YouVersion Logo
Search Icon

ரோமர் 15

15
1விசுவாசத்தில் பலமுள்ளவர்களாயிருக்கின்ற நாம், நம்மைப் பிரியப்படுத்தாமல் பலவீனமாய் இருக்கின்றவர்களின் தவறுகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். 2நாம் ஒவ்வொருவரும் நமது அயலவனை அவனது நன்மையின் பொருட்டு விசுவாசத்தில் வளரச் செய்யும்படி அவனைப் பிரியப்படுத்த வேண்டும். 3கிறிஸ்துவும் தம்மைப் பிரியப்படுத்துவதற்காக வாழவில்லை, “உம்மை அவமானப்படுத்தியவர்களுடைய அவமரியாதைப் பேச்சுக்கள் என் மேலே விழுந்தன”#15:3 சங். 69:9 என்று எழுதப்பட்டிருக்கிறது. 4நாம் வேதவசனங்களில் இருந்து பொறுமையையும் உற்சாகத்தையும் பெற்று, அவற்றின் மூலமாக உறுதியான எதிர்பார்ப்பு உள்ளவர்களாகும்படி முற்காலத்தில் எழுதப்பட்டவைகள் எல்லாம் நம்மை அறிவுறுத்தவே எழுதப்பட்டிருக்கின்றன.
5பொறுமையையும் உற்சாகத்தையும் கொடுக்கின்ற இறைவன், கிறிஸ்து இயேசு கொண்டிருந்ததைப் போன்ற ஒரு மனநிலையை உங்களுக்கிடையில் தருவாராக. 6அப்போது நீங்கள் ஒரே மனதுள்ளவர்களாய் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவீர்கள்.
7ஆகவே, இறைவனுக்கு மகிமை உண்டாகும்படி கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டதைப் போலவே நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். 8நான் உங்களுக்கு கூறுவதாவது, இறைவன் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை உறுதிப்படுத்தி அவர் உண்மையுள்ளவர் என்பதைக் காண்பிப்பதற்காக கிறிஸ்து யூதருக்கு ஊழியக்காரனாக வந்தார். 9இதனால், யூதரல்லாதவர்களும் இரக்கம் பெற்று இறைவனை மகிமைப்படுத்தும்படியாக இப்படிச் செய்தார். இதைப்பற்றி வேதவசனத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது:
“ஆகையால், நான் யூதரல்லாதவர்களிடையே உம்மைத் துதித்து,
உமது பெயரில் துதிப் பாடல் பாடுவேன்.”#15:9 2 சாமு. 22:50; சங். 18:49
10மேலும்,
“யூதரல்லாத மக்களே! அவருடைய மக்களுடன் நீங்களும் சந்தோஷப்படுங்கள்.”#15:10 உபா. 32:43
11மேலும்,
“யூதரல்லாத மக்களே! நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்,
அனைத்து மக்களும் அவரை புகழட்டும்.”#15:11 சங். 117:1
12மேலும் ஏசாயா,
“ஈசாயின் வேரும்
மக்களை ஆளுகை செய்கின்றவருமான ஒருவர் தோன்றுவார்;
யூதரல்லாத மக்கள் அவரில் நம்பிக்கையுடையவர்களாய் இருப்பார்கள்”#15:12 ஏசா. 11:10
என்று சொல்கின்றார்.
13பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் உங்கள் நல்ல எதிர்பார்ப்பு பெருகும்படி, நல்ல எதிர்பார்ப்பின் இறைவன், நம்பிக்கையினால் உண்டாகும் எல்லா மனமகிழ்ச்சியினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.
பவுலின் சமாதான ஊழியம்
14எனக்கு பிரியமானவர்களே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்கள் என்றும், அறிவில் நிறைவு பெற்றவர்கள் என்றும், ஒருவருக்கொருவர் அறிவுறுத்தலைக் கொடுக்கும் ஆற்றல் உடையவர்கள் என்றும் உறுதியாக நான் நம்புகிறேன். 15ஆனால் நான் சில விடயங்களைத் திரும்பவும் உங்களுக்கு நினைவூட்டுவதற்காக துணிவுடன் இங்கே எழுதியிருக்கிறேன். இறைவன் எனக்குக் கொடுத்த கிருபையின்படி, 16யூதரல்லாதவர்களுக்கு இறைவனுடைய நற்செய்தியைப் பிரசித்தம் செய்கின்ற மதகுரு ஊழியத்தைச் செய்துகொண்டிருக்கும் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாய் நான் இருக்கின்றேன். யூதரல்லாத மக்கள் பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்தம் செய்யப்பட்டு இறைவனுக்கு ஏற்ற ஒரு காணிக்கையாகும்படி, நான் அவர்களை அர்ப்பணிக்கிறேன்.
17ஆகவே நான் இறைவனுக்குச் செய்கின்ற இந்தப் பணியின் பொருட்டு, கிறிஸ்து இயேசுவில் பெருமிதம் அடைவது நியாயமானதே. 18யூதரல்லாதவரை கீழ்ப்படியப் பண்ணும்படியாக, என் மூலமாக வார்த்தையினாலும் மனித செயல்களினாலும் கிறிஸ்து நிறைவேற்றியதைத் தவிர வேறு எதைக் குறித்தும் பேசத் துணிய மாட்டேன். 19பலமான அடையாள அற்புதங்கள் மூலமாக ஆவியானவருடைய வல்லமையினாலே எருசலேமிலிருந்து இல்லிரிக்கம் வரை கிறிஸ்துவின் நற்செய்திப் பணியை நிறைவேற்றினேன். 20அத்தோடு, வேறொருவர் போட்ட அத்திவாரத்தின் மேல் நான் கட்டாமல், கிறிஸ்துவைக் குறித்து அறிவிக்கப்படாத இடங்களிலே நற்செய்தியை அறிவிக்கவே விரும்புகிறேன். 21எழுதியிருக்கின்றபடி,
“அவரைக் குறித்து அறிவிக்கப்படாதவர்கள் காண்பார்கள்.
கேள்விப்படாதவர்கள் புரிந்துகொள்வார்கள்.”#15:21 ஏசா. 52:15
22நான் உங்களிடம் வருவதற்கு பல முறை முயன்றபோதும் அது தடைப்பட்டதற்கு இதுவே காரணம்.
ரோம் நகரத்திற்குப் போகத் திட்டம்
23ஆனால் இப்பொழுதோ இந்தப் பகுதிகளில் நான் பணி செய்ய இடமில்லை. அத்துடன் பல வருடங்களாக உங்களிடம் வர ஆவலாயிருந்தேன். 24எனவே நான் ஸ்பானியாவுக்குப் போகும் வழியில் உங்களிடம் வருவதற்குத் திட்டமிட்டிருக்கிறேன். போகும் வழியில் உங்களோடு சிறிது காலத்தை மகிழ்ச்சியாய் கழித்த பின்பு அங்கிருந்து உங்கள் உதவியோடு எனது பயணத்தைத் தொடருவதற்கு தீர்மானித்திருக்கிறேன். 25ஆனால் இப்போது எருசலேமில் இருக்கின்ற பரிசுத்தவான்களுக்கு பணி செய்வதற்காக நான் அங்கு போகின்றேன். 26மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள திருச்சபைகள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களிடையே ஏழைகளாய் இருக்கின்றவர்களுக்கு உதவி செய்ய முன்வந்திருக்கின்றன. 27அவர்கள் அதைச் செய்ய விருப்பம் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அப்படிச் செய்வதற்கு அவர்கள் கடமைப்பட்டும் இருக்கின்றார்கள். ஏனெனில் யூதரல்லாத மக்கள் யூதர்களுடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் பங்கு பெற்றிருப்பதனால் இவர்கள் தங்கள் உலகப் பொருட்களை யூதர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார்கள். 28எனவே நான் இந்தப் பணியை முடித்துக் கொண்ட பின்பு, அவர்கள் இந்தப் பண உதவியைப் பெற்றுக்கொண்டார்கள் என்பதையும் உறுதிப்படுத்திய பின் ஸ்பானியாவுக்குப் போகும் வழியில் உங்களையும் வந்து சந்திப்பேன். 29நான் உங்களிடம் வரும்போது கிறிஸ்துவினுடைய முழுநிறைவான ஆசீர்வாதத்துடன் வருவேன் என்பது நிச்சயம்.
30பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியானவருடைய அன்பினாலும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கின்றதாவது: “எனக்காக இறைவனிடத்தில் மன்றாடி எனது போராட்டத்தில் என்னுடன் இணைந்துகொள்ளுங்கள். 31யூதேயாவிலிருக்கின்ற அவிசுவாசிகளிடமிருந்து நான் தப்புவிக்கப்பட வேண்டும் என்றும், எருசலேமில் நான் செய்கின்ற பணி அங்கிருக்கிற பரிசுத்தவான்களுக்கு ஏற்புடையதாய் இருக்க வேண்டும் என்றும் மன்றாடுங்கள். 32அப்போது இறைவனுடைய திட்டத்தின்படியே நான் மனமகிழ்ச்சியுடன் உங்களிடம் வந்து உங்களுடன் சேர்ந்து உற்சாகமடைவேன். 33சமாதானத்தையும் அமைதியையும் கொடுக்கும் இறைவன் உங்கள் அனைவருடனும் இருப்பாராக” ஆமென்.

Currently Selected:

ரோமர் 15: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in