ரோமர் 8:1-21

ரோமர் 8:1-21 TCV

ஆகவே, இப்பொழுது கிறிஸ்து இயேசுவில் இருக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லவேயில்லை. ஏனெனில் கிறிஸ்து இயேசுவின் மூலமாக, வாழ்வைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரின் சட்டமானது, பாவ சட்டத்திலிருந்தும் மரண சட்டத்திலிருந்தும் என்னை விடுதலையாக்கிற்று. மோசேயின் சட்டம் நமது மாம்ச இயல்பின் காரணமாக பலவீனமடைந்ததினால், எந்த வேலையைச் செய்துமுடிக்க வல்லமையற்றுப் போயிற்றோ, அதை இறைவனே செய்து முடித்தார். எப்படியென்றால் பாவநிவாரண பலியாக இறைவன் தனது சொந்த மகனை ஒரு பாவ மனிதனின் சாயலில் அனுப்பி, பாவம் உள்ள மனிதனிலிருந்த பாவத்தின் ஆற்றலை இல்லாதொழித்தார். மாம்ச இயல்பின்படி வாழாமல், ஆவியானவரின் வழிநடத்துதலில் வாழும் நம்மில், மோசேயின் சட்டத்தின் நியாயமான கட்டளைகளை நிறைவேற்றும்படியே இப்படிச் செய்தார். மாம்ச இயல்பின்படி வாழ்கிறவர்கள், தங்கள் மனங்களை அந்த இயல்பின் ஆசைகளிலேயே பதித்திருக்கிறார்கள்; ஆனால் பரிசுத்த ஆவியானவருடைய இயல்பின்படி வாழ்கிறவர்களோ, ஆவியானவர் விரும்பும் காரியங்களிலேயே தங்கள் மனதைப் பதித்திருக்கிறார்கள். மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டுள்ள மனமோ மரணம். பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்கு அடங்கிய மனமோ வாழ்வையும் சமாதானத்தையும் கொடுக்கிறது. மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டுள்ள மனம் இறைவனுடன் பகைமை கொண்டுள்ளது. அது இறைவனின் சட்டத்திற்கு அடங்கி நடப்பதில்லை. அதற்கு அப்படி அடங்கி நடக்கவும் முடியாது. மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டு இருக்கிறவர்களால் இறைவனைப் பிரியப்படுத்தமுடியாது. ஆனால் நீங்களோ, மாம்ச இயல்பின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர்கள் அல்ல. ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களில் குடியிருந்தால், நீங்கள் ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர்களே. யாராவது கிறிஸ்து இயேசுவின் பரிசுத்த ஆவியானவர் இல்லாதவர்களாயிருந்தால், அவர்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் அல்ல. கிறிஸ்து உங்களில் இருந்தால், உங்கள் உடல் பாவத்தின் நிமித்தம் மரித்திருந்தாலும், உங்கள் ஆவியோ, நீதியின் நிமித்தம் உயிர்பெற்றிருக்கிறது. இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பிய இறைவனுடைய பரிசுத்த ஆவியானவர் உங்களில் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பிய அவர் இறைவன், உங்களில் குடிகொண்டிருக்கும் தமது பரிசுத்த ஆவியானவர் மூலமாய், சாகும் தன்மையுள்ள உங்கள் உடல்களுக்கு உயிர் கொடுப்பார். ஆகையால் பிரியமானவர்களே, நாம் நம்முடைய மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டு அதன்படி வாழ நமக்கு கடமை இல்லை. ஏனெனில் மாம்ச இயல்புக்கு ஏற்றபடி நீங்கள் வாழ்ந்தால், நீங்கள் சாவீர்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு, உங்கள் உடல் செய்யும் பாவ செயல்களைச் சாகடிப்பீர்களானால், நீங்கள் வாழ்வீர்கள். ஏனெனில் இறைவனின் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறவர்களே, இறைவனின் மகன்களாய் இருக்கிறார்கள். நீங்களோ, உங்களைத் திரும்பவும் பயத்திற்கு அடிமையாக்குகின்ற ஆவியைப் பெறவில்லை, ஆனால், உங்களை “பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கின்ற” பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கிறீர்கள். அதனாலேயே நாம், “அப்பா, பிதாவே” என்று கூப்பிடுகிறோம். நாம் இறைவனுடைய பிள்ளைகள் என்று பரிசுத்த ஆவியானவரே நம்முடைய ஆவியோடு சேர்ந்து சாட்சி கொடுக்கிறார். நாம் இப்பொழுது இறைவனுடைய பிள்ளைகளாய் இருப்பதானால் நாம் உரிமையாளர்களாயும் இருக்கிறோம். நாம் இறைவனுடைய உரிமையாளர்களாயும், கிறிஸ்துவோடு உடன் உரிமையாளர்களாயும் இருக்கிறோம். நாம் அவருடைய பாடுகளில் பங்குகொள்கின்றபடியால் நாம் அவருடைய மகிமையிலும் பங்குகொள்வோம். தற்காலத்தில் நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் நம்மில் வெளிப்படப்போகின்ற அந்த மகிமையோடு, ஒப்பிடத்தக்கதல்ல என்றே நான் எண்ணுகிறேன். இறைவனுடைய மகன்கள் வெளிப்படுவதைக் காண படைக்கப்பட்டவை எல்லாமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றன. படைக்கப்பட்டவை அழிந்துபோகிறது. ஆனால், தங்கள் சொந்த விருப்பத்தினால் அல்ல, இறைவனின் சித்தத்தின்படியே அப்படி இருக்கின்றன; இப்படி படைக்கப்பட்டவை எல்லாம் அழிவை ஏற்படுத்தும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு இறைவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்திற்குள் பங்குகொள்ளும் நம்பிக்கையுடன் இருக்கிறது.

ரோமர் 8:1-21 க்கான வீடியோ