லூக் 2:25-38

லூக் 2:25-38 IRVTAM

அப்பொழுது சிமியோன் என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாகவும், இஸ்ரவேல் மக்களுக்கு ஆறுதல் கொடுப்பவர் வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டும் இருந்தான்; பரிசுத்த ஆவியானவர் அவனோடுகூட இருந்தார். கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காண்பதற்கு முன்பே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியானவராலே அவனுக்கு அறிவிக்கப்பட்டும் இருந்தது. சிமியோன் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் தேவாலயத்திற்கு வந்தான். இயேசு என்னும் குழந்தைக்காக நியாயப்பிரமாண முறையின்படி செய்ய அவருடைய பெற்றோர் அவரை உள்ளே கொண்டுவரும்போது, சிமியோன் இயேசுவைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: “ஆண்டவரே, உமது வார்த்தையின்படி நான் இப்பொழுது சமாதானத்தோடு உயிரை விடுவேன்; யூதரல்லாதவர்களுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் எல்லா மக்களுக்கும் முன்பாக நீர் ஆயத்தம்பண்ணி, அனுப்பின இரட்சகரை என் கண்களால் பார்த்தேன்” என்றான். இயேசுவைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் மரியாளும் ஆச்சரியப்பட்டார்கள். பின்பு சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளைப் பார்த்து: இதோ, இந்தக் குழந்தையினாலே, இஸ்ரவேலில் அநேகர் தேவனைவிட்டு விலகுவதற்கும், தேவனிடத்தில் வருவதற்கும், மக்களால் விரோதமாகப் பேசப்படும் அவர்களை எச்சரிக்கும் ஒரு அடையாளமாகவும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். முடிவிலே, தேவனைப்பற்றி அநேக இருதயங்களின் சிந்தனைகள் வெளிப்படும். உன் இருதயம் பட்டயத்தினால் குத்தப்பட்டதுபோல வேதனைப்படும் என்றான். ஆசேருடைய கோத்திரத்தைச் சேர்ந்த, பானுவேலின் மகளாகிய அன்னாள் என்ற பெயர்கொண்ட வயதான ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் திருமணம்செய்து ஏழுவருடங்கள்மட்டுமே புருஷனோடு வாழ்ந்தாள். எண்பத்து நான்கு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தைவிட்டுப் போகாமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள். அவளும் அந்த நேரத்திலே வந்து, கர்த்த்தரைப் புகழ்ந்து, எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லோருக்கும் இயேசுவைக்குறித்துப் பேசினாள்.