YouVersion Logo
Search Icon

பிலிப்பியர் 4

4
ஒற்றுமையாக நிலைத்திருக்க அழைப்பு
1ஆகையால் நான் அன்பாயிருக்கிற எனக்கு பிரியமானவர்களே, என் நண்பர்களே, அப்படியே நீங்களும் கர்த்தரில் உறுதியாய் நிற்கவேண்டும். நீங்களே நான் காண விரும்புகிற என் மகிழ்ச்சியும், என் கிரீடமுமானவர்கள்.
2கர்த்தரில் ஒரே மனதுள்ளவர்களாய் இருக்கும்படி, எயோதியாளிடமும் சிந்திகேயாளிடமும் கேட்டுக்கொள்கிறேன். 3ஆம், என் உண்மையுள்ள உடன் கூட்டாளியே, உன்னிடமும் கேட்கிறேன். இந்தப் பெண்களுக்கு உதவிசெய். இவர்கள் கிலெமெந்தோடும், மற்ற எனது உடன் ஊழியரோடும் சேர்ந்து, என்னுடன் நற்செய்திக்காக போராடினார்கள். இவர்கள் எல்லோருடைய பெயர்களும் ஜீவப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
கடைசி புத்திமதிகள்
4எப்பொழுதும் கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருங்கள். நான் மீண்டும் உங்களுக்குச் சொல்கிறேன்: மகிழ்ச்சியாயிருங்கள்! 5உங்கள் கனிவான குணம் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கட்டும். கர்த்தர் விரைவில் வருகிறார். 6எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் எல்லாவற்றிலும் நன்றி செலுத்துவதோடு, உங்கள் விண்ணப்பங்களை, மன்றாட்டினாலும், வேண்டுதலினாலும் இறைவனிடம் அர்ப்பணியுங்கள். 7அப்பொழுது, விளங்கிக்கொள்ளும் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட இறைவனுடைய சமாதானமும், அமைதியும் உங்கள் இருதயங்களையும், மனங்களையும் கிறிஸ்து இயேசுவில் காத்துக்கொள்ளும்.
8இறுதியாக பிரியமானவர்களே, உண்மையானது எவையோ, மதிப்பானது எவையோ, சரியானது எவையோ, தூய்மையானது எவையோ, அன்பானது எவையோ, அத்துடன் பாராட்டுதலுக்குத் தகுந்தது எவையோ, மேன்மையும் புகழ்ச்சியுமானது எவைகளோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். 9நீங்கள் என்னிடமிருந்து எவைகளை எல்லாம் கற்றுக்கொண்டீர்களோ, பெற்றுக்கொண்டீர்களோ, கேட்டீர்களோ, அல்லது என் நடத்தையில் கண்டீர்களோ, அவைகளையே கைக்கொள்ளுங்கள். அப்பொழுது சமாதானத்தின் இறைவன் உங்களோடு இருப்பார்.
நன்கொடைகளுக்கு நன்றி
10இப்பொழுதாவது எனக்கு மீண்டும் உதவிசெய்ய உங்களுக்கு முடியுமாயிருப்பதைக்குறித்து கர்த்தரில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் என்னில் அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பது உண்மை. ஆனால் அதைக் காண்பிப்பதற்கு உங்களுக்குத் தருணம் கிடைக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும். 11நான் தேவையுள்ளவனாக இருப்பதனால் இதைக் கூறவில்லை. ஏனெனில், நான் எந்தச் சூழ்நிலையிலும் மனநிறைவுடன் இருக்கக் கற்றுக்கொண்டேன். 12ஏழ்மையுடன் வாழவும், நிறைவுடன் வாழவும் எனக்குத் தெரியும். வயிறார சாப்பிட்டிருக்கவும், பசியாக இருக்கவும், நிறைவுடனும் தேவையுடனும் வாழவும், எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலைகளிலும், எப்படி மனநிறைவுடன் வாழ்வது என்பதன் இரகசியத்தையும் நான் கற்றுக்கொண்டுள்ளேன். 13எனக்குப் பெலன் கொடுக்கிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு.
14இப்படி இருந்தும், எனது கஷ்டங்களில் நீங்களும் பங்குகொண்டது நல்லதே. 15மேலும் பிலிப்பியர்களே, நான் மக்கெதோனியாவைவிட்டுப் புறப்பட்டுவந்து, உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்த ஆரம்ப நாட்களில், உங்களைத்தவிர வேறு எந்த ஒரு திருச்சபையும், கொடுக்கல் வாங்கல் காரியங்களில் என்னுடன் பங்குகொள்ளவில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; 16ஏனெனில் நான் தெசலோனிக்கேயாவில் இருக்கையிலும் எனக்குத் தேவை இருந்தபோதெல்லாம், இரண்டொருதரம் எனக்கு நீங்கள் உதவி அனுப்பினீர்கள். 17நான் உங்கள் நன்கொடையைப் பெறுவதை நாடவில்லை. ஆனால் உங்கள் கணக்கில் நற்பலன்கள் அதிகரிக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். 18எனவே நான் எல்லாவற்றையும் முழுமையாகப் பெற்றுக்கொண்டேன். என்னிடம் இப்போது தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. நான் நீங்கள் அனுப்பிய நன்கொடையை எப்பாப்பிராத்துவிடமிருந்து பெற்றுக்கொண்டேன், அவை இறைவனைப் பிரியப்படுத்துகிற நறுமணமுள்ள காணிக்கைகளும், ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய பலியும் ஆகும். 19என் இறைவன் கிறிஸ்து இயேசுவில் உள்ள தமது மகிமை நிறைந்த செல்வத்தின்படியே உங்கள் எல்லாக் குறைகளையும் நிறைவாக்குவார்.
20நமது இறைவனும் பிதாவுமாய் இருக்கிறவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
இறுதி வாழ்த்துதல்
21கிறிஸ்து இயேசுவில் இருக்கிற எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் வாழ்த்துதல் சொல்லுங்கள்.
என்னுடன் இருக்கிற சகோதர சகோதரிகள், உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறார்கள்.
22எல்லாப் பரிசுத்தவான்களும் உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறார்கள். விசேஷமாக ரோமப் பேரரசன் சீசரின் அரண்மனையைச் சேர்ந்த பரிசுத்தவான்களும் வாழ்த்துதல் அனுப்புகிறார்கள்.
23கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடன் இருப்பதாக. ஆமென்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy