YouVersion Logo
Search Icon

ரோமர் 16

16
தனிப்பட்ட வாழ்த்துதல்கள்
1கெங்கிரேயா பட்டணத்திலுள்ள திருச்சபையில் ஊழியம் செய்கின்ற#16:1 பிலி. 1:1; 1 தீமோ. 3:8,12. நமது சகோதரி பெபேயாளைக் குறித்து உங்களுக்கு நற்சான்று கொடுக்கின்றேன். 2பரிசுத்தவான்களை ஏற்றுக்கொள்கின்ற விதமாகவே கர்த்தருக்குள் அவளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். உங்களிடமிருந்து அவளுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அதை அவளுக்குக் கொடுங்கள். ஏனெனில் அவள் பலருக்கும், எனக்கும் உதவியாய் இருந்தவள்.
3பிரிஸ்கில்லாளுக்கும், ஆக்கில்லாவுக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். அவர்கள் கிறிஸ்து இயேசுவில் என்னுடைய சக வேலையாட்கள். 4அவர்கள் எனக்காக உயிரைக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தார்கள். நான் மட்டுமல்ல, யூதரல்லாத மக்களின் திருச்சபைகள் எல்லாமே அவர்களுக்கு நன்றியுள்ளவைகளாய் இருக்கின்றன.
5அவர்களுடைய வீட்டில் ஒன்றுகூடுகின்ற திருச்சபைக்கு எனது வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள்.
என் அன்புக்குரியவனான எப்பனெத்துக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். ஆசியாவில் முதலாவதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவன் அவனே.
6மரியாளுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள், அவள் மிகவும் கடுமையாக உங்களுக்காக உழைத்தாள்.
7எனது உறவினர்களான அன்றோனீக்கைக்கும், யூனியாவுக்கும் எனது வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். இவர்களும் என்னுடன் சிறையில் இருந்தார்கள். அப்போஸ்தலர்களுக்குள்ளே இவர்கள் பெயர் பெற்றவர்கள். இவர்கள் எனக்கு முன்பே கிறிஸ்தவரானவர்கள்.
8கர்த்தரில் நான் நேசிக்கின்ற அம்பிலியாவுக்கும் எனது வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
9கிறிஸ்துவில் என் சக ஊழியனாய் இருக்கின்ற உர்பானுக்கும், என் அன்புக்குரிய நண்பன் ஸ்தாக்கிக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
10சோதிக்கப்பட்டு கிறிஸ்துவில் உண்மையானவன் என நிரூபிக்கப்பட்டிருக்கின்ற அப்பெல்லேயுவுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
அரிஸ்தொபூலுவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
11எனது உறவினன் ஏரோதியோனுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
கர்த்தரில் இருக்கின்ற நர்கீசுவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
12கர்த்தரில் கடுமையாக உழைக்கின்றவர்களான திரிபேனாளுக்கும்.
திரிபோசாளுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். மற்றும் கர்த்தரில் கடுமையாக உழைத்த எனது அன்பான பெர்சியாளுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
13ரூபுவுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். அவன் கர்த்தரில் தெரிவு செய்யப்பட்டவன். அவனுடைய தாய்க்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள், அவள் எனக்கும் தாயாய் இருந்தாள்.
14அசிங்கிரீத்துவுக்கும், பிலெகோனுக்கும், எர்மேயாவுக்கும், பத்திரொபாவுக்கும், எர்மாவுக்கும், அவர்களோடு இருக்கின்ற சகோதரருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
15பிலொலோகுக்கும், யூலியாளுக்கும், நேரேக்கும், அவனுடைய சகோதரிக்கும், ஒலிம்பாவுக்கும், அவர்களோடிருக்கின்ற பரிசுத்தவான்களுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
16ஒருவருக்கொருவர் பரிசுத்தமான பரிவன்பைக் காட்டி#16:16 பரிவன்பைக் காட்டி – கிரேக்க மொழியில் பரிசுத்த முத்தமிட்டு என்றுள்ளது. வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
கிறிஸ்துவுக்குள்ளான எல்லாத் திருச்சபைகளும் தங்கள் வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.
17பிரியமானவர்களே, நீங்கள் கற்றுக் கொண்டவற்றுக்கு முரண்பாடான விதத்தில் பிரிவினைகளை உண்டாக்கி உங்கள் வழியில் தடைக்கற்களை போடுகின்றவர்களைக் குறித்துக் கவனமாய் இருந்து, அவர்களைவிட்டு விலகியிருங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன். 18ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் நம்முடைய ஆண்டவர் கிறிஸ்துவுக்குப் பணி செய்யாமல், தங்கள் வயிற்றுப் பிழைப்பையே பார்த்துக்கொள்கின்றார்கள். தங்களுடைய வசப்படுத்தும் பேச்சுக்களினாலும், நயவஞ்சகத்தாலும் கபடமற்ற மக்களின் மனதை வஞ்சிக்கிறார்கள். 19உங்கள் கீழ்ப்படிதலைப்பற்றி எல்லோரும் அறிந்திருக்கின்றபடியால் நான் உங்களைக் குறித்துப் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஆனால் நீங்கள் நன்மையைக் குறித்து ஞானமுள்ளவர்களாயும், தீமையைப்பற்றி அறியாதவர்களாயும் இருப்பதுமே என் விருப்பம்.
20சமாதானத்தின் இறைவன் விரைவில் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார்.
நமது ஆண்டவர் இயேசுவின் கிருபை உங்களோடு இருக்கட்டும்.
21எனது சக ஊழியனான தீமோத்தேயு உங்களுக்குத் தனது வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறான். அதுபோலவே, எனது உறவினர்களான லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களுக்கு வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.
22இந்தக் கடிதத்தை எழுதிய தெர்தியுவாகிய நானும் கர்த்தரில் என் வாழ்த்துதல்களை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
23என்னையும், அவனுடைய வீட்டிலே ஒன்றுகூடுகின்ற திருச்சபையையும் உபசரிக்கின்ற காயுவும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறான்.
இந்தப் பட்டணத்தின் அரசாங்க அதிபரான எரஸ்துவும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவித்துக்கொள்கிறான். நமது சகோதரனான குவர்த்தும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவித்துக்கொள்கிறான்.
24நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் எல்லோரோடும் இருப்பதாக. ஆமென்.#16:24 சில மூலபிரதிகளில் 24 ஆம் வசனம் காணப்படுவதில்லை.
25கடந்த யுகங்களில் மறைபொருளாக வைக்கப்பட்டு, இப்போது வெளிப்பட்டிருக்கின்ற உண்மையின்படி இருக்கின்ற எனது நற்செய்தியின் மூலமாகவும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை அறிவிப்பதன் மூலமாகவும் உங்களை நிலைநிறுத்த ஆற்றல் உடையவராயிருக்கின்ற இறைவனுக்கே மகிமை உண்டாகட்டும். 26அந்த மறைபொருளாயிருந்த உண்மை, நித்தியமான இறைவனுடைய கட்டளையினாலே, இறைவாக்கினரின் எழுத்துக்களின் மூலமாய் இப்போது வெளிப்படுத்தப்பட்டும் அறியப்பட்டும் இருக்கின்றது. எல்லா மக்களும் விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படிவதற்காகவே இது நடந்தது. 27ஞானமுள்ள இறைவன் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றும் மகிமை உண்டாவதாக! ஆமென்.

Currently Selected:

ரோமர் 16: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in