யோவான் 21

21
கடற்கரையில் இயேசு
1இதற்குப் பின்பு இயேசு மீண்டும் தமது சீடர்களுக்கு கலிலேயா#21:1 கிரேக்க மொழியில் திபேரியா கடல் அருகே காட்சியளித்தார். அது இவ்வாறு நடந்தது: 2சீமோன் பேதுருவும், திதிமு என்று அழைக்கப்பட்ட தோமாவும், கலிலேயாவிலுள்ள கானா ஊரைச்சேர்ந்த நாத்தான்யேலும், செபெதேயுவின் மகன்களும், வேறு இரண்டு சீடர்களும் கூடியிருந்தார்கள். 3சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன் பிடிக்கப் போகிறேன்” என்றான். மற்றவர்களும், “நாங்களும் உன்னுடன் வருகிறோம்” என்றார்கள். எனவே அவர்கள் புறப்பட்டு ஒரு படகில் ஏறிச்சென்றார்கள். ஆனால் அந்த முழு இரவும், அவர்கள் மீன்கள் எதையுமே பிடிக்கவில்லை.
4அதிகாலையிலே இயேசு கடற்கரையிலே நின்றார். ஆனால் சீடரோ, அவர் இயேசுவே என்று அறிந்துகொள்ளவில்லை.
5இயேசு அவர்களைக் கூப்பிட்டு, “பிள்ளைகளே, உங்களுக்கு மீன் கிடைக்கவில்லையா?” என்று கேட்டார்.
அவர்கள், “இல்லை” என்றார்கள்.
6“வலையைப் படகின் வலது புறமாக வீசுங்கள். அப்பொழுது உங்களுக்கு மீன்கள் அகப்படும்” என்றார். அவர்கள் அப்படி செய்தபோது, பெருந்திரளான மீன்கள் அகப்பட்டன. அதனால் அந்த வலையை அவர்களால் இழுத்தெடுக்க முடியவில்லை.
7அப்பொழுது இயேசுவுக்கு அன்பான சீடன், “அவர் கர்த்தர்” என்று பேதுருவிடம் கூறினான். அவர் கர்த்தர் என்று அவன் சொன்னதைச் சீமோன் பேதுரு கேட்டவுடனே, அவன், தான் மேலுடைகளின்றி நின்றதினால் இடையில் ஒரு துணியைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் குதித்தான். 8மற்றச் சீடரோ மீன்கள் நிறைந்த வலையை இழுத்துக்கொண்டு படகிலே வந்தார்கள். ஏனெனில் அவர்கள் கரையிலிருந்து அதிக தூரத்தில் இருக்கவில்லை. அவர்கள் ஏறக்குறைய தொண்ணூறு மீட்டர்#21:8 இருநூறு முழம் தூரத்திலேயே இருந்தார்கள். 9அவர்கள் கரைக்கு வந்தபோது, அங்கே எரிகின்ற நெருப்புத்தழலின்மேல் மீன் வைக்கப்பட்டிருப்பதையும், சில அப்பங்கள் இருப்பதையும் கண்டார்கள்.
10இயேசு அவர்களிடம், “நீங்கள் பிடித்த மீன்களிலும் சிலவற்றைக் கொண்டுவாருங்கள்” என்றார். 11சீமோன் பேதுரு படகில் ஏறி வலையைக் கரைக்கு இழுத்துக்கொண்டுவந்தான். வலை 153 பெரிய மீன்களால் நிறைந்திருந்தது. அவ்வளவு மீன்கள் இருந்துங்கூட வலை கிழியவில்லை. 12இயேசு அவர்களிடம், “வந்து சாப்பிடுங்கள்” என்றார். அவருடைய சீடர்களில் ஒருவரும், “நீர் யார்?” என்று கேட்கத் துணியவில்லை. அவர் கர்த்தர் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். 13இயேசு வந்து அப்பத்தை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார். மீனையும் அப்படியே கொடுத்தார். 14இயேசு மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்தபின்பு தமது சீடர்களுக்குக் காட்சியளித்தது இது மூன்றாவது முறையாகும்.
இயேசு பேதுருவை நிலைநிறுத்துவது
15அவர்கள் சாப்பிட்டு முடித்தபின்பு, இயேசு சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகனான சீமோனே, இவர்களைவிட நீ என்னில் அதிக அன்பாயிருக்கிறாயா?” என்று கேட்டார்.
அதற்கு அவன், “ஆம் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியும்” என்றான்.
அப்பொழுது இயேசு, “என் ஆட்டுக்குட்டிகளைப் பராமரிப்பாயாக” என்றார்.
16இயேசு இரண்டாவது முறை அவனிடம், “யோவானின் மகனான சீமோனே, நீ என்னில் அன்பு கூறுகிறாயா?” என்று கேட்டார்.
அதற்கு அவன், “ஆம் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்று உமக்குத் தெரியும்” என்றான்.
அப்பொழுது இயேசு, “என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்றார்.
17மூன்றாவது முறை அவர் அவனிடம், “யோவானின் மகனான சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா?” என்று கேட்டார்.
மூன்றாவது முறை, “நீ என்னை நேசிக்கிறாயா?” என்று இயேசு கேட்டதனால் பேதுரு துக்கமடைந்து, அவன் அவரிடம், “ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்; நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் அறிந்திருக்கிறீர்” என்றான்.
இயேசு அவனிடம், “என் ஆடுகளைப் பராமரிப்பாயாக என்றார். 18மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்கிறேன், நீ இளைஞனாய் இருந்தபோது, நீயே உடை உடுத்திக்கொண்டு நீ விரும்பிய இடத்திற்குப் போனாய்; ஆனால் நீ முதிர்வயதாகும்போது நீ உன் கைகளை நீட்டுவாய், வேறொருவன் உனக்கு உடை உடுத்தி, நீ போகவிரும்பாத இடத்திற்கு உன்னை வழிநடத்திக் கொண்டுபோவான்” என்றார். 19பேதுரு எவ்விதமான மரணத்தை ஏற்றுக்கொண்டு இறைவனை மகிமைப்படுத்தப் போகிறான் என்பதைக் காட்டும்படியாகவே இயேசு இதைச் சொன்னார். பின்பு அவர் அவனிடம், “என்னைப் பின்பற்று” என்றார்.
20பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசு அன்பு செலுத்திய சீடன் பின்னாலே வருவதைக் கண்டான். இந்தச் சீடனே இரவு விருந்தின்போது இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு, “ஆண்டவரே உம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவன் யார்?” என்று கேட்டவன். 21பேதுரு இவனைக் கண்டபோது, “ஆண்டவரே இவனைக் குறித்து என்ன சொல்கிறீர்?” என்று கேட்டான்.
22அதற்கு இயேசு, “நான் திரும்பி வரும்வரைக்கும் அவன் உயிரோடு இருக்கும்படி நான் விரும்பினால் அதுபற்றி உனக்கென்ன? நீ என்னைப் பின்பற்றவேண்டும்” என்றார். 23இதனால் இந்தச் சீடன் சாகமாட்டான் என்கிற பேச்சு சீடருக்குள்ளே இருந்தது. ஆனால் இயேசுவோ அவன் சாகமாட்டான் என்று சொல்லவில்லை; “நான் திரும்பி வரும்வரை இவன் உயிரோடிருப்பதை நான் விரும்பினால் அதுபற்றி உனக்கு என்ன?” என்று சொன்னார்.
24அந்தச் சீடனே இவற்றைக்குறித்து சாட்சி கொடுத்து இவற்றை எழுதியவன். அவனுடைய சாட்சி உண்மையானது.
25இயேசு வேறு பல காரியங்களையும் செய்தார். அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் புத்தகங்களை வைப்பதற்கு இந்த முழு உலகமும் போதாமல் இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்.

Àwon tá yàn lọ́wọ́lọ́wọ́ báyìí:

யோவான் 21: TCV

Ìsàmì-sí

Pín

Daako

None

Ṣé o fẹ́ fi àwọn ohun pàtàkì pamọ́ sórí gbogbo àwọn ẹ̀rọ rẹ? Wọlé pẹ̀lú àkántì tuntun tàbí wọlé pẹ̀lú àkántì tí tẹ́lẹ̀

Àwọn fídíò fún யோவான் 21