YouVersion Logo
Search Icon

பிலிப்பியர் 3

3
மாம்ச இயல்பில் மனவுறுதி வேண்டாம்
1கடைசியாக, பிரியமானவர்களே, கர்த்தரில் சந்தோஷமாயிருங்கள். எழுதியதையே மீண்டும் எழுதுவது எனக்கு கஷ்டமானதல்ல. அது உங்களுக்குப் பாதுகாப்பாய் இருக்கும். 2நாய்களுக்கு ஜாக்கிரதையாயிருங்கள், விருத்தசேதனம் வேண்டும் என்பவர்களைக்குறித்து கவனமாயிருங்கள். தீமை செய்கிறவர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். 3மாம்சத்தில் மனவுறுதி வைக்காமல் இறைவனின் ஆவியானவரின் துணையுடன் வழிபட்டு, கிறிஸ்து இயேசுவை மகிமைப்படுத்தும் நாமே, உண்மையான விருத்தசேதனமுள்ளவர்கள். 4மாம்சத்தின்மேல் மனவுறுதிகொள்வதற்கு என்னிடமும் தன்மைகள் உண்டு.
யாராவது மனுஷிக விஷயத்தில் மனவுறுதி வைக்கும் தன்மைகள் தன்னிடம் இருப்பதாக எண்ணினால், என்னிடம் அது அதிகமாய் இருக்கிறது: 5ஏனெனில் நான் பிறந்து எட்டாம் நாளிலேயே விருத்தசேதனம் பெற்றவன். இஸ்ரயேல் வம்சத்தைச் சேர்ந்தவன். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். எபிரெயரில் பிறந்த எபிரெயன்; மோசேயின் சட்டத்தின்படி நான் ஒரு பரிசேயன். 6பக்தி வைராக்கியத்தின் நிமித்தம் திருச்சபையைத் துன்புறுத்தியவன்; மோசேயினுடைய சட்டத்தின் நீதியைப் பொறுத்தவரையில் குற்றமற்றவன்.
7ஆனால் எனக்கு எவைகளெல்லாம் பயனுள்ளவைகளாய் இருந்தனவோ, அவை எல்லாமே இப்பொழுது கிறிஸ்து என்னில் செய்தவற்றின் நிமித்தம், எனக்கு பயனற்றவை என்று கருதுகிறேன். 8அதுமட்டுமல்ல, நான் என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறியும் அந்த அறிவின் மேன்மையுடன் அவைகளை ஒப்பிடும்போது, எல்லாமே நஷ்டம் என்று கருதுகிறேன். நான் அவருக்காக எல்லாவற்றையும் அகற்றி, கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள, அவைகளைக் குப்பையாக எண்ணுகிறேன். 9நான் அவரோடு, இணைந்திருக்கவே விரும்புகிறேன். மோசேயின் சட்டத்தினால் வரும் சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின்மூலம் கொடுக்கப்பட்ட அவருடைய நீதியை உடையவனாய் இருக்கவே விரும்புகிறேன். இந்த நீதி இறைவனிலிருந்து விசுவாசத்தினால் வருகிறதாயிருக்கிறது. 10நான் கிறிஸ்துவை அறியவும், அவரின் உயிர்த்தெழுதலின் வல்லமையை அறியவும் விரும்புகிறேன். அத்துடன் அவருடைய மரணத்தில் அவரைப் போலாகி, அவருடைய துன்பத்தைப் பகிர்ந்துகொள்வதன் ஐக்கியத்தையும் அறிந்துகொள்ள விரும்புகிறேன். 11இவ்வாறு எப்படியாகிலும், மரித்தோரின் உயிர்த்தெழுதலை நானும் அடைந்துகொள்ள முடியும்.
12இவை எல்லாவற்றையும் நான் ஏற்கெனவே பெற்றுவிட்டேன் என்றோ, ஏற்கெனவே முழுமை நிலையை அடைந்துவிட்டேன் என்றோ நான் கூறவில்லை. ஆனால் கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றவேண்டும் என்றே தொடர்ந்து கடும் முயற்சிசெய்கிறேன். 13பிரியமானவர்களே, நான் அந்த இலக்கை அடைந்துவிட்டேன் என்று எண்ணவில்லை. ஆனால் நான் ஒன்றுசெய்கிறேன்: கடந்து போனவற்றை மறந்து, எனக்கு முன்னதாக உள்ளவற்றை நோக்கி, அவற்றை அடைவதற்காக கடும் முயற்சி எடுக்கிறேன். 14நான் இறைவன் கொடுக்கப்போகும் பரிசை வென்றெடுப்பதற்காக, இலக்கை நோக்கி முன்னேற கடுமையாய் தொடருகிறேன். அந்தப் பரிசை, அதாவது பரலோக வாழ்வைப் பெறும்படியாகவே, இறைவன் என்னை கிறிஸ்து இயேசுவின் மூலமாக அழைத்திருக்கிறார்.
பவுலின் முன்மாதிரியை பின்பற்றுதல்
15எனவே நம்மில் முதிர்ச்சி அடைந்தோர் யாவரும், இவ்வாறான சிந்தையே கொண்டிருக்கவேண்டும். எதைப்பற்றியாவது உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்குமானால், அதையும்கூட, இறைவனே உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். 16ஆனால் நாம் ஏற்கெனவே அடைந்திருந்த வளர்ச்சிக்கு ஏற்றவிதமாய் வாழமுயல்வோம்.
17பிரியமானவர்களே, என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுபவர்களோடு, நீங்களும் சேர்ந்துகொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய எடுத்துக்காட்டின்படி வாழ்கிறவர்களையும் கவனித்துக் கற்றுக்கொள்ளுங்கள். 18ஏனெனில், அநேகர் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாகவே வாழ்கிறார்கள். இதைப்பற்றி நான் உங்களுக்கு அடிக்கடி சொல்லியிருக்கிறேன். இப்பொழுது மீண்டும் அதைக் கண்ணீருடன் உங்களுக்குச் சொல்கிறேன். 19பேரழிவே அவர்களது முடிவு, அவர்களுடைய வயிறே அவர்களது தெய்வம், வெட்கக்கேடானது அவர்களது மேன்மை, பூமிக்குரியவைகளைப் பற்றியே அவர்களது சிந்தனை. 20ஆனால் நமது குடியுரிமை பரலோகத்திற்கே உரியது. அங்கிருந்தே கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வருவாரென எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம். 21அவர் எல்லாவற்றையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர தமது வல்லமையான ஆற்றலைக் கொடுக்கும்படியே நமது பலவீனமான அழிவுக்குரிய உடல்களை மகிமையுள்ள உடலைப்போல் மாற்றுவார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy