YouVersion 標識
搜索圖示

மத்தேயு 4

4
இயேசு சோதிக்கப்படுதல்
1அதன்பின்பு இயேசு, பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே பாலைநிலத்துக்கு வழிநடத்தப்பட்டார். 2அவர் இரவு பகல் நாற்பது நாட்கள் உபவாசித்து முடித்த பின், பசியாய் இருந்தார். 3சோதனைக்காரன் அவரிடம் வந்து, “நீர் இறைவனின் மகனானால், இந்தக் கற்கள் அப்பங்களாகும்படி சொல்லும்” என்றான்.
4அதற்கு இயேசு, “ ‘மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, இறைவனுடைய வாயிலிருந்து வரும், ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான்’ என்று எழுதப்பட்டிருக்கிறது”#4:4 உபா. 8:3 எனப் பதிலளித்தார்.
5பின்பு பிசாசு அவரை எருசலேம் நகரத்திற்குக்#4:5 எருசலேம் நகரத்திற்கு – கிரேக்க மொழியில் பரிசுத்த நகரம் என்றுள்ளது. கொண்டுபோய், ஆலயத்தின் உச்சியிலே நிறுத்தி, 6“நீர் இறைவனின் மகனானால், கீழே குதியும்.
“ ‘இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்.
உமது பாதம் கற்களின் மீது மோதாதபடி,
அவர்கள் உம்மைத் தமது கைகளினால் தாங்கிக்கொள்வார்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறதே”#4:6 சங். 91:11,12
என்றான்.
7இயேசு அவனிடம், “ ‘உன் இறைவனாகிய கர்த்தரை சோதிக்க வேண்டாம்’ என்றும் எழுதியிருக்கிறதே”#4:7 உபா. 6:16 எனப் பதிலளித்தார்.
8மீண்டும் பிசாசு அவரை மிக உயரமான மலைக்குக் கொண்டுபோய், உலகத்தின் எல்லா அரசுகளையும், அதன் மேன்மையையும் அவருக்குக் காண்பித்து, 9“நீர் என் முன் மண்டியிட்டு விழுந்து என்னை ஆராதித்தால், இவை எல்லாவற்றையும் நான் உமக்குத் தருவேன்” என்றான்.
10இயேசு அவனிடம், “சாத்தானே, என்னைவிட்டு விலகிப் போ! ‘உனது இறைவனாகிய ஆண்டவரை ஆராதித்து, அவரை மட்டுமே வழிபடுவாயாக’ என்றும் எழுதியிருக்கிறது”#4:10 உபா. 6:13 என்று சொன்னார்.
11அப்போது பிசாசு அவரைவிட்டுச் சென்றான்; இறைதூதர்கள் வந்து அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
இயேசு பிரசங்கிக்க ஆரம்பித்தல்
12யோவான் சிறையில் அடைக்கப்பட்டதை இயேசு கேள்விப்பட்டபோது, அவர் கலிலேயாவுக்குத் திரும்பி வந்தார். 13அவர் நாசரேத்தைவிட்டு கப்பர்நகூமுக்குப் போய், அங்கே வாழ்ந்தார்; அது செபுலோன், நப்தலி பகுதிகளிலுள்ள கடலருகே இருந்தது. 14இறைவாக்கினன் ஏசாயா மூலமாய்:
15“செபுலோன் நாடே! நப்தலி நாடே!
யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே!
யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவே!
16இருளில் வாழும் மக்கள்
பெரிய ஒளியைக் கண்டார்கள்;
மரண நிழல் சூழ்ந்த நாட்டில் வாழ்வோர் மீது
ஒளி உதித்தது”#4:16 ஏசா. 9:1,2
என்று சொல்லப்பட்டவை நிறைவேறும்படியே இப்படி நடந்தது.
17அந்த வேளையிலிருந்து இயேசு, “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபமாய் இருக்கின்றது” எனப் பிரசங்கம் பண்ணத் தொடங்கினார்.
இயேசு, முதல் சீடர்களை அழைத்தல்
18இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா ஆகிய சகோதரர்கள் இருவரைக் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தார்கள். 19இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை, மீன்களைப் பிடிப்பது போல், மனிதர்களைச் சேர்ப்பவனாக்குவேன்” என்றார். 20உடனே அவர்கள், தங்கள் வலைகளைக் கைவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.
21அவர் அங்கிருந்து போகையில், வேறு இரண்டு சகோதரர்களான செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார். அவர்கள் தங்கள் தகப்பன் செபதேயுவுடன் ஒரு படகில் இருந்து, தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். 22உடனே அவர்கள் படகையும், தங்கள் தகப்பனையும் விட்டுவிட்டு, அவரைப் பின்தொடர்ந்து போனார்கள்.
இயேசு நோயாளர்களைக் குணமாக்குதல்
23இயேசு கலிலேயா முழுவதும் சென்று, அவர்களுடைய ஜெபஆலயங்களில் கற்பித்து, இறையரசின் நற்செய்தியைப் போதித்தார். அத்துடன் மக்களுக்கு இருந்த எல்லாவிதமான நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கினார். 24அவரைப்பற்றிய செய்தி, சீரியா முழுவதும் பரவியது. மக்கள் அவரிடம், பல்வேறு வியாதி உள்ளவர்களையும், வேதனை உள்ளவர்களையும், பேய் பிடித்தவர்களையும், வலிப்பு உள்ளவர்களையும், முடக்குவாதம் உள்ளவர்களையும் கொண்டுவந்தார்கள்; அவர் அவர்களை குணமாக்கினார். 25கலிலேயா, தெக்கப்போலி,#4:25 தெக்கப்போலி – பத்துப் பட்டணங்கள் என்று அர்த்தம் எருசலேம், யூதேயா மற்றும் யோர்தானுக்கு மறுகரையில் இருந்தும் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.

醒目顯示

分享

複製

None

想要在所有設備上保存你的醒目顯示嗎? 註冊或登入