YouVersion Logo
Search Icon

1 கொரிந்தியர் 3

3
திருச்சபையின் பிரிவுகள்
1பிரியமானவர்களே, உங்களுக்கு நான் கூற முற்படுவதை நீங்கள் ஆவிக்குரியவர்கள் என எண்ணி கூற முடியவில்லை. மாறாக உலகத்தவர்களாய் கிறிஸ்துவுக்குள் வளருவதில் குழந்தைகளாய் எண்ணியே உங்களுக்குக் கூற வேண்டியுள்ளது. 2நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரான நிலையில் இருக்காதபடியால், நான் உங்களுக்குத் திட உணவை கொடுக்காமல் பாலையே கொடுத்தேன். நீங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளத் தயாரான நிலையில் இல்லை. 3ஏனெனில், நீங்கள் இன்னமும் உலகத்திற்குரியவர்களாக இருக்கின்றீர்கள். உங்களிடையே பொறாமையும் சண்டை சச்சரவுகளும் இருக்கின்றபடியால் உலகத்திற்குரிய சாதாரண மனிதர்களைப் போல் அல்லவா நடந்துகொள்கிறீர்கள்? 4ஒருவன், “நான் பவுலைப் பின்பற்றுகின்றவன்” என்றும் மற்றவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகின்றவன்” என்றும் சொல்கின்றபடியால் நீங்கள் சாதாரண மனிதர்கள் அல்லவா?
5அப்பொல்லோ யார்? பவுல் யார்? ஒவ்வொருவரும் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த பணியை செய்கின்ற உங்களை விசுவாசத்திற்குள் வழிநடத்திய கர்த்தரின் ஊழியர்கள் தானே. 6நான் விதையை நட்டேன், அப்பொல்லோ தண்ணீர் ஊற்றினான், இறைவனே அதை வளரச் செய்தார். 7எனவே நடுகின்றவனோ தண்ணீர் ஊற்றுகின்றவனோ பிரதானமானவர்கள் அல்ல, மாறாக வளரச் செய்கின்ற இறைவனே பிரதானமானவர். 8நடுகின்றவனுக்கும் தண்ணீர் ஊற்றுகின்றவனுக்கும் ஒரு நோக்கமே உண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ற கூலியைப் பெறுவார்கள். 9நாங்கள் இறைவனின் சக வேலையாட்கள். நீங்களோ இறைவனின் வயல் நிலமும், இறைவனின் கட்டடமுமாய் இருக்கின்றீர்கள்.
10இறைவன் எனக்குத் தந்த கிருபையின்படி ஒரு கட்டட நிபுணனைப் போல அத்திவாரம் போட்டேன். வேறு ஒருவன் அதன்மீது கட்டுகின்றான். ஆனால் அதன்மீது கட்டுகின்ற ஒவ்வொருவனும் கவனமாயிருக்க வேண்டும். 11ஏற்கெனவே போடப்பட்ட அத்திவாரத்தைத் தவிர, வேறு அத்திவாரத்தைப் போட ஒருவனாலும் முடியாது. அந்த அத்திவாரம் இயேசு கிறிஸ்துவே. 12ஒருவன் இந்த அத்திவாரத்தின் மேல் கட்டும்போது தங்கம், வெள்ளி, மாணிக்கக் கற்கள், மரம், புல், அல்லது வைக்கோல் கொண்டு கட்டலாம். 13ஆனால் கிறிஸ்துவின் நாளில்,#3:13 கிறிஸ்துவின் நாளில் என்பது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் ஒவ்வொருவனும் செய்த வேலையின் தன்மை வெளிப்படும். அது நெருப்பினால் வெளிப்படுத்தப்படும். மேலும், ஒவ்வொரு மனிதனுடைய வேலையின் தரத்தையும் நெருப்பே பரிசோதிக்கும். 14அவன் அத்திவாரத்தின் மேல் கட்டியது நிலைத்திருந்தால், அவன் தனக்குரிய வெகுமதியைப் பெறுவான். 15அவன் கட்டியது எரிந்து போகுமாயின் அவன் நட்டமடைவான். ஆனால் அவனோ இரட்சிக்கப்படுவான். ஆயினும் அவனுடைய நிலை நெருப்புச் சுவாலையில் அகப்பட்டுத் தப்பிய ஒருவனின் நிலைமையைப் போல் இருக்கும்.
16நீங்கள் இறைவனின் ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும், இறைவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் குடிகொண்டிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? 17யாராயினும் ஒருவன் இறைவனுடைய ஆலயத்தை அழித்தால், இறைவன் அவனை அழித்து விடுவார். ஏனெனில் இறைவனின் ஆலயம் பரிசுத்தமானது. நீங்களே அந்த ஆலயம்.
18உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதிருங்கள். உங்களில் யாராவது இவ்வுலக மதிப்பீட்டின்படி தன்னை ஞானமுள்ளவனாக எண்ணினால் முதலில் அவன் அறிவிலி ஆகியே பின்னர் ஞானியாகட்டும். 19ஏனெனில் இவ்வுலகத்தின் ஞானம் இறைவனின் பார்வையில் முட்டாள்தனமானதாக இருக்கின்றது. எழுதியிருக்கின்றபடி: “இறைவன் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திற்குள்ளேயே சிக்க வைக்கிறார்.”#3:19 யோபு 5:13 20மேலும், “ஞானிகளுடைய சிந்தனைகள் பயனற்றவை என்று கர்த்தர் அறிவார்”#3:20 சங். 94:11 எனவும் எழுதப்பட்டிருக்கிறது. 21எனவே இனிமேல் மனிதர்களைக் குறித்துப் பெருமைகொள்ள வேண்டாம்! எல்லாக் காரியங்களும் உங்களுடையவைதான். 22பவுலானாலும், அப்பொல்லோவானாலும், கேபாவானாலும், இந்த உலகமானாலும், வாழ்வானாலும், மரணமானாலும், நிகழ்காலமானாலும், எதிர்காலமானாலும் எல்லாமே உங்களுடையதே. 23நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள். கிறிஸ்து இறைவனுக்குரியவர்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in