அப்போஸ்தலர் 12

12
சிறையிலிருந்து பேதுரு தப்பிய அற்புதம்
1அந்நாட்களில், ஏரோது அரசன் திருச்சபையைத் துன்புறுத்த எண்ணிச், சிலரைக் கைது செய்தான். 2அவன் யோவானின் சகோதரன் யாக்கோபை வாளால் கொலைசெய்தான். 3அது யூதருக்கு விருப்பமாய் இருந்தது என்று அவன் கண்டபோது, பேதுருவையும் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்தான். இது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களில் நடந்தது. 4அவன் பேதுருவைக் கைதுசெய்து, சிறையில் போட்டான். நான்கு காவற்குழுக்களால் காவல் செய்யப்படும்படி அவன் பேதுருவை ஒப்படைத்தான். ஒவ்வொரு காவற்குழுவிலும் நான்கு படைவீரர்கள் இருந்தார்கள். ஏரோது பேதுருவைப் பஸ்கா என்ற பண்டிகை முடிந்தபின்பு வெளியே கொண்டுவந்து, பகிரங்கமாய் விசாரணை செய்வதற்கு எண்ணியிருந்தான்.
5எனவே, பேதுரு சிறையில் வைக்கப்பட்டிருந்தான். ஆனால் சபையார் அவனுக்காக ஊக்கமாய் இறைவனிடம் மன்றாடிக்கொண்டிருந்தார்கள்.
6ஏரோது பேதுருவை விசாரணைக்குக் கொண்டுவர இருந்த நாளுக்கு முந்திய இரவிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டவனாய், இரண்டு படைவீரருக்கு இடையில் நித்திரை செய்துகொண்டிருந்தான். வாசல் காவலரும் சிறையைக் காவல் செய்துகொண்டிருந்தார்கள். 7திடீரென, கர்த்தருடைய தூதன் ஒருவன் அங்கே தோன்றினான். அந்தக் காவல் அறையிலே ஒரு வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி எழுப்பினான். “விரைவாய் எழுந்திரு!” என்றான். உடனே, பேதுருவின் கைகளில் இருந்து சங்கிலிகள் கழன்று விழுந்தன.
8அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவனிடம், “உனது உடைகளை உடுத்தி, பாதரட்சையைப் போட்டுக்கொள்” என்றான். பேதுருவும் அப்படியே செய்தான். மேலும் தூதன் அவனிடம், “நீ உனது மேலுடையைப் போர்த்திக்கொண்டு, என்னைப் பின்தொடர்ந்து வா” என்றான். 9பேதுரு சிறையைவிட்டு அவனைப் பின்தொடர்ந்தான். ஆனால் அந்தத் தூதன் செய்வதெல்லாம் உண்மையாகவே நடக்கின்றன என்று அவன் அறியாதிருந்தான்; அவனோ, தான் ஒரு தரிசனம் காண்கிறதாக எண்ணிக்கொண்டிருந்தான். 10அவர்கள் முதலாம் காவலையும் இரண்டாம் காவலையும் கடந்து, பட்டணத்திற்குப் போகின்ற இரும்பு வாசற்கதவுவரை வந்தார்கள். அப்போது அது தானாகவே திறந்து, அவர்களுக்கு வழிவிட்டது. அவர்கள் அதின் வழியாகச் சென்றார்கள். அவர்கள் ஒரு வீதியின் முழுப் பகுதியையும் நடந்து சென்றபோது, திடீரென அந்தத் தூதன் பேதுருவைவிட்டுப் போனான்.
11அப்பொழுது பேதுரு சுயநினைவடைந்து, “இப்போது கர்த்தர் தமது தூதனை அனுப்பி, ஏரோதுவின் பிடியிலிருந்தும் யூதர்கள் செய்ய நினைத்துக்கொண்டிருந்த எல்லாக் காரியங்களிலிருந்தும் என்னை விடுவித்திருக்கிறார், இதனை சந்தேகமின்றி அறிந்துகொண்டேன்” என்றான்.
12அவன் இதை உணர்ந்தவுடனேயே, மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானுடைய தாயான மரியாளின் வீட்டிற்குப் போனான். அங்கே அநேக மக்கள் ஒன்றுகூடி மன்றாடிக்கொண்டிருந்தார்கள். 13பேதுரு வெளிவாசல் கதவைத் தட்டினான். ரோதை என்னும் பெயருடைய வேலைக்காரப் பெண், யாரெனப் பார்ப்பதற்கு வாசற்கதவுக்கு வந்தாள். 14அது பேதுருவின் குரல் என அவள் அறிந்ததும், மிகவும் சந்தோஷமடைந்தவளாய், கதவையும் திறக்காமலே திரும்பி ஓடிப்போய், “பேதுரு வாசல் அருகே நிற்கிறார்!” என்று மற்றவர்களுக்கு பரபரப்புடன் சொன்னாள்.
15அதற்கு அவர்கள் ரோதையிடம், “உனக்குப் பைத்தியமா?” என்றார்கள். ஆனால் அவளோ தொடர்ந்து, வாசலில் நிற்பது பேதுருவே என்று சொன்னபோது, “அப்படியானால், இது பேதுருவினுடைய தூதனாயிருக்கும்” என்றார்கள்.
16ஆனால் பேதுருவோ தொடர்ந்து தட்டிக்கொண்டே நின்றான். அவர்கள் கதவைத் திறந்து அவனைக் கண்டபோது வியப்படைந்தார்கள். 17அவர்களை அமைதியாய் இருக்கும்படி பேதுரு தன் கையினால் சைகை காட்டி, எவ்விதமாய்த் தன்னைக் கர்த்தர் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார் என்று விவரமாய்ச் சொன்னான். பின்பு அவன், “இதை யாக்கோபுக்கும் மற்றச் சகோதரருக்கும் சொல்லுங்கள்” என்று சொல்லி, வேறொரு இடத்திற்குப் புறப்பட்டுப் போனான்.
18மறுநாள் காலையிலே, பேதுருவுக்கு என்ன நடந்தது என்று படைவீரர்கள் மத்தியில் பெரிய குழப்பம் உண்டாயிற்று. 19ஏரோது அவனை எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்காததினால், காவலரை குறுக்கு விசாரணை செய்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்தான்.
ஏரோதுவின் மரணம்
அப்பொழுது ஏரோது, யூதேயாவிலிருந்து செசரியாவுக்குப் போய், அங்கே சிறிதுகாலம் தங்கியிருந்தான். 20ஏரோதுக்கும் தீரு, சீதோன் பட்டணத்து மக்களுக்கும் இடையில் சச்சரவுகள் நடந்துகொண்டிருந்தன. அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, அவனைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் அரசனின் அந்தரங்க வேலைக்காரனான பிலாஸ்து என்பவனின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு, அரசனோடு சமாதானம் செய்ய விரும்பினார்கள். ஏனெனில் அவர்கள் தமது உணவு விநியோகத்துக்காக, அரசனின் நாட்டையே பெரிதும் சார்ந்திருந்தார்கள்.
21குறித்த நாளில் ஏரோது அரசருக்குரிய உடைகளை உடுத்தி, தனது அரியணையில் அமர்ந்து மக்களுக்கு ஒரு உரையாற்றினான். 22அப்பொழுது அவர்கள், “இது ஒரு தெய்வத்தின் குரல், மனிதனின் குரல் அல்ல” என்று சத்தமிட்டுச் சொன்னார்கள். 23உடனே கர்த்தருடைய தூதன் ஒருவன் ஏரோதை அடித்தான். ஏனெனில், ஏரோது இறைவனுக்குரிய மகிமையை அவருக்குக் கொடுக்கவில்லை. ஆகவே, அவன் புழுப்புழுத்துச் செத்தான்.
24ஆனால், இறைவனுடைய வார்த்தையோ மேன்மேலும் பரவியது.
பர்னபாவும் சவுலும் அனுப்பிவிடப்படுதல்
25பர்னபாவும், சவுலும் தங்களுடைய ஊழியத்தை முடித்துக்கொண்டு, மாற்கு என அழைக்கப்பட்ட யோவானையும் கூட்டிக்கொண்டு, எருசலேமிலிருந்து திரும்பிச் சென்றார்கள்.

Àwon tá yàn lọ́wọ́lọ́wọ́ báyìí:

அப்போஸ்தலர் 12: TCV

Ìsàmì-sí

Pín

Daako

None

Ṣé o fẹ́ fi àwọn ohun pàtàkì pamọ́ sórí gbogbo àwọn ẹ̀rọ rẹ? Wọlé pẹ̀lú àkántì tuntun tàbí wọlé pẹ̀lú àkántì tí tẹ́lẹ̀