கொலோசேயர் 3
3
புதிதாக்கப்பட்ட மனிதனுக்குரிய சுபாவம்
1நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உயிருடன் எழுப்பப்பட்டிருக்கின்றபடியால், பரலோக காரியங்களையே விரும்பித் தேடுங்கள். அங்கே கிறிஸ்து, இறைவனுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். 2உலகத்துக்குரிய காரியங்களில் அன்றி, பரலோகத்துக்குரிய காரியங்களில் உங்கள் மனதை ஒருமுகப்படுத்துங்கள். 3ஏனெனில் நீங்கள் இறந்துவிட்டீர்கள், இப்பொழுதோ உங்கள் வாழ்க்கை கிறிஸ்துவுடன் இறைவனில் மறைந்திருக்கிறது. 4உங்கள் வாழ்வாய் இருக்கின்ற கிறிஸ்து தோன்றும்போது,#3:4 கிறிஸ்து தோன்றும்போது – கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் என்றும் மொழிபெயர்க்கலாம் நீங்களும் அவருடனேகூட மகிமையில் தோன்றுவீர்கள்.
5ஆகவே, உலக இயல்புக்குச் சொந்தமான பாலியல் ஒழுக்கக்கேடு, அசுத்தமான நடத்தை, காம வேட்கைகள், தீய ஆசைகள், விக்கிரக வழிபாடாகிய பேராசை ஆகிய அனைத்தையும் சாகடித்து விடுங்கள். 6இவைகளின் காரணமாகவே, இறைவனுடைய கோபத் தண்டனை வரப் போகின்றது. 7முன்னர் வாழ்ந்த வாழ்வில், நீங்களும் அவ்விதமாகவே நடந்துகொண்டீர்கள். 8ஆனால் இப்பொழுதோ கடும் கோபம், சினம், கேடு செய்யும் எண்ணம், அவதூறு பேசுதல் ஆகிய நடத்தைகளை உங்கள் வாழ்க்கையிலிருந்து அகற்றி விடுங்கள். ஆபாசப் பேச்சு உங்கள் உதடுகளிலிருந்து வெளிவரக் கூடாது. 9ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் பழைய மனித சுபாவத்தையும், அதன் செயல்களையும் உங்களிடமிருந்து களைந்துவிட்டு, 10புதிதாக்கப்பட்ட மனிதனின் சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள். அந்த சுபாவமானது படைத்தவருடைய சாயலில், அவரைப்பற்றிய அறிவினால் புதிதாக்கப்படுகிறது. 11இந்தப் புதிதாக்கப்பட்ட நிலையில் கிரேக்கர், யூதர் என்றோ விருத்தசேதனம் பெற்றவர், பெறாதவர் என்றோ பிறஇனத்தவர் என்றோ பண்பாடற்றவர்#3:11 பண்பாடற்றவர் – கிரேக்க மொழியில் சீத்தியர் என்றுள்ளது. காட்டுமிராண்டித்தனமான மக்களையும் இந்த வார்த்தை குறிக்கிறது. என்றோ அடிமை, சுதந்திரக் குடிமகன் என்றோ எந்த வேறுபாடும் இல்லை. கிறிஸ்துவே இவர்கள் எல்லோரிலும் எல்லாமுமாய் இருக்கின்றார்.
12ஆகவே இறைவனால் தெரிவு செய்யப்பட்ட மக்களும், பரிசுத்தமுள்ளவர்களும், அவரது அன்புக்குரியவர்களுமாய் இருக்கின்ற நீங்கள் இரக்கம், தயவு, தாழ்மை, சாந்தம், பொறுமை ஆகிய குணங்களை அணிந்துகொள்ளுங்கள். 13ஒருவரோடு ஒருவர் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள். யாராவது ஒருவருக்கு எதிராக இன்னொருவருக்கு ஏதாவது ஒரு மனக்குறை இருக்குமானால் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்; கர்த்தர் உங்களை மன்னித்தது போல, நீங்களும் மன்னியுங்கள். 14இந்த நற்குணங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக, அன்பை அணிந்துகொள்ளுங்கள். இதுவே அனைத்தையும் ஒரு பூரண ஒருமைப்பாட்டில் இணைக்கிறது.
15கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளுகை செய்யட்டும். ஏனெனில் இந்தச் சமாதானத்துக்காகவே நீங்கள் ஒரே உடலின் அங்கங்களாய் இருக்க அழைக்கப்பட்டீர்கள். எனவே நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள். 16கிறிஸ்துவின் வார்த்தை உங்களுக்குள் நிறைவாய் குடியிருக்கட்டும். நீங்கள் சகல ஞானத்தோடு சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஆவிக்குரிய பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் போதித்து, அறிவுரை கூறி உங்கள் இருதயங்களில் இறைவனை நன்றியுடன் பாடுங்கள். 17நீங்கள் எதைப் பேசினாலும் எதைச் செய்தாலும் ஆண்டவர் இயேசுவின் பெயரிலேயே எல்லாவற்றையும் செய்து, அவர் ஊடாக பிதாவாகிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
குடும்பத்திற்கான ஒழுங்குவிதிகள்
18மனைவியரே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். இதுவே கர்த்தரை அறிந்தவர்களுக்குப் பொருத்தமானது.
19கணவர்களே, உங்கள் மனைவியிடம் அன்பாய் இருங்கள். அவர்களுடன் கடுமையாய் நடந்துகொள்ளாதிருங்கள்.
20பிள்ளைகளே! உங்கள் பெற்றோருக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஏனெனில், இது கர்த்தரைப் பிரியப்படுத்துகின்றது.
21தந்தையரே! உங்கள் பிள்ளைகளுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தாதீர்கள். அப்படிச் செய்தால், அவர்கள் சோர்ந்து போவார்கள்.
22அடிமைகளே, உலகத்தில் இருக்கின்ற உங்கள் எஜமான்களுக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருங்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெறுவதற்காக, அவர்கள் உங்களைக் கவனிக்கும்போது மட்டும் கீழ்ப்படிகின்றவர்களாய் இராமல், கர்த்தரில் பயபக்தியுள்ளவர்களாய் உண்மையான இருதயத்தோடு எப்போதும் கீழ்ப்படியுங்கள். 23நீங்கள் எதைச் செய்தாலும் அதை மனிதர்களுக்காகச் செய்யாமல் கர்த்தருக்காகவே செய்கின்றீர்கள் என முழு மனதோடு செய்யுங்கள். 24அதற்குரிய வெகுமதியாக கர்த்தரிடமிருந்து உரிமைச் சொத்தைப் பெற்றுக்கொள்வீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். கிறிஸ்துவாகிய ஆண்டவருக்கே நீங்கள் பணி செய்கின்றீர்கள். 25ஏனெனில் தவறு செய்கின்றவன் தான் செய்கின்ற தவறுக்கான தண்டனையைப் பெறுவான். இறைவனின் நியாயத்தீர்ப்பில் பக்கச்சார்பு காட்டப்படவே மாட்டாது.
Currently Selected:
கொலோசேயர் 3: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.