லூக்கா 19

19
வரி வசூலிக்கும் சகேயு
1இயேசு எரிகோ பட்டணத்திற்கு வந்து, அதன் வழியாகப்போய்க் கொண்டிருந்தார். 2அங்கே சகேயு என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் வரி வசூலிப்பவர்களின் தலைவனாகவும், செல்வந்தனாகவும் இருந்தான். 3அவன் இயேசு யார் என்று பார்க்க விரும்பினான். ஆனால், அவன் குள்ளனானபடியால், மக்கள் கூட்டத்தில் அவரைப் பார்க்க முடியவில்லை. 4எனவே, சகேயு அவரைப் பார்க்கும்படி முன்னே ஓடிப்போய், ஒரு காட்டத்தி மரத்தில் ஏறிக்கொண்டான். ஏனெனில், இயேசு அந்த வழியாகவே வந்துகொண்டிருந்தார்.
5இயேசு அவ்விடத்திற்கு வந்தபொழுது, அவர் மேலே அண்ணார்ந்து பார்த்து, “சகேயுவே, உடனடியாய் கீழே இறங்கி வா. நான் இன்றைக்கு உன்னுடைய வீட்டில் தங்கவேண்டும்” என்று, அவனுக்குச் சொன்னார். 6அவன் உடனே இறங்கிவந்து, அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான்.
7இதைக் கண்ட யாவரும், “ஒரு ‘பாவியினுடைய’ வீட்டிற்கு இவர் விருந்தாளியாய் வந்திருக்கிறாரே” என்று, முறுமுறுக்கத் தொடங்கினார்கள்.
8ஆனால் சகேயுவோ, எழுந்து நின்று கர்த்தரிடம், “ஆண்டவரே, இதோ நான் என்னுடைய சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். யாருக்காவது எதிலாவது மோசடி செய்திருந்தால் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுப்பேன்” என்றான்.
9அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து, “இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது. ஏனெனில், இவனும் ஆபிரகாமிற்கு மகனாயிருக்கிறானே. 10வழிதவறிப் போனவர்களைத் தேடி இரட்சிப்பதற்காகவே மானிடமகனாகிய நான் வந்திருக்கிறேன்” என்றார்.
பத்து நாணயங்களின் உவமை
11அவர் எருசலேமுக்கு அருகில் இருந்ததாலும், இறைவனுடைய அரசு சீக்கிரமாகவே வரப்போகிறது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்ததாலும், இதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு இயேசு ஒரு உவமையைச் சொன்னார்: 12“எஜமானனாகிய ஒருவன், தான் ஒரு அரசை பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி, தூரத்திலுள்ள நாட்டிற்குப் புறப்பட்டான். 13புறப்படும்போது, அவன் தன் வேலையாட்களில் பத்துப்பேரைக் கூப்பிட்டு, அவர்களிடம் பத்து பொற்காசுகளைக்#19:13 மூல மொழியில் மூன்றுமாதச் சம்பளம் ஒரு மினா. கொடுத்து, ‘நான் வரும்வரை இந்தப் பணத்தைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள்’ என்றான்.
14“ஆனால், அவனுடைய குடிமக்களோ அவனை வெறுத்து, ‘இவன் எங்கள்மேல் அரசனாவதை நாங்கள் விரும்பவில்லை’ என்று சொல்லும்படி, அவனுக்குப் பின்னாலே பிரதிநிதிகளை அனுப்பினார்கள்.
15“ஆனால், அவன் அரசனாக அதிகாரம் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தான். பின்பு அவன், தான் சம்பளத்தைக் கொடுத்த வேலையாட்கள் இன்னும் எவ்வளவு சம்பாதித்திருக்கிறார்கள் என்று அறியும்படி, அவர்களை அழைத்தான்.
16“முதலாவது வேலையாள் வந்து, ‘ஐயா, உம்முடைய ஒரு பொற்காசு இன்னும் பத்து பொற்காசுகளைச் சம்பாதித்திருக்கிறது’ என்றான்.
17“அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், நல்ல வேலைக்காரனே, நீ மிகவும் சிறிய காரியத்தில் உண்மை உள்ளவனாய் இருந்தபடியால், பத்துப் பட்டணங்களுக்கு நீ பொறுப்பாயிரு’ என்றான்.
18“இரண்டாவது வேலையாள் வந்து, ‘ஐயா, உம்முடைய ஒரு பொற்காசு இன்னும் ஐந்து பொற்காசுகளைச் சம்பாதித்திருக்கிறது’ என்றான்.
19“அதற்கு அவனுடைய எஜமான், ‘நீ ஐந்து பட்டணங்களுக்குப் பொறுப்பாயிரு’ என்றான்.
20“பின்பு இன்னொரு வேலையாள் வந்து, ‘ஐயா, இதோ, உம்முடைய ஒரு பொற்காசு. இதை ஒரு கைக்குட்டையில் வைத்திருந்தேன். 21நீர் கடினமான மனிதர். ஆனபடியால், நான் பயந்திருந்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர் என்றும், விதைக்காததை அறுவடைச் செய்கிறவர் என்றும் எனக்குத் தெரியும்’ என்றான்.
22“அதற்கு அவனுடைய எஜமான் அவனிடம், ‘பொல்லாத வேலைக்காரனே, உன்னுடைய சொந்த வார்த்தைகளின்படியே, நான் உனக்குத் தீர்ப்புக் கொடுக்கிறேன்; நான் ஒரு கடினமான மனிதன், வைக்காததை எடுக்கிறவர் என்றும், விதைக்காததை அறுவடைச் செய்கிறவன் என்றும் உனக்குத் தெரியும் அல்லவா? 23அப்படியானால், நீ ஏன் எனது பணத்தை வட்டிக்கடையில் போடவில்லை? நான் திரும்பி வரும்போது அந்தப் பணத்தை வட்டியோடு வாங்கிக்கொள்ளக் கூடியதாய் இருந்திருக்குமே’ என்றான்.
24“பின்பு அந்த எஜமான், அருகே நின்றவர்களைப் பார்த்து, ‘அந்த ஒரு பொற்காசை அவனிடமிருந்து எடுத்து, பத்து பொற்காசுகளை வைத்திருப்பவனுக்குக் கொடுங்கள்’ என்றான்.
25“அதற்கு அவர்கள், ‘ஐயா, அவனிடம் பத்து பொற்காசுகள் இருக்கிறதே’ என்றார்கள்.
26“அவன் அதற்குப் பதிலாக, ‘நான் உங்களுக்குச் சொல்கிறேன், இருக்கிற ஒவ்வொருவனுக்கும் இன்னும் அதிகம் கொடுக்கப்படும். இல்லாதவனிடத்திலிருந்தோ, உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 27நான் தங்கள்மேல் அரசனாயிருப்பதை விரும்பாத என்னுடைய பகைவர்களான அவர்களை, இங்கே கொண்டுவாருங்கள். அவர்களை என் கண் முன்பாகவே கொன்றுபோடுங்கள்’ என்றான்.”
எருசலேமில் இயேசு
28இவைகளை இயேசு சொன்னபின்பு, அவர் தொடர்ந்து எருசலேமை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். 29அவர் ஒலிவமலை என்று அழைக்கப்பட்ட குன்றுக்கு அருகேயிருந்த பெத்பகே, பெத்தானியா ஆகிய இடங்களுக்கு வந்தபோது அவர், தம்முடைய சீடர்களில் இருவரைக் கூப்பிட்டு, 30“உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள். நீங்கள் அதற்குள் போகும்போது, அங்கே ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைக் காண்பீர்கள். அதில் ஒருவருமே இதுவரை ஏறிச்சென்றதில்லை. அதை அவிழ்த்து, இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள். 31யாராவது உங்களிடம், ‘அதை ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது கர்த்தருக்குத் தேவைப்படுகிறது’ என்று சொல்லுங்கள்” என்றார்.
32இப்படியாக, அனுப்பப்பட்டவர்கள் போய் இயேசு தங்களுக்குச் சொல்லியிருந்தபடியே இருக்கக் கண்டார்கள். 33அவர்கள் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறபொழுது, அதன் உரிமையாளர்கள் அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் அந்தக் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
34அதற்கு அவர்கள், “கர்த்தருக்கு இது தேவைப்படுகிறது” என்றார்கள்.
35சீடர்கள் அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் மேலுடைகளை அந்தக் கழுதைக் குட்டியின்மேல் போட்டு, அதன்மேல் இயேசுவை உட்கார வைத்தார்கள். 36அவர் போய்க்கொண்டிருக்கையில், மக்கள் தங்களுடைய மேலுடைகளை வீதியிலே விரித்தார்கள்.
37ஒலிவமலையிலிருந்து கீழ்நோக்கிப் போகிற பாதை இருக்கிற இடத்துக்கு இயேசு வந்தபொழுது, திரளாய்க் கூடியிருந்த சீடர்கள் எல்லோரும் தாங்கள் கண்ட எல்லா அற்புதங்களுக்காகவும் மகிழ்ச்சியுடன், உரத்த குரலில் இறைவனைத் துதிக்கத் தொடங்கினார்கள்:
38“கர்த்தரின் பெயரில் வருகின்ற அரசர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!”
“பரலோகத்தில் சமாதானமும், உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக!”#19:38 சங். 118:26;
39மக்கள் கூட்டத்தில் இருந்த பரிசேயரில் சிலர் இயேசுவிடம், “போதகரே, உமது சீடரைக் கண்டியும்” என்றார்கள்.
40அதற்கு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்கள் பேசாமல் மவுனமாய் இருந்தால், இந்தக் கல்லுகளே சத்தமிடும்” என்றார்.
41அவர் எருசலேமுக்கு அருகில் வந்தபோது, அந்தப் பட்டணத்தைப் பார்த்து, அதற்காக அழுது, 42“உங்களுக்குச் சமாதானத்தைத் தரக்கூடியதை, இன்றைக்காவது நீங்கள் அறிந்திருக்கக் கூடாதபடி அது இப்பொழுதும், உங்கள் பார்வைக்கு மறைக்கப்பட்டதாகவே இருக்கிறது. 43உங்கள் பகைவர் பட்டணத்தைச்சுற்றி அரண்களை அமைத்து, உங்களை முற்றுகையிட்டு, எல்லாப் பக்கங்களிலும் இருந்து உங்களை நெருக்கும் நாட்கள் உங்கள்மேல் வரும். 44அவர்கள் உங்களையும், மதிலுக்குள்ளே உங்களோடிருக்கிற உங்கள் பிள்ளைகளையும், தரையில் மோதியடிப்பார்கள். அவர்களோ, ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி கட்டடங்களை இடித்துப் போடுவார்கள். ஏனெனில், இறைவன் உங்களிடம் வரும் காலத்தை நீங்கள் அறிந்துகொள்ளவில்லை” என்றார்.
ஆலயத்தில் இயேசு
45பின்பு இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்கள் விற்றுக் கொண்டிருந்தவர்களைத் துரத்தத் தொடங்கினார். 46இயேசு அவர்களிடம், “எனது வீடு ஒரு ஜெபவீடாயிருக்கும் என்று எழுதியிருக்கிறதே;#19:46 ஏசா. 56:7 ஆனால், நீங்கள் அதைக் கள்வரின் குகையாக்கியிருக்கிறீர்கள்”#19:46 எரே. 7:11 என்றார்.
47அவர் ஒவ்வொரு நாளும் ஆலயத்திலே போதித்துக் கொண்டிருந்தார். தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியரும், மக்கள் தலைவர்களும், அவரைக் கொலைசெய்வதற்கு முயற்சிசெய்தார்கள். 48இருந்தும், எல்லா மக்களும் அவருடைய வார்த்தையை கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தபடியால், அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.

Àwon tá yàn lọ́wọ́lọ́wọ́ báyìí:

லூக்கா 19: TCV

Ìsàmì-sí

Pín

Daako

None

Ṣé o fẹ́ fi àwọn ohun pàtàkì pamọ́ sórí gbogbo àwọn ẹ̀rọ rẹ? Wọlé pẹ̀lú àkántì tuntun tàbí wọlé pẹ̀lú àkántì tí tẹ́lẹ̀

Àwọn fídíò fún லூக்கா 19