YouVersion Logo
Search Icon

எபிரேயர் 12

12
1எனவே இப்படிப்பட்ட பெருந்திரளான சாட்சிகள் ஒரு மேகத்தைப் போல் நம்மைச் சுற்றி இருக்கின்றதனால், நம்மைத் தடை செய்கின்ற எல்லா பாரத்தையும், நம்மை இலகுவாய் சிக்க வைக்கின்ற பாவத்தையும் அகற்றிவிட்டு, நமக்காக நியமிக்கப்பட்டிருக்கின்ற இந்த ஓட்டப் பந்தயத்தில் விடாமுயற்சியுடன் ஓடுவோம். 2விசுவாசத்தைத் தொடங்குபவரும், அதை நிறைவு செய்பவருமாகிய இயேசுவின்மீது நமது கண்களைப் பதிய வைப்போம். அவர் தமக்கு முன்பாக இருந்த மனமகிழ்ச்சியை நினைத்து, அவமானத்தை பொருட்படுத்தாமல் சிலுவையை சகித்து, இறைவனுடைய அரியணையின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். 3நீங்கள் மனம் தளர்ந்து சோர்ந்து போகாதபடி பாவிகளிலிருந்து வந்த இப்படிப்பட்ட எதிர்ப்பைச் சகித்தவரான இயேசுவைக் குறித்துச் சிந்தியுங்கள்.
இறைவன் தமது மக்களைத் திருத்துகிறார்
4பாவத்தை எதிர்த்துப் போராடுவதில் இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை. 5ஒரு தந்தை தனது மகனோடு பேசுவதைப் போல் உங்களோடு பேசிய உற்சாகப்படுத்தும் வார்த்தையை நீங்கள் முழுமையாக மறந்துவிட்டீர்களா? அவர்,
“என் மகனே, கர்த்தர் உன்னைத் தண்டித்துத் திருத்தும்போது அதை அலட்சியப்படுத்தாதே.
அவர் உன்னைக் கண்டிக்கும்போது மனந்தளர்ந்து போகாதே.
6ஏனெனில் கர்த்தர் தாம் நேசிக்கின்றவர்களையே தண்டித்துத் திருத்துகிறார்.
தாம் மகனாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவனையும் அவர் தண்டிக்கிறார்.”#12:6 நீதி. 3:11,12
7கஷ்டங்கள் வரும்போது, அவை உங்களைத் திருத்துவதற்காகவே வருகின்றன என்று அறிந்து சகித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் இறைவன் உங்களைத் தமது பிள்ளைகளாக நடத்துகிறார். தனது தந்தையினால் தண்டித்துத் திருத்தப்படாத மகன் எங்கே இருக்கின்றான்? 8பிள்ளைகள் தண்டித்துத் திருத்தப்படுகிறார்கள். எனவே நீங்கள் அவ்விதம் தண்டித்துத் திருத்தப்படாவிட்டால் அவருடைய உண்மையான பிள்ளைகளாயிராமல் முறைகேடாய் பிறந்த பிள்ளைகளாய் இருப்பீர்கள். 9மேலும் நம்மைத் தண்டித்துத் திருத்திய உலகிற்குரிய தந்தையர் நம் எல்லோருக்கும் இருந்திருக்கிறார்கள். நாம் அவர்களை மதித்து நடந்தோம். அப்படியானால் நம் ஆவிகளுக்குத் தந்தையாய் இருக்கின்றவருக்கு நாம் பணிந்து நடந்து வாழ்வைப் பெறுவது எவ்வளவு அவசியம்? 10நம்முடைய மனிதத் தந்தையர் சிறிது காலத்திற்குத் தமக்கு நலமாய்த் தோன்றியபடி, நம்மைத் தண்டித்துத் திருத்தினார்கள். ஆனால் இறைவனோ, நாம் அவருடைய பரிசுத்தத்தில் பங்குகொள்ளும்படியாக நம்முடைய நன்மைக்கென்றே நம்மைத் தண்டித்துத் திருத்துகிறார். 11நாம் தண்டித்துத் திருத்தப்படும்போது அது அவ்வேளையில் மனமகிழ்ச்சியாயிருக்காமல் வேதனையுடையதாகவே இருக்கின்றது. ஆனால் பின்பு திருத்தப்பட்டவர்களுக்கு அது நீதி நிறைந்த சமாதான அறுவடையைத் தரும்.
12ஆகவே தளர்ந்துபோன உங்கள் கைகளையும், பலவீனமான உங்கள் முழங்கால்களையும் பலப்படுத்துங்கள். 13கால் ஊனமானவர்கள் முற்றாகவே மூட்டுக்கள் விலகிவிடாமல் குணமடையும்படி, “உங்கள் பாதைகளை சரியான நிலைக்குக் கொண்டு செல்லுங்கள்.”#12:13 நீதி. 4:26
எச்சரிப்பும் உற்சாகமும்
14எல்லோருடனும் சமாதானமாய் வாழவும், உங்கள் நடத்தையில் பரிசுத்தமாய் இருக்கவும் எல்லா முயற்சியையும் செய்யுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவரும் கர்த்தரைக் காண முடியாது. 15இறைவனுடைய கிருபையை ஒருவரும் இழந்துபோகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள் குழப்பத்தை விளைவித்து, பலரை மாசுபடுத்தும் கசப்புணர்வு வேரூன்றி முளைக்க இடம் கொடுக்காதீர்கள். 16உங்களில் யாரும் பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடாதபடி கவனமாயிருங்கள். ஒருவேளை உணவுக்காக மூத்த மகனுக்குரிய தன் பிறப்புரிமையை விற்றுவிட்ட ஏசாவைப் போல், இறைபக்தியில்லாதவனாய் இல்லாதவாறும் பார்த்துக்கொள்ளுங்கள். 17நீங்கள் அறிந்திருக்கின்றபடி அவன் இந்த ஆசீர்வாதத்தைத் திரும்பவும் பெற்றுக்கொள்ள விரும்பியபோதும், அவன் புறக்கணிக்கப்பட்டான். இந்த ஆசீர்வாதத்தை அவன் கண்ணீருடன் தேடியபோதும் அவனுக்கு அந்நிலையை மாற்ற முடியவில்லை.
பயத்தின் மலையும் மகிழ்ச்சியின் மலையும்
18நீங்கள் இப்போது வந்திருப்பது தொடக் கூடியதும், நெருப்பு பற்றி எரிகின்றதும், இருளும், மந்தாரமும், புயலும் சூழ்ந்துள்ள அந்த மலையின் பக்கம் அல்ல. 19அங்கே எக்காளம் முழங்கியது, ஒரு குரல் வார்த்தைகளைப் பேசியது. கேட்டவர்கள் இன்னொரு முறை அந்தக் குரலைத் தாங்கள் கேட்கக் கூடாது என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டார்கள். 20ஏனெனில், “அந்த மலையை ஒரு மிருகம் தொட்டாலும், அந்த மிருகம் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்”#12:20 யாத். 19:12,13 என்று சொல்லப்பட்ட கட்டளையை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாமலிருந்தது. 21அந்தக் காட்சி மிகவும் பயங்கரமாக இருந்ததனாலே மோசே, “நான் பயத்தினால் நடுங்குகிறேன்”#12:21 உபா. 9:19. என்று சொன்னார்.
22ஆனால் நீங்களோ, இப்போது வாழும் இறைவனின் நகரமாயிருக்கின்ற பரலோக எருசலேமாகிய சீயோன் மலைக்கே வந்திருக்கிறீர்கள். ஆயிரம் ஆயிரமான இறைதூதர்கள் மகிழ்ச்சியாய் சபை கூடுதலுக்கும், 23பரலோகத்தில் பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்ற முதற்பேறானவர்களின் திருச்சபையிடமும், எல்லா மனிதருக்கும் நீதிபதியாய் இருக்கின்ற இறைவனிடமும், முழு நிறைவடைந்த நீதிமான்களின் ஆவிகளினிடமும், 24புதிய உடன்படிக்கையின் நடுவரான இயேசுவினிடமும், ஆபேலின் இரத்தத்தைவிட மேன்மையான வார்த்தையைப் பேசும் இயேசுவின் தெளிக்கப்பட்ட இரத்தத்தினிடமுமே நீங்கள் வந்திருக்கிறீர்கள்.
25ஆகவே உங்களிடம் பேசுகின்ற இறைவனை மறுக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பூமியிலே அவர்களை எச்சரித்த வார்த்தைகளைக் கேட்க மறுத்தவர்களே தப்பித்துக்கொள்ள முடியவில்லை என்றால், பரலோகத்திலிருந்து எச்சரிப்பு கொடுப்பவருடைய வார்த்தைகளைக் கேட்க மறுத்தால், எப்படி நாம் தப்பித்துக்கொள்ள முடியும்? 26அக்காலத்தில் இறைவனுடைய குரல் பூமியை அசைத்தது. இப்பொழுதோ அவர், “நான் இன்னொரு முறை பூமியை மட்டுமல்ல, பரலோகத்தையும் சேர்த்து அசைப்பேன்”#12:26 ஆகா. 2:6 என்று வாக்குறுதி அளித்துள்ளார். 27“இன்னொரு முறை” என்ற வார்த்தை, அசைக்கப்படக் கூடிய படைப்புகள் அகற்றப்படும் என்பதையே தெளிவுபடுத்துகிறது. இதனால் அசைக்கப்பட முடியாதவை தொடர்ந்து நிலைத்திருக்கும்.
28ஆகவே, அசைக்கப்படாத ஒரு அரசையே பெறுகின்றவர்களாகிய நாம் நன்றியுடையவர்களாய், இறைவன் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில், பயபக்தியுடனும் இறைபயத்துடனும் அவரை ஆராதிப்போம் 29ஏனெனில், நமது இறைவனோ “சுட்டெரிக்கும் நெருப்பாய்”#12:29 உபா. 4:24 இருக்கின்றார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in