ரோமர் 8:1-21

ரோமர் 8:1-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகவே, இப்பொழுது கிறிஸ்து இயேசுவில் இருக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லவேயில்லை. ஏனெனில் கிறிஸ்து இயேசுவின் மூலமாக, வாழ்வைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரின் சட்டமானது, பாவ சட்டத்திலிருந்தும் மரண சட்டத்திலிருந்தும் என்னை விடுதலையாக்கிற்று. மோசேயின் சட்டம் நமது மாம்ச இயல்பின் காரணமாக பலவீனமடைந்ததினால், எந்த வேலையைச் செய்துமுடிக்க வல்லமையற்றுப் போயிற்றோ, அதை இறைவனே செய்து முடித்தார். எப்படியென்றால் பாவநிவாரண பலியாக இறைவன் தனது சொந்த மகனை ஒரு பாவ மனிதனின் சாயலில் அனுப்பி, பாவம் உள்ள மனிதனிலிருந்த பாவத்தின் ஆற்றலை இல்லாதொழித்தார். மாம்ச இயல்பின்படி வாழாமல், ஆவியானவரின் வழிநடத்துதலில் வாழும் நம்மில், மோசேயின் சட்டத்தின் நியாயமான கட்டளைகளை நிறைவேற்றும்படியே இப்படிச் செய்தார். மாம்ச இயல்பின்படி வாழ்கிறவர்கள், தங்கள் மனங்களை அந்த இயல்பின் ஆசைகளிலேயே பதித்திருக்கிறார்கள்; ஆனால் பரிசுத்த ஆவியானவருடைய இயல்பின்படி வாழ்கிறவர்களோ, ஆவியானவர் விரும்பும் காரியங்களிலேயே தங்கள் மனதைப் பதித்திருக்கிறார்கள். மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டுள்ள மனமோ மரணம். பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்கு அடங்கிய மனமோ வாழ்வையும் சமாதானத்தையும் கொடுக்கிறது. மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டுள்ள மனம் இறைவனுடன் பகைமை கொண்டுள்ளது. அது இறைவனின் சட்டத்திற்கு அடங்கி நடப்பதில்லை. அதற்கு அப்படி அடங்கி நடக்கவும் முடியாது. மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டு இருக்கிறவர்களால் இறைவனைப் பிரியப்படுத்தமுடியாது. ஆனால் நீங்களோ, மாம்ச இயல்பின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர்கள் அல்ல. ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களில் குடியிருந்தால், நீங்கள் ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர்களே. யாராவது கிறிஸ்து இயேசுவின் பரிசுத்த ஆவியானவர் இல்லாதவர்களாயிருந்தால், அவர்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் அல்ல. கிறிஸ்து உங்களில் இருந்தால், உங்கள் உடல் பாவத்தின் நிமித்தம் மரித்திருந்தாலும், உங்கள் ஆவியோ, நீதியின் நிமித்தம் உயிர்பெற்றிருக்கிறது. இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பிய இறைவனுடைய பரிசுத்த ஆவியானவர் உங்களில் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பிய அவர் இறைவன், உங்களில் குடிகொண்டிருக்கும் தமது பரிசுத்த ஆவியானவர் மூலமாய், சாகும் தன்மையுள்ள உங்கள் உடல்களுக்கு உயிர் கொடுப்பார். ஆகையால் பிரியமானவர்களே, நாம் நம்முடைய மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டு அதன்படி வாழ நமக்கு கடமை இல்லை. ஏனெனில் மாம்ச இயல்புக்கு ஏற்றபடி நீங்கள் வாழ்ந்தால், நீங்கள் சாவீர்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு, உங்கள் உடல் செய்யும் பாவ செயல்களைச் சாகடிப்பீர்களானால், நீங்கள் வாழ்வீர்கள். ஏனெனில் இறைவனின் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறவர்களே, இறைவனின் மகன்களாய் இருக்கிறார்கள். நீங்களோ, உங்களைத் திரும்பவும் பயத்திற்கு அடிமையாக்குகின்ற ஆவியைப் பெறவில்லை, ஆனால், உங்களை “பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கின்ற” பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கிறீர்கள். அதனாலேயே நாம், “அப்பா, பிதாவே” என்று கூப்பிடுகிறோம். நாம் இறைவனுடைய பிள்ளைகள் என்று பரிசுத்த ஆவியானவரே நம்முடைய ஆவியோடு சேர்ந்து சாட்சி கொடுக்கிறார். நாம் இப்பொழுது இறைவனுடைய பிள்ளைகளாய் இருப்பதானால் நாம் உரிமையாளர்களாயும் இருக்கிறோம். நாம் இறைவனுடைய உரிமையாளர்களாயும், கிறிஸ்துவோடு உடன் உரிமையாளர்களாயும் இருக்கிறோம். நாம் அவருடைய பாடுகளில் பங்குகொள்கின்றபடியால் நாம் அவருடைய மகிமையிலும் பங்குகொள்வோம். தற்காலத்தில் நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் நம்மில் வெளிப்படப்போகின்ற அந்த மகிமையோடு, ஒப்பிடத்தக்கதல்ல என்றே நான் எண்ணுகிறேன். இறைவனுடைய மகன்கள் வெளிப்படுவதைக் காண படைக்கப்பட்டவை எல்லாமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றன. படைக்கப்பட்டவை அழிந்துபோகிறது. ஆனால், தங்கள் சொந்த விருப்பத்தினால் அல்ல, இறைவனின் சித்தத்தின்படியே அப்படி இருக்கின்றன; இப்படி படைக்கப்பட்டவை எல்லாம் அழிவை ஏற்படுத்தும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு இறைவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்திற்குள் பங்குகொள்ளும் நம்பிக்கையுடன் இருக்கிறது.

ரோமர் 8:1-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆனபடியால், கிறிஸ்து இயேசுவிற்கு உட்பட்டவர்களாக இருந்து, சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை. ஜீவனுடைய ஆவியானவரின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிற்குள் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கினதே. அது எப்படியென்றால், சரீரத்தினாலே பலவீனமாக்கப்பட்ட நியாயப்பிரமாணம் செய்யமுடியாததை தேவனே செய்வதற்காக, தம்முடைய குமாரனைப் பாவசரீரத்தின் சாயலாகவும், பாவத்தை நீக்கும் பலியாகவும் அனுப்பி, சரீரத்திலே பாவத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்த்தார். சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிற நம்மிடம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுவதற்காகவே அப்படிச் செய்தார். அன்றியும் சரீரத்தின்படி நடக்கிறவர்கள் சரீரத்திற்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்கள் ஆவியானவருக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். சரீரசிந்தை மரணம்; ஆவியானவரின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாகும். எப்படியென்றால், சரீரசிந்தை தேவனுக்கு எதிரான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியமுடியாமலும் இருக்கிறது. சரீரத்திற்கு உட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாக இருக்கமாட்டார்கள். தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், நீங்கள் சரீரத்திற்கு உட்பட்டவர்களாக இல்லாமல் ஆவியானவருக்கு உட்பட்டவர்களாக இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியானவர் இல்லாதவன் அவருடையவன் இல்லை. மேலும் கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் இறந்ததாகவும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாகவும் இருக்கும். அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவருடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவர் உங்களுக்குள் வாழ்கிற தம்முடைய ஆவியானவராலே மரணத்திற்குரிய உங்களுடைய சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். எனவே, சகோதரர்களே, சரீரத்தின்படி பிழைப்பதற்கு நாம் சரீரத்திற்குக் கடனாளிகள் இல்லை. சரீரத்தின்படி பிழைத்தால் இறப்பீர்கள்; ஆவியானவராலே சரீரத்தின் செயல்களை அழித்தால் பிழைப்பீர்கள். மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியானவராலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறார்கள். அப்படியே, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், ஆவியானவரால், அப்பா பிதாவே என்று கூப்பிடக்கூடிய பிள்ளை என்கிற உரிமையைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே சாட்சிக் கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் வாரிசுகளுமாமே; தேவனுடைய வாரிசுகளும், கிறிஸ்துவிற்கு உடன் வாரிசுகளுமாமே; கிறிஸ்துவோடு நாம் மகிமைப்படுவதற்காக அவரோடு பாடுபட்டால் அப்படி ஆகும். ஆதலால் இந்தக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடம் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடக்கூடியவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். மேலும் தேவனுடைய குமாரர்கள் வெளிப்படுத்தப்படுவதற்காக தேவனுடைய படைப்புகள் அதிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது. அது என்னவென்றால் படைப்புகள் அழிவிற்குரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடு, அந்தப் படைப்புகள் சொந்த இஷ்டத்தினாலே இல்லை, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

ரோமர் 8:1-21 பரிசுத்த பைபிள் (TAERV)

எனவே, இப்போது இயேசுகிறிஸ்துவுக்குள் இருப்பவர்கள் தண்டனைக்குரியவர்களாகத் தீர்ப்பளிக்கப்படமாட்டார்கள். ஏன் நான் அவ்வாறு தீர்ப்பளிக்கப்படமாட்டேன்? ஏனென்றால் இயேசு கிறிஸ்துவிற்குள் உயிருள்ள ஆவியின் சட்டவிதி என்னைப் பாவம், மரணம் என்பவைகளின் சட்ட விதிகளிடமிருந்து விடுதலை செய்கிறது. சட்ட விதிக்கு சக்தி இல்லை. ஏனென்றால் அது மனித பெலவீனங்களால் வரையறுக்கப்பட்டது. சட்ட விதியால் செய்ய முடியாததை தேவன் செய்து முடிக்கிறார். தேவன் தன் சொந்தக் குமாரனையே பூமிக்குப் பாவமனித சாயலாக அனுப்பினார். அவரை பாவத்தைப் போக்கும் பலியாகவும் கருதினார். எனவே மனித வாழ்க்கை மூலம் பாவத்தை அழித்தார். தேவன் அதனை சட்டவிதியின் நீதி நம்மிடம் நிறைவேறும்படிக்கே இவ்வாறு செய்தார். இப்பொழுது நாம் நமது மாம்சத்தின்படி நடக்காமல் ஆவியைப் பின்பற்றி வாழ்கிறோம். மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்திற்கு உரியவற்றைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். ஆவியைப் பின்பற்றி நடக்கிறவர்கள் ஆவிக்குரியதை மட்டுமே சிந்திக்கிறார்கள். ஒருவனது சிந்தனையானது பாவத்தால் கட்டுப்படுத்தப்படுமானால் அவன் சாவை அடைகிறான். ஒருவனது சிந்தையானது ஆவியால் கட்டுப்படுத்தப்படுமானால் அவன் நல்வாழ்வையும், சமாதானத்தையும் அடைகிறான். எப்படியென்றால் மாம்ச எண்ணம் தேவனுக்கு எதிரான பகையாகின்றது. அவன் தேவனுடைய சட்டவிதிகளுக்குக் கட்டுப்பட மறுக்கிறான். உண்மையில் அவனால் கீழ்ப்படியவும் முடியாமல் போகின்றது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்கு வேண்டியவர்களாக முடியாது. தேவனுடைய ஆவி உங்களிடம் வாழ்ந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள். ஆவிக்குட்பட்டவர்களாய் இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவன் அல்ல. உங்கள் பாவத்தால் சரீரமானது இறந்து போகும். ஆனால் கிறிஸ்து உங்களில் இருந்தால் ஆவி உங்களுக்கு நல் வாழ்வைக் கொடுக்கும். ஏனென்றால் கிறிஸ்து உங்களை தேவனோடு சரியாக்கினார். தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். தேவனுடைய ஆவி உங்களில் இருக்குமானால் பின்னர் அவர் சரீரத்திற்கும் உயிர் தருவார். தேவன் ஒருவரே இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பியவர். அவர் உங்கள் சரீரங்களுக்கும் உங்களுக்குள் உள்ள ஆவியின் மூலம் உயிர்தருவார். சகோதர சகோதரிகளே, நாம் நமது மாம்சங்களால் ஆளப்படக் கூடாது. நமது மாம்சங்களின் விருப்பப்படியும் இருக்கக் கூடாது. பாவம் தூண்டும் தவறான செயல்களைச் செய்ய உங்கள் வாழ்வு பயன்படுமானால் நீங்கள் ஆவிக்குரிய நிலையில் இறந்தவர்களாவீர்கள். ஆனால் நீங்கள் ஆவியின் உதவியோடு தீமை செய்வதை நிறுத்தினால் உண்மையான வாழ்வைப் பெறுவீர்கள். எவரெல்லாம் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். நம்மை மீண்டும் அடிமைப்படுத்தி அச்சமூட்டுகிற ஆவியைப் நாம் பெறவில்லை. தேவனுடைய பிள்ளைகளாக நம்மை உருவாக்கும் ஆவியைப் பெறுகிறோம். அப்படிப் பெற்றால் “என் அன்பான பிதாவே” என்று அழைக்கும் உரிமையைப் பெறுவோம். ஆவியானவர் நம்முடைய ஆவியோடு சேர்ந்துகொண்டு நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் என்று சாட்சி கொடுக்கிறார். நாம் தேவனுடைய பிள்ளைகளானால், தேவன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருக்கிற மகிமையை நாம் பெறுவோம். நாம் அவற்றை தேவனிடமிருந்து பெறுவோம். கிறிஸ்துவிடம் உள்ள அதே மகிமையும் நமக்குக் கிடைக்கும். ஆனால் கிறிஸ்து துன்பப்பட்டது போன்று நாமும் படவேண்டியதிருக்கும். இப்பொழுது துன்பப்படுகிறோம். ஆனால் நமக்குக் கொடுக்கப்படப் போகும் சிறப்பை நிகழ்காலத் துன்பத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இத்துன்பம் ஒன்றுமில்லாமல் போகும். தேவனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் தேவன் தன் பிள்ளைகள் யாரென்பதை வெளிப்படுத்தப் போகும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கின்றன. அவை அதனைப் பெரிதும் விரும்புகின்றன. தேவனால் படைக்கப்பட்ட அனைத்தும் பயனற்றவையாக மாற்றப்பட்டுள்ளன. அவை மாற்றமடைய விரும்பாவிட்டாலும் தேவன் அவற்றை மாற்றிவிட முடிவு செய்துள்ளார். ஆனாலும் “தேவனால் படைக்கப்பட்டவையெல்லாம் அழிவிலிருந்து விடுதலை பெறும்” என்ற நம்பிக்கையுண்டு. தேவன் படைத்த எல்லாம், தேவனுடைய பிள்ளைகளுக்குரிய விடுதலையையும், மகிமையையும் பெறும் என்ற நம்பிக்கையும் உண்டு.

ரோமர் 8:1-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல. மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

ரோமர் 8:1-21

ரோமர் 8:1-21 TAOVBSIரோமர் 8:1-21 TAOVBSI