லூக்கா 2:25-38

லூக்கா 2:25-38 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது எருசலேமில் சிமியோன் என அழைக்கப்பட்ட ஒருவன் இருந்தான்; அவன் நீதிமானும் இறை பக்தி உள்ளவனுமாயிருந்தான். பரிசுத்த ஆவியானவர் அவன்மேல் இருந்தார்; அவன் இஸ்ரயேலர்களுக்கு ஆறுதல் அளிப்பவரின் வருகைக்காகக் காத்திருந்தான். கர்த்தருடைய கிறிஸ்துவைக் காணுமுன் அவன் இறந்து போகமாட்டான் என்று பரிசுத்த ஆவியானவரால் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அன்று சிமியோன் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு, ஆலயத்திற்குள் வந்திருந்தான். பிள்ளையாகிய இயேசுவுக்கு மோசேயின் சட்ட வழக்கத்தின்படி செய்வதற்காக, அவருடைய பெற்றோர் அவரை உள்ளே கொண்டுவந்தார்கள். அப்பொழுது சிமியோன் அவரைத் தனது கையில் எடுத்து, இறைவனைத் துதித்துச் சொன்னதாவது: “ஆண்டவரே, நீர் வாக்குறுதி தந்தபடியே, உமது வேலைக்காரனாகிய என்னைச் சமாதானத்துடன் போகும்படி இப்பொழுது அனுப்பும். ஏனெனில் எனது கண்கள் உமது இரட்சிப்பைக் கண்டன; இந்த இரட்சிப்பை எல்லா மக்களின் பார்வையிலும் நீர் ஆயத்தமாக்கியிருக்கிறீர்: இது யூதரல்லாதவருக்கு வெளிப்படுத்துதலைக் கொடுக்கும் ஒரு ஒளி, உமது மக்களான இஸ்ரயேலரின் மகிமை” என்றான். குழந்தையின் தகப்பனும் தாயும் அவரைப்பற்றிச் சொல்லப்பட்டதைக் குறித்து வியப்படைந்தார்கள். அப்பொழுது சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, குழந்தையின் தாயாகிய மரியாளுக்குச் சொன்னதாவது: “இஸ்ரயேலில் பலர் வீழ்வதற்கும் பலர் எழுந்திருப்பதற்கும் காரணமாக இந்தக் குழந்தை நியமிக்கப்பட்டிருக்கிறது. பலருக்கு எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இதனால் அநேகருடைய இருதயத்தின் சிந்தனைகள் வெளிப்படுத்தப்படும். உனது ஆத்துமாவையும் ஒரு வாள் ஊடுருவிச் செல்லும்” என்றான். ஆலயத்தில் அன்னாள் எனப்பட்ட ஒரு இறைவாக்கினள் இருந்தாள். இவள் ஆசேர் கோத்திரத்தைச் சேர்ந்த பானுவேலின் மகள். இவள் மிகவும் வயது சென்றவள்; தனது திருமணத்திற்குப்பின் ஏழு வருடங்களே தனது கணவனுடன் வாழ்ந்திருந்தாள். அதற்குப் பின்பு எண்பத்து நான்கு வயது வரைக்கும் அவள் விதவையாகவே இருந்தாள். அவள் ஒருபோதும் ஆலயத்தைவிட்டு விலகாமல், இரவும் பகலும் உபவாசத்துடனும் மன்றாட்டுடனும் வழிபட்டுக் கொண்டிருந்தாள். அந்த வேளையில் அவள் அங்கு வந்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, எருசலேமின் மீட்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த எல்லோருடனும் அந்தக் குழந்தையைக் குறித்துப் பேசினாள்.

லூக்கா 2:25-38 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது சிமியோன் என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாகவும், இஸ்ரவேல் மக்களுக்கு ஆறுதல் கொடுப்பவர் வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டும் இருந்தான்; பரிசுத்த ஆவியானவர் அவனோடுகூட இருந்தார். கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காண்பதற்கு முன்பே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியானவராலே அவனுக்கு அறிவிக்கப்பட்டும் இருந்தது. சிமியோன் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் தேவாலயத்திற்கு வந்தான். இயேசு என்னும் குழந்தைக்காக நியாயப்பிரமாண முறையின்படி செய்ய அவருடைய பெற்றோர் அவரை உள்ளே கொண்டுவரும்போது, சிமியோன் இயேசுவைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: “ஆண்டவரே, உமது வார்த்தையின்படி நான் இப்பொழுது சமாதானத்தோடு உயிரை விடுவேன்; யூதரல்லாதவர்களுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் எல்லா மக்களுக்கும் முன்பாக நீர் ஆயத்தம்பண்ணி, அனுப்பின இரட்சகரை என் கண்களால் பார்த்தேன்” என்றான். இயேசுவைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் மரியாளும் ஆச்சரியப்பட்டார்கள். பின்பு சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளைப் பார்த்து: இதோ, இந்தக் குழந்தையினாலே, இஸ்ரவேலில் அநேகர் தேவனைவிட்டு விலகுவதற்கும், தேவனிடத்தில் வருவதற்கும், மக்களால் விரோதமாகப் பேசப்படும் அவர்களை எச்சரிக்கும் ஒரு அடையாளமாகவும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். முடிவிலே, தேவனைப்பற்றி அநேக இருதயங்களின் சிந்தனைகள் வெளிப்படும். உன் இருதயம் பட்டயத்தினால் குத்தப்பட்டதுபோல வேதனைப்படும் என்றான். ஆசேருடைய கோத்திரத்தைச் சேர்ந்த, பானுவேலின் மகளாகிய அன்னாள் என்ற பெயர்கொண்ட வயதான ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் திருமணம்செய்து ஏழுவருடங்கள்மட்டுமே புருஷனோடு வாழ்ந்தாள். எண்பத்து நான்கு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தைவிட்டுப் போகாமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள். அவளும் அந்த நேரத்திலே வந்து, கர்த்த்தரைப் புகழ்ந்து, எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லோருக்கும் இயேசுவைக்குறித்துப் பேசினாள்.

லூக்கா 2:25-38 பரிசுத்த பைபிள் (TAERV)

எருசலேமில் சிமியோன் என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் வாழ்ந்தான். அவன் நல்லவனும், பக்திமானுமாக இருந்தான். தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு உதவும் காலத்தை சிமியோன் எதிர்பார்த்திருந்தான். பரிசுத்த ஆவியானவர் அவனோடு இருந்தார். கர்த்தரிடமிருந்து வரும் கிறிஸ்துவைக் காணுமட்டும் அவன் மரிப்பதில்லை என்று பரிசுத்த ஆவியனவர் சிமியோனுக்குக் கூறியிருந்தார். ஆவியானவர் சிமியோனை தேவாலயத்திற்குள் அழைத்து வந்தார். செய்யவேண்டியவற்றை நிறைவேற்றுவதற்காக மரியாளும், யோசேப்பும் தேவாலயத்திற்குள் சென்றனர். அவர்கள் குழந்தையாகிய இயேசுவை தேவாலயத்திற்குள் கொண்டு வந்தனர். சிமியோன் குழந்தையைத் தன் கரங்களில் தூக்கிக்கொண்டு, “ஆண்டவரே! இப்போது, உம் ஊழியனாகிய என்னை நீர் கூறியபடியே அமைதியாக மரிக்க அனுமதியும். நீர் நல்கும் இரட்சிப்பை என் கண்களால் கண்டேன். நீர் அவரை எல்லா மக்களுக்கும் முன்பாக ஆயத்தப்படுத்தினீர். யூதரல்லாத மக்களுக்கு உம் வழியைக் காட்டும் ஒளி அவர். உம் மக்களாகிய இஸ்ரவேலுக்கு பெருமையை அவர் தருவார்” என்று தேவனுக்கு நன்றி செலுத்தினான். இயேசுவின் தந்தையும், தாயும் சிமியோன் இயேசுவைக் குறித்துக் கூறியதைக் கேட்டு வியந்தனர். சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து இயேசுவின் தாயாகிய மரியாளிடம், “இந்தப் பாலகனின் நிமித்தமாக யூதர்கள் விழுவர்; பலர் எழுவர். சிலரால் ஏற்றுக்கொள்ளப்படாத தேவனின் அடையாளமாக இவர் இருப்பார். இரகசியமாக மக்கள் நினைப்பவை வெளியரங்கமாகும். நடக்கவிருக்கும் காரியங்கள் உங்கள் மனதை மிகவும் துக்கப்படுத்தும்” என்றான். தேவாலயத்தில் அன்னாள் என்னும் பெண் தீர்க்கதரிசி இருந்தாள். அவள் ஆசேர் என்னும் கோத்திரத்தைச் சார்ந்த பானுவேல் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவள். அன்னாள் வயது முதிர்ந்தவள். அவள் திருமணமாகித் தன் கணவனுடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தவள். பின் அவள் கணவன் இறந்து போனான். அவள் தனித்து வாழ்ந்து வந்தாள். அவள் எண்பத்து நான்கு வயது முதியவளாக இருந்தாள். அன்னாள் எப்போதும் தேவாலயத்திலேயே இருந்தாள். அவள் உபவாசமிருந்து இரவும் பகலும் தேவனை வழிபட்டுக்கொண்டிருந்தாள். தேவனுக்கு நன்றி செலுத்தியவண்ணம் அன்னாளும் அப்போது அங்கே இருந்தாள். தேவன் எருசலேமுக்கு விடுதலை அருள வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த எல்லா மக்களுக்கும் அவள் இயேசுவைக் குறித்துக் கூறினாள்.

லூக்கா 2:25-38 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார். கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது. அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாணமுறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில், அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின, உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான். அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள். பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான். ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள். ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தைவிட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள். அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்.