YouVersion 標識
搜索圖示

மத்தேயு 3

3
யோவான் ஸ்நானகன்
1அந்நாட்களில் யோவான் ஸ்நானகன், யூதேயாவின் பாலைநிலப் பகுதியில் வருகை தந்து, 2“மனந்திரும்புங்கள்,#3:2 கிரேக்க மூலமொழியில் மனந்திரும்புங்கள் என்ற சொல்லின் அர்த்தம் பாவத்தைவிட்டு மனம் வருந்தி, மனந்திரும்பி இறைவனிடம் திரும்பு என்பதாகும். பரலோக அரசு சமீபமாய் இருக்கின்றது” என்று பிரசங்கித்தான்.
3“ ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்,
அவருக்கென நேரான பாதைகளை உண்டுபண்ணுங்கள்’
என்று பாலைநிலத்தில் ஒரு குரல் அழைக்கின்றது”#3:3 ஏசா. 40:3
என இறைவாக்கினன் ஏசாயாவின் மூலமாக கூறப்பட்டவன் இவனே.
4யோவானின் உடைகள் ஒட்டக உரோமத்தினால் செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அவனது உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனுமாய் இருந்தது. 5மக்கள் எருசலேமிலிருந்தும், யூதேயா முழுவதிலிருந்தும், யோர்தான் பிரதேசம் அனைத்திலிருந்தும், அவனிடம் போனார்கள். 6அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கை செய்து, யோர்தான் ஆற்றிலே அவனிடம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள்.
7ஆனால், தான் ஞானஸ்நானம் கொடுக்கும் இடத்திற்கு அநேக பரிசேயரும் சதுசேயரும்#3:7 பரிசேயரும் சதுசேயரும் என்பது யூதரின் இரு மதக் குழுவினர். வருவதை யோவான் கண்டு அவர்களிடம் சொன்னதாவது: “விரியன் பாம்புக் குட்டிகளே! வரப்போகும் கடுங்கோபத்திலிருந்து தப்பியோடும்படி உங்களுக்கு எச்சரிக்கை செய்தது யார்? 8நீங்கள் மனந்திரும்பியது உண்மையெனில், அதை நற்செயலில் காண்பியுங்கள். 9‘ஆபிரகாம் எங்கள் தகப்பனாய் இருக்கின்றார்’ என்று நீங்கள் உங்களுக்குள் சொல்லிக்கொள்ளலாம் என நினைக்க வேண்டாம். இந்தக் கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க இறைவனால் முடியும் என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன். 10ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே கோடரி ஆயத்தமாய் இருக்கின்றது. நல்ல கனி கொடாத ஒவ்வொரு மரமும் வெட்டி வீழ்த்தப்பட்டு நெருப்பிலே எறியப்படும்.
11“மனந்திரும்பியவர்களுக்கு நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கின்றேன். ஆயினும் என்னிலும் வல்லமையுடைய ஒருவர், எனக்குப் பின் வருகின்றார். அவரது காலணிகளைச் சுமப்பதற்கும் நான் தகுதியானவன் அல்ல. அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவராலும், நெருப்பினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார். 12தானியம் தூற்றுகின்ற உபகரணம் அவர் கையில் இருக்கின்றது. அவர் தமது கதிரடிக்கும் களத்தை அதனால் சுத்தம் செய்து, கோதுமையைத் தனது களஞ்சியத்தில் சேர்த்துக்கொள்வார். பதர்களையோ அணைந்து போகாத நெருப்பில் எரித்துப் போடுவார்” என்றான்.
இயேசுவின் ஞானஸ்நானம்
13அப்போது யோவானிடம் ஞானஸ்நானம் பெறுவதற்காக இயேசு கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு#3:13 யோர்தானுக்கு என்பது யோர்தான் நதி வந்தார். 14ஆனால் யோவான் அவரிடம், “நான் உம்மிடம் ஞானஸ்நானம் பெற வேண்டியிருக்க, நீர் என்னிடம் வரலாமா?” என்று சொல்லி, அவரைத் தடுக்க முயற்சித்தான்.
15அதற்கு இயேசு, “இப்போது இப்படியே இருக்கட்டும்; இவ்விதமாக எல்லா நீதியையும் முழுவதுமாய் நிறைவேற்றுவது நமக்குப் பொருத்தமானதாய் இருக்கின்றது” எனப் பதிலளித்தார். அப்போது யோவான் அதற்கு இணங்கினான்.
16இயேசு ஞானஸ்நானம் பெற்றவுடனே தண்ணீரைவிட்டு வெளியேறினார். இதோ! உடனே பரலோகம் திறக்கப்பட்டு, இறைவனின் ஆவியானவர் புறாவைப் போன்ற உருவம் கொண்டவராய், அவர்மீது தங்குவதை யோவான் கண்டான். 17அப்போது பரலோகத்திலிருந்து ஒரு குரல், “இவரே என் அன்பு மகன், இவரில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என ஒலித்தது.

醒目顯示

分享

複製

None

想要在所有設備上保存你的醒目顯示嗎? 註冊或登入