YouVersion Logo
Search Icon

கொலோசேயர் 2

2
1உங்களுக்காகவும் லவோதிக்கேயா பட்டணத்தில் இருக்கின்றவர்களுக்காகவும் இன்னும் என்னை நேரில் சந்தித்திராத மற்றெல்லோருக்காகவும், நான் எவ்வளவு போராடுகிறேன் என்பதை நீங்கள் அறிய வேண்டும் என நான் விரும்புகிறேன். 2அவர்கள் உள்ளத்தில் ஊக்கம் அடைந்து, அன்பினால் ஐக்கியப்பட்டு, அதனால் இறைவனுடைய மறைபொருளை உறுதியாகப் புரிந்துகொள்வதன் முழு நிறைவை பெறவேண்டும் என்பதே எனது நோக்கம். இறைவனுடைய அந்த மறைபொருள் கிறிஸ்துவே. 3ஞானம், அறிவு ஆகிய செல்வங்கள் எல்லாம் அவருக்குள்ளே மறைந்திருக்கின்றன. 4சரியானவை போல் தோன்றும் தவறான வாதங்களால் எவரும் உங்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக இதைச் சொல்கின்றேன். 5உடலால் நான் உங்களோடு இல்லையென்றாலும், ஆவியில் உங்களுடனேயே இருக்கின்றேன். நீங்கள் ஒழுங்குடன் இணைந்து நின்று கிறிஸ்துவில் வைத்திருக்கும் விசுவாசத்தில் உறுதியுடன் வேரூன்றி இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
கிறிஸ்துவுக்குள் முழுநிறை வாழ்வு
6எனவே கிறிஸ்து இயேசுவை நீங்கள் ஆண்டவராய் ஏற்றுக்கொண்டபடியே, அவரோடு தொடர்ந்து ஒன்றுபட்டு வாழுங்கள். 7நீங்கள் அவரில் வேரூன்றி, கட்டி எழுப்பப்பட்டவர்களாகவும், உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டபடியே விசுவாசத்தில் பலப்படுகின்றவர்களாகவும், நன்றியால் நிரம்பி வழிகின்ற மக்களாகவும் வாழுங்கள்.
8எவரும் உங்களை தங்கள் வெறுமையான ஏமாற்றுப் பேச்சுக்களிலும் மனித தத்துவ ஞானங்களிலும் சிக்க வைத்து கட்டுப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இவை மனித பாரம்பரியத்திலும், உலகைக் கட்டுப்படுத்தும்#2:8 உலகைக் கட்டுப்படுத்தும் – உலக அடிப்படைக் கொள்கை என்றும் மொழிபெயர்க்கலாம். ஆவிக்குரிய சக்திகளிலும் தங்கியுள்ளனவே அன்றி, கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.
9ஏனெனில், இறைதன்மையின் முழுநிறைவும், உடல் உருவில் கிறிஸ்துவில் குடிகொண்டிருக்கிறது. 10ஆகவே, நீங்களும் கிறிஸ்துவில் நிறைவு பெற்றவர்களாய் இருக்கின்றீர்கள். அவரே எல்லா வல்லமைகளுக்கும் அதிகாரங்களுக்கும் மேலான தலைவராய் இருக்கின்றார். 11நீங்களும் கிறிஸ்துவில் விருத்தசேதனத்தைப் பெற்றிருக்கிறீர்கள், இதனால் உங்கள் பாவ மனித இயல்பு களையப்பட்டது. இந்த விருத்தசேதனம் மனிதருடைய கைகளினால் செய்யப்படாமல் கிறிஸ்துவினால் உருவான விருத்தசேதனம் ஆகும். 12ஞானஸ்நானத்திலே நீங்கள் அவருடன் அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரிடத்தில் இருந்து கிறிஸ்துவை உயிருடன் எழுப்பிய இறைவனுடைய வல்லமையில் நீங்கள் வைத்த விசுவாசத்தின் மூலமாக, அவருடனேகூட எழுப்பப்பட்டும் இருக்கின்றீர்கள்.
13உங்கள் மீறுதல்களிலும், பாவ இயல்பைக் களைகின்ற விருத்தசேதனம் பெற்றுக்கொள்ளாமையிலும்#2:13 விருத்தசேதனம் பெற்றுக்கொள்ளாமையிலும் – கிரேக்க மொழியில், உடலில் விருத்தசேதனம் செய்யாததனாலும் என்றுள்ளது. நீங்கள் இறந்தவர்களாக இருந்தீர்கள். அப்போது இறைவன் நம்முடைய எல்லா மீறுதல்களையும் மன்னித்து, உங்களைக் கிறிஸ்துவுடன் உயிர்ப்பித்தார். 14நமக்கு விரோதமாய் எழுதப்பட்டிருந்ததான கட்டளைகளைக் கொண்ட குற்றப் பத்திரத்தை நீக்கி, அதைச் சிலுவையில் ஆணியடித்து இல்லாதொழித்து விட்டார். 15அவர், ஆளும் வல்லமைகளிடமிருந்தும் அதிகாரங்களிடமிருந்தும் அவற்றின் வல்லமைகளைக் களைந்து, சிலுவையினால் அவற்றின் மேல் வெற்றிகொண்டு அவற்றைப் பகிரங்கக் காட்சிப் பொருளாக்கினார்.
மனித விதிமுறைகளிலிருந்து விடுதலை
16எனவே நீங்கள் உண்பது மற்றும் அருந்துவது குறித்தோ பண்டிகைகள், அமாவாசை நாட்கள், ஓய்வுநாட்கள் குறித்தோ எவரும் உங்களை நியாயம் தீர்க்க இடமளிக்க வேண்டாம். 17அந்த விதிமுறைகள் எல்லாம் வர இருந்த காரியங்களின் வெறும் நிழல் மட்டுமே. அவற்றின் உண்மை அர்த்தம் கிறிஸ்துவில் காணப்படுகின்றது. 18பொய்யான தாழ்மையிலும், வானவர்களை ஆராதனை செய்வதிலும் மகிழ்கின்றவர்களால் நீங்கள் பெறவிருக்கும் உங்கள் வெகுமதியை இழந்து விடாதிருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்டவன், தான் கண்ட தரிசனங்களைக் குறித்து அதிகமாய் விபரித்துச் சொல்கின்றான். ஆவிக்குரிய தன்மையற்ற அவனுடைய மனம், வீணான சிந்தனைகளில் பெருமைகொள்கிறது. 19தலையாகிய கிறிஸ்துவிலிருந்து தொடர்பை அவன் இழந்துவிட்டான். கிறிஸ்துவினாலேயே முழு உடலும், மூட்டுக்களினாலும் தசை நார்களினாலும் ஒன்றிணைக்கப்பட்டு ஊட்டம் பெற்று, இறைவன் வளரச் செய்கின்றபடி அது வளர்ச்சி அடைகிறது.
20கிறிஸ்துவுடனேகூட நீங்கள் இந்த உலகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு#2:20 உலகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு என்பது ஆவிக்குரிய தீய சக்திகளுக்கு மரணித்தவர்களாய் இருக்கின்றீர்கள். அப்படியானால், அதற்கு உட்பட்டவர்கள் போல் இன்னும் ஏன் அதன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வருகின்றீர்கள்? 21“பயன்படுத்தாதே! இவற்றை சுவைக்காதே! தொடாதே!” என்று அவைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பது ஏன்? 22இவை பயன்படுத்தப்பட்டு காலப்போக்கில் ஒழிந்து போகின்றவைகளைக் குறித்ததான கட்டளைகள். ஏனெனில் இவை மனிதருடைய கட்டளைகளையும் போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டவை. 23அவர்களின் இந்தக் கட்டளைகள், தாங்களே தங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட வழிபாட்டையும் பொய்யான தாழ்மையையும் உடல் ஒடுக்குதல்களையும் பொறுத்தவரையில், ஞானமானவை போல் காணப்படுவது உண்மையே. ஆனால் உடல் ஆசைகளை#2:23 உடல் ஆசைகளை என்பது பாவம் செய்யத் தூண்டும் ஆசை. அடக்கி ஆளுவதற்கு இவை பயன்படாது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in