்தில் அப்பத்தை உட்கொண்டு, ஆண்டவருடைய கிண்ணத்தில் அருந்தினால் அவன் ஆண்டவருடைய உடலுக்கும் அவருடைய இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் செய்கின்றவனாயிருப்பான். 28எனவே, ஒவ்வொருவனும் அப்பத்தை உட்கொண்டு, கிண்ணத்திலிருந்து அருந்தும் முன் தன்னை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 29ஏனெனில், ஒருவன் ஆண்டவருடைய உடல் என்ற உணர்வு இல்லாமல் இதை உட்கொண்டு அருந்துவானாயின், அவன் தன் மேல் நியாயத்தீர்ப்பை வரவழைத்துக் கொள்கின்றான். 30இதனாலேயே உங்களில் பலர் பலவீனப்பட்டும், வியாதிப்பட்டும் இருக்கின்றனர், உங்களில் சிலர் மரணமடைந்தும் உள்ளார்கள். 31ஆகவே, நம்மை நாமே ஆராய்ந்தறிந்தால் நாம் நியாயத்தீர்ப்புக்கு உள்ளாக மாட்டோம். 32அப்படியிருந்தும் நாம் கர்த்தரால் இப்போது நியாயம் தீர்க்கப்படும்போது, நாம் அவரால் தண்டிக்கப்பட்டு சீர்ப்படுத்தப்படுகிறோம். இதனால், நாம் உலகத்தவர்களோடு குற்றவாளிகளாய்த் தீர்க்கப்பட மாட்டோம்.
33ஆகையால் பிரியமானவர்களே, நீங்கள் திருச்சபையாக உண்பதற்கு ஒன்றுகூடி வரும்போது ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். 34ஒருவன் பசியாயிருந்தால் அவன் வீட்டிலேயே உண்ண வேண்டும். அப்போது நீங்கள் ஒன்றுகூடி வரும்போது குற்றவாளியாக தீர்க்கப்பட மாட்டீர்கள்.
மற்ற விடயங்களைக் குறித்த அறிவுரைகளை நான் வரும்போது உங்களுக்குத் தருகிறேன்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

1 கொரிந்தியர் 11: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்