எபிரேயர் 11
11
விசுவாசம்
1விசுவாசம் என்பது நாம் எதிர்பார்த்திருக்கும் காரியங்களைக் குறித்த நிச்சயமும், நம்மால் காண முடியாதவற்றைக் குறித்த உறுதியுமாயிருக்கிறது. 2இப்படிப்பட்ட விசுவாசத்தினாலேயே, நமது முன்னோர்கள் இறைவனிடமிருந்து நற்சாட்சியைப் பெற்றுக்கொண்டார்கள்.
3விசுவாசத்தினாலேயே, நாம் உலகங்கள் அனைத்தும் இறைவன் தமது வார்த்தையினால் கட்டளையிட உருவாக்கப்பட்டன என்று விளங்கிக்கொள்கிறோம். ஆகவே காணப்படுகின்றவை, காணப்படாதவற்றிலிருந்து உண்டாகின.
4விசுவாசத்தினாலேயே ஆபேல், காயீன் செலுத்திய பலியைப் பார்க்கிலும் மேன்மையான பலியை இறைவனுக்குச் செலுத்தினான். இறைவனே அவனுடைய காணிக்கையைக் குறித்து நன்றாகப் பேசியபோது விசுவாசத்தினாலேயே அவன் நீதிமான் என நற்சாட்சி பெற்றான். விசுவாசத்தினாலேயே ஆபேல் மரணித்தபோதும், இன்னும் அவனது குரல் பேசுகின்றது.
5“விசுவாசத்தினாலேயே ஏனோக்கு மரணத்தை அனுபவிக்காமல், இவ்வாழ்க்கையிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டார்.”#11:5 ஆதி. 5:24 இறைவன் அவரை எடுத்துக்கொண்டதனால், அவர் காணப்படாமற் போய் விட்டார். அவர் இறைவனால் எடுத்துக்கொள்ளப்படும் முன்பு அவர் இறைவனுக்குப் பிரியமானவர் என்று நற்சாட்சி பெற்றிருந்தார். 6விசுவாசம் இல்லாமல் இறைவனை ஒருபோதும் பிரியப்படுத்த முடியாது. ஏனெனில் இறைவனிடம் வருகின்றவர்கள், அவர் இருக்கின்றார் என்றும், அவர் தம்மை முழு மனதோடு தேடுகின்றவர்களுக்கு வெகுமதியைக் கொடுக்கின்றவர் என்றும் விசுவாசிக்க வேண்டும்.
7விசுவாசத்தினாலேயே நோவா, இன்னும் காணப்படாத காரியங்களைக் குறித்து எச்சரிக்கப்பட்டபோது, தனது குடும்பத்தை இரட்சிக்கும்படி இறைபயத்துடனே ஒரு பேழையைச்#11:7 பேழையை என்பது பெரிய படகு செய்தார். அவர் தன்னுடைய விசுவாசத்தினாலேயே உலகத்தை தண்டனைத்தீர்ப்புக்குள்ளாக்கி, விசுவாசத்தினால் வரும் நீதிக்கு சொத்துரிமை உடையவர்#11:7 சொத்துரிமை – வாரிசு என்றும் மொழிபெயர்க்கலாம் ஆனார்.
8விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் தான் உரிமைச் சொத்தாகப் பெறவிருந்த இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, தான் எங்கே போகின்றேன் என்றுகூட அவர் அறியாதிருந்த போதிலும் கீழ்ப்படிந்து புறப்பட்டார். 9விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் பிறநாட்டில் இருக்கும் ஒரு அந்நியனைப் போல் வாக்குக் கொடுத்த நாட்டில் தனது குடியிருப்பை அமைத்தார். அவர் கூடாரங்களிலேயே குடியிருந்தார். அதே வாக்குறுதிக்கு உரிமையாளர்களான ஈசாக்கும், யாக்கோபும் கூடாரங்களிலேயே குடியிருந்தார்கள். 10ஏனெனில், வடிவமைத்துக் கட்டுபவரான இறைவன், தாமே உறுதியாய் அத்திவாரமிட்ட, அந்த நகரத்தையே ஆபிரகாம் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
11சாராள் வயது சென்றவளும் குழந்தைப் பேறு அற்றவளுமாக இருந்தபோதும் குழந்தை பெறும் ஆற்றலைப் பெற்றாள்.#11:11 ஆபிரகாம் வயது சென்றவராகவும், சாராள் குழந்தை பெறும் வல்லமை இல்லாதவளாகவும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தை ஆவதற்கான வல்லமையைப் பெற்றார். ஏனெனில் தனக்கு வாக்குறுதியைக் கொடுத்த இறைவன் வாக்கு மாறாதவர் என்று நம்பினார் என்றும் இந்த வசனத்தை மொழிபெயர்க்கலாம். ஏனெனில் தனக்கு வாக்குறுதியைக் கொடுத்த இறைவன் வாக்கு மாறாதவர் என்று அவள் நம்பினாள். 12ஆபிரகாமின் உடல் வல்லமையிழந்து உயிரற்றது போல் இருந்தபோதும், வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரையிலுள்ள மணலைப் போலவும் எண்ணற்ற மக்கள் அந்த ஒரே மனிதனிலிருந்து தோன்றினர்.
13விசுவாசத்துடன் வாழ்ந்த இந்த மக்கள் எல்லோரும் இறக்கும்போதும் அந்த விசுவாசத்திலே இறந்தார்கள். ஏனெனில் அவர்களோ, வாக்குறுதி பண்ணப்பட்டதை அப்போது பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தூரத்திலிருந்து அதைக் கண்டு வரவேற்று மகிழ்ச்சி கொண்டவர்களாக மட்டுமே இருந்தார்கள். தாங்கள் பூமியிலே அந்நியர் என்பதையும், தற்காலிக குடிகள் என்பதையும் ஏற்றுக்கொண்டார்கள். 14இப்படி அறிவிக்கின்ற மக்கள் தாங்கள் தங்களுக்குச் சொந்தமான ஒரு நாட்டையே எதிர்பார்த்து இருக்கின்றார்கள் என்பதைக் தெரியப்படுத்துகிறார்கள். 15தாங்கள் தேடுகின்ற நாடு தாங்கள் விட்டுப் புறப்பட்டு வந்த நாடே என அவர்கள் நினைத்திருந்தால், அவர்கள் அங்கு திரும்பிப் போகக்கூடிய தருணம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும். 16ஆனால் அவர்களோ அதிலும் மேன்மையான நாட்டை, ஒரு பரலோக நாட்டையே தேடினார்கள். அதை அடையவே ஆசைப்பட்டார்கள். ஆகவே “அவர்களுடைய இறைவன்” என தாம் அழைக்கப்படுவதை இறைவன் வெட்கத்துக்குரியதாக எண்ணவில்லை. ஏனெனில் இறைவன், அவர்களுக்கென்று ஒரு நகரத்தை ஆயத்தம் செய்திருக்கின்றார்.
17இறைவன் தன்னைச் சோதித்தபோது, ஆபிரகாம் விசுவாசத்தினாலே ஈசாக்கைப் பலியாகச் செலுத்தினார். வாக்குறுதிகளைப் பெற்றுக்கொண்டவர் தனது ஒரேயொரு மகனைப் பலியாகக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தார். 18“ஈசாக்கின் மூலமே உனக்கு சந்ததி உண்டாகும்”#11:18 ஆதி. 21:12 என்று இறைவன் அவருக்குச் சொல்லியிருந்தும்கூட, அவர் இதைச் செய்தார். 19இறந்தவர்களையும் உயிரோடு எழுப்ப இறைவனால் முடியும் என்று ஆபிரகாம் உணர்ந்திருந்தார். ஒரு வகையில் அவர் ஈசாக்கை மரணத்திலிருந்தே மீண்டும் பெற்றுக்கொண்டார் என்று சொல்லலாம்.
20விசுவாசத்தினாலேயே ஈசாக்கு, யாக்கோபினதும் ஏசாவினதும் எதிர்காலத்தைக் குறித்து ஆசீர்வதித்தார்.
21யாக்கோபு, தான் மரணத் தறுவாயில் இருக்கையில் விசுவாசத்தினாலேயே யோசேப்பினுடைய மகன்மார் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தார். பின்பு தனது கைத்தடியின் மேற்புறத்தில் சாய்ந்து கொண்டு வழிபட்டார்.
22விசுவாசத்தினாலேயே யோசேப்பு, தனது முடிவு காலம் நெருங்கியபோது இஸ்ரயேலர் எகிப்திலிருந்து புறப்பட்டுப் போவார்கள் என்பதைக் குறித்துப் பேசி, தனது எலும்புகளை நல்லடக்கம் செய்வதைக் குறித்து கட்டளை கொடுத்தார்.
23மோசேயின் பெற்றோர், அவர் பிறந்தபோது விசுவாசத்தினாலேயே அவரை மூன்று மாதம் ஒளித்து வைத்தார்கள். அவர் ஒரு சாதாரண குழந்தையல்ல என்பதை உணர்ந்து கொண்டதால் அவர்கள் அரச கட்டளைக்குப் பயப்படவில்லை.
24விசுவாசத்தினாலேயே மோசே, வளர்ந்து பெரியவரானபோது தான் பார்வோனின் மகளின் மகன் என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுத்தார். 25விரைவில் கடந்து போகும் பாவச் சிற்றின்பங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும், இறைவனுடைய மக்களுடன் சேர்ந்து கஷ்டங்களை அனுபவிப்பதையே மோசே தெரிவு செய்தார். 26கிறிஸ்துவுக்காக அவமானப்படுவது, எகிப்தின் செல்வங்களைப் பார்க்கிலும் மேலான பெறுமதியுடையது என்றே கருதினார். ஏனெனில், அவர் வரப் போகின்ற வெகுமதிக்காகவே எதிர்பார்த்துக் காத்திருந்தார். 27விசுவாசத்தினாலேயே மோசே, அரசனின் கோபத்திற்கும் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் புறப்பட்டுப் போனார். ஏனெனில், அவர் கண்ணுக்குக் காணப்படாத இறைவனைக் கண்டவராய் மனவுறுதியுடன் இருந்தார். 28தலைப் பிள்ளைகளை அழிக்கும் இறைதூதன் இஸ்ரயேலரின் தலைப் பிள்ளைகளை தொடாதபடி, பஸ்காவையும்#11:28 பஸ்கா – இது யூதர்கள், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கிடைத்த தமது விடுதலையை நினைவுகூர்ந்து ஆசரிக்கும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். கதவு நிலைகளில் இரத்தம் தெளிப்பதையும் விசுவாசத்தினாலேயே மோசே கைக்கொண்டார்.
29விசுவாசத்தினாலேயே இஸ்ரயேல் மக்கள், உலர்ந்த தரையில் நடப்பது போல் செங்கடலைக் கடந்து சென்றார்கள். ஆனால், அவ்வாறு எகிப்தியர் செய்ய முற்பட்டபோது, அவர்கள் கடலில் அமிழ்ந்து போனார்கள்.
30விசுவாசத்தினாலேயே இஸ்ரயேல் மக்கள், எரிகோ பட்டணத்தைச் சுற்றி ஏழு நாட்கள் அணிவகுத்து நடந்தபோது எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்தன.
31விசுவாசத்தினாலேயே ராகாப் என்ற விலைமாது, இஸ்ரயேல் ஒற்றர்களை வரவேற்று, இறைவனுக்குக் கீழ்ப்படியாதவர்களுடனே கொல்லப்படாமல் தப்பினாள்.
32இன்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் ஆகியோரைக் குறித்தும் மற்ற இறைவாக்கினரைக் குறித்தும் சொல்வதற்கு நேரமில்லை. 33இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலேயே அரசுகளை வென்றெடுத்தார்கள், நீதியை நடைமுறைப்படுத்தினார்கள், வாக்குறுதி பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்டார்கள், சிங்கங்களின் வாய்களைக் கட்டினார்கள். 34கொழுந்து விட்டெரியும் நெருப்பின் அனலை அணைத்தார்கள், வாள்முனைக்கும் தப்பினார்கள். அவர்களது பலவீனங்கள் பலமுள்ளதாய் மாற்றப்பட்டன. அவர்கள் யுத்தத்தில் வலிமையுடையவர்களாகி, அந்நிய படைகளைத் தோற்கடித்தார்கள். 35விசுவாசத்தினாலேயே பெண்கள் தங்கள் இறந்தவர்களை மீண்டும் உயிருடனே பெற்றுக்கொண்டார்கள். ஆனால் வேறு சிலரோ துன்புறுத்தப்பட்டும், ஒரு மேன்மையான உயிர்த்தெழுதலைப் பெற்றுக்கொள்வதற்காகவே விடுதலை பெற்றுக்கொள்ள மறுத்தார்கள். 36இன்னும் சிலர் ஏளனத்துக்குள்ளாகி சவுக்கால் அடிக்கப்பட்டார்கள். வேறு சிலர் விலங்கிடப்பட்டவர்களாய் சிறையில் அடைக்கப்பட்டார்கள். 37அவர்கள் கல்லெறியப்பட்டார்கள், உடல் இரண்டாகத் துண்டாடப்பட்டார்கள், வாளினால் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் உடுத்திக்கொண்டு திரிந்தார்கள். குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுபவித்தார்கள். 38இந்த உலகமோ அவர்களுக்குத் தகுதியற்றதாயிருந்தது. அவர்கள் பாலைவனங்களிலும் மலைகளிலும் அலைந்து, குகைகளிலும் நிலத்திலுள்ள கிடங்குகளிலும் வாழ்ந்தார்கள்.
39இவர்கள் எல்லோரும் தங்கள் விசுவாசத்தால் நற்பெயர் பெற்றார்கள். ஆனால் இவர்கள் ஒருவரும் வாக்குறுதி பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொள்ளவில்லை. 40இறைவனோ நமக்காக அதிலும் மேன்மையான ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். இதனால் அவர்களும் நம்முடன் ஒன்று சேர்ந்துதான் பூரணராக முடியும்.
Currently Selected:
எபிரேயர் 11: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.