YouVersion Logo
Search Icon

எபிரேயர் 13

13
கடைசி அறிவுறுத்தல்கள்
1ஒருவர் மீது ஒருவர், சகோதர அன்பில் தொடர்ந்து நிலைத்திருங்கள். 2அந்நியரை உபசரிக்க மறந்து விடாதீர்கள். ஏனெனில் அவ்விதம் செய்ததனால் சிலர் அறியாமல் இறைதூதர்களையும் உபசரித்திருக்கிறார்கள். 3சிறையில் இருப்பவர்களை நீங்களும் அவர்களோடு சிறையில் இருப்பது போலவும், துன்பப்படுகின்றவர்களை நீங்களும் அவர்களோடு துன்பப்படுவதைப் போலவும் எண்ணிக்கொண்டு ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
4திருமணம் எல்லோராலும் மதிக்கப்பட வேண்டும். திருமணப் படுக்கை தூய்மையாக காக்கப்பட வேண்டும். தகாத உறவிலும், பாலியல் ஒழுக்கக்கேட்டிலும் ஈடுபடுகின்றவர்களை இறைவன் நியாயம் தீர்ப்பார். 5பண ஆசையிலிருந்து விலகி, உங்களிடம் இருப்பதைக்கொண்டு மனத்திருப்தியுடன் வாழுங்கள். ஏனெனில் இறைவன்,
“நான் உன்னைவிட்டு ஒருபோதும் விலக மாட்டேன்;
நான் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்”#13:5 உபா. 31:6
என்று சொல்லியிருக்கின்றாரே.
6எனவே நாமும் மனத் தைரியத்துடன்,
“கர்த்தர் எனக்கு உதவியாளர்; நான் பயப்பட மாட்டேன்.
மனிதன் எனக்கு என்ன செய்ய முடியும்”#13:6 சங். 118:6,7
என்று சொல்வோம்.
7உங்களுக்கு இறைவனுடைய வார்த்தையைக் கற்றுக் கொடுத்த தலைவர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்க்கை முறையின் பிரதிபலனை யோசித்துப் பார்த்து அவர்களுடைய விசுவாசத்தையே நீங்களும் பின்பற்றுங்கள். 8இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவே இருக்கின்றார்.
9பல்வேறுபட்ட விசித்திரமான போதனைகளினால் வழிவிலகிப் போகாதிருங்கள். உண்பவர்களுக்கு எந்தப் பயனும் இல்லாத சடங்கு முறை உணவு வகைகளினால் அன்றி, கிருபையினால் நம்முடைய இருதயம் பலப்படுவதே நல்லது. 10இறைபிரசன்னக் கூடாரத்தில் பணிபுரிகின்றவர்கள் அதிலிருந்து உண்பதற்கு உரிமையில்லாத ஒரு பலிபீடம் நமக்கு உண்டு.
11தலைமை மதகுரு மிருகங்களின் இரத்தத்தை மகா பரிசுத்த இடத்திற்கு பாவநிவாரண காணிக்கையாகக் கொண்டுபோகின்றான். ஆனால் மிருகங்களின் உடல்களோ முகாமுக்கு வெளியே எரிக்கப்படுகின்றன. 12இவ்விதமே இயேசுவும்கூட நகர வாசலுக்கு வெளியே வேதனைகளை அனுபவித்து, தமது சொந்த இரத்தத்தின் மூலமாக மக்களைப் பரிசுத்தமாக்கினார். 13ஆகையால், அவர் சுமந்த அவமானத்தை நாமும் சுமந்து முகாமுக்கு வெளியே அவரிடம் போவோம். 14ஏனெனில் நித்தியமான நகரம் நமக்கு இங்கு இல்லை. வரப் போகின்ற ஒரு நகரத்திற்காகவே நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
15ஆகவே இயேசுவின் மூலமாய் இறைவனுடைய பெயரை ஏற்று ஒப்புக்கொள்கின்ற உதடுகளின் கனியை துதியின் காணிக்கையாக இறைவனுக்கு இடைவிடாது செலுத்துவோமாக. 16நன்மை செய்ய மறக்க வேண்டாம், உங்களிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் மறந்துவிட வேண்டாம். இப்படியான பலிகளிலேயே இறைவன் பிரியப்படுகிறார்.
17உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர்களுடைய அதிகாரத்திற்குப் பணிந்து நடவுங்கள். ஏனெனில், அவர்கள் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக, உங்கள் மீது கண்காணிப்பு செய்கின்றார்கள். உங்களைக் கண்காணிப்பது அவர்களுக்கு சுமையாக இல்லாது மனமகிழ்ச்சியாக இருக்கும்விதத்தில் நடந்துகொள்ளுங்கள். அவர்களுக்குச் சுமையாக இருப்பது உங்களுக்கு நன்மை தராது.
18எங்களுக்காக மன்றாடுங்கள். எங்களுக்கு நல்ல மனசாட்சி உண்டு என்பதில் நாங்கள் நிச்சயமுடையவர்களாய் இருக்கின்றோம். எல்லா வழியிலும் நன்மதிப்புக்குரியவர்களாக வாழவே ஆசைப்படுகிறோம். 19நான் விரைவாக உங்களிடம் வந்து சேருமாறு நீங்கள் மன்றாட வேண்டும் என உங்களிடம் விசேடமாக வேண்டிக்கொள்கிறேன்.
முடிவுரையும் இறுதி வாழ்த்துரையும்
20நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தின் மூலமாக செம்மறியாடுகளின் பெரிய மேய்ப்பரான நம்முடைய ஆண்டவர் இயேசுவை மரணித்தோரிலிருந்து எழுப்பிய சமாதானத்தின் இறைவன், 21தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அவசியமான எல்லா நன்மையாலும் உங்களைப் பூரணப்படுத்தி, இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தமது பார்வையில் பிரியமானதை நம்மில் நிறைவேற்றுவாராக. கிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
22சகோதரர்களே! நான் உங்களை எச்சரித்தும் ஊக்கப்படுத்தியும் எழுதியிருக்கின்ற இந்த வார்த்தைகளைச் சற்று பொறுமையாய் கேளுங்கள். ஏனெனில் சுருக்கமான ஒரு செய்தியையே நான் உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
23நமது சகோதரன் தீமோத்தேயு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவன் விரைவில் வந்தால் நான் உங்களைப் பார்ப்பதற்கு அவனுடனேயே வருவேன்.
24உங்கள் தலைவர்கள் அனைவருக்கும், இறைவனின் மக்கள் எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள்.
இத்தாலியில் உள்ளவர்களும், உங்களுக்குத் தங்கள் வாழ்த்துதல்களைக் கூறுகிறார்கள்.
25கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக! ஆமென்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in