லூக்கா 22

22
இயேசுவை யூதாஸ் காட்டிக் கொடுத்தல்
1பஸ்கா என அழைக்கப்படும், புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகை நெருங்கி இருந்தது. 2தலைமை மதகுருக்களும் நீதிச்சட்ட ஆசிரியர்களும் இயேசுவைக் கொலை செய்வதற்கு வழி தேடிக் கொண்டிருந்தார்கள், ஆனாலும் மக்களுக்குப் பயந்திருந்தார்கள். 3அப்போது பன்னிருவருள் ஒருவனான, ஸ்காரியோத்து என அழைக்கப்பட்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். 4யூதாஸ், தலைமை மதகுருக்களிடமும் ஆலயத்தின் காவல் அதிகாரிகளிடமும் போய், தான் இயேசுவை எப்படிக் காட்டிக் கொடுக்கலாம் என்று அவர்களுடன் கலந்து பேசினான். 5அவர்கள் மகிழ்ச்சியடைந்து, அவனுக்குப் பணம் கொடுக்க இணங்கினார்கள். 6அவனும் அதற்குச் சம்மதித்து, மக்கள் கூடியிருக்காத வேளையில் அவர்களிடம் இயேசுவைப் பிடித்துக் கொடுப்பதற்குச் சந்தர்ப்பத்தைத் தேடிக் கொண்டிருந்தான்.
கடைசி திருவிருந்து
7அப்போது, பஸ்கா ஆட்டுக்குட்டி பலியிடப்படும் நாளான புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகையின் நாள் வந்தது. 8இயேசு பேதுருவிடமும், யோவானிடமும், “நீங்கள் போய், நாம் பஸ்கா உணவைச் சாப்பிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்” என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
9அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கே அதற்கான ஆயத்தத்தைச் செய்ய வேண்டுமென நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.
10அவர் அவர்களிடம், “நீங்கள் பட்டணத்திற்குள் போகும்போது, தண்ணீர் குடத்தைச் சுமந்து வருகின்ற ஒரு மனிதனைச் சந்திப்பீர்கள். அவன் போகும் வீட்டிற்குள், அவனைப் பின்தொடர்ந்து செல்லுங்கள். 11வீட்டுச் சொந்தக்காரனிடம், ‘நான் எனது சீடர்களுடன் பஸ்கா உணவைச் சாப்பிடுவதற்கான விருந்தினர் அறை எங்கே இருக்கின்றது என போதகர் உம்மிடம் கேட்கச் சொன்னார்’ என்று கேளுங்கள். 12தேவையான அனைத்து தளபாடங்களுடன் கூடிய, ஒரு பெரிய மேல்வீட்டு அறையை அவன் உங்களுக்குக் காட்டுவான். அங்கே ஆயத்தம் செய்யுங்கள்” என்று சொன்னார்.
13அவர்கள் புறப்பட்டுப் போய், இயேசு தங்களுக்குச் சொன்ன விதமாகவே எல்லாம் இருக்கக் கண்டு, பஸ்காவை அனுசரிக்க ஆயத்தம் செய்தார்கள்.
14அதற்கான நேரம் வந்தபோது, இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் பந்தியில் உட்கார்ந்தார்கள். 15அவர் அவர்களிடம், “நான் துன்பம் அனுபவிக்கும் முன்னதாக, உங்களுடனே இந்தப் பஸ்கா உணவைச் சாப்பிடுவதற்கு மிகுந்த ஆவலுடன் இருந்தேன். 16இறைவனுடைய அரசில் இவையெல்லாம் நிறைவேறும் வரைக்கும், இதை நான் மீண்டும் சாப்பிட மாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கின்றேன்” என்றார்.
17பின்பு, அவர் கிண்ணத்தை எடுத்து, நன்றி செலுத்தி, “இதை எடுத்து உங்களிடையே பகிர்ந்துகொள்ளுங்கள். 18ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், இறைவனுடைய அரசு வரும் வரைக்கும் திராட்சைப் பழரசத்தை இனி நான் குடிக்க மாட்டேன்” என்றார்.
19பின்பு, அவர் அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைத் துண்டுகளாக்கி, அதை அவர்களுக்குக் கொடுத்து, “உங்களுக்காகக் கொடுக்கப்படுகின்ற என்னுடைய உடல்; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார்.
20அவ்விதமாகவே உணவை முடித்த பின்பு, அந்தக் கிண்ணத்தை எடுத்து, அவர்களுக்குச் சொன்னதாவது, “இந்தக் கிண்ணம் உங்களுக்காக சிந்தப்படுகின்ற என்னுடைய இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை. 21ஆனாலும், என்னைக் காட்டிக் கொடுக்கப் போகின்றவனின் கையோ, என்னோடுதான் இந்தப் பந்தியிலே இருக்கின்றது. 22நியமிக்கப்பட்டிருக்கிறபடியே மனுமகன் போக வேண்டும். ஆனால் அவரைக் காட்டிக் கொடுக்கின்றவனுக்கு ஐயோ பேரழிவு!” என்றார். 23அவர்களோ, தங்களில் யார் அப்படிச் செய்வார்கள்? என்று தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள்.
24மேலும், தங்களுக்குள்ளே யார் பெரியவன் என்பதுபற்றி, ஒரு வாக்குவாதமும் மூண்டது. 25அப்போது இயேசு அவர்களிடம், “யூதரல்லாத மக்களின் அரசர்கள், அவர்களை அடக்கி ஆளுகிறார்கள்; அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகிறவர்கள், ‘கொடைவள்ளல்கள்’ என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்கின்றார்கள். 26ஆனால், நீங்கள் அப்படியிருக்கக் கூடாது. உங்களில் பெரியவனாய் இருக்கின்றவன், சிறியவனைப் போல் இருக்க வேண்டும். ஆளுகை செய்கின்றவன், பணிவிடை செய்கின்றவனைப் போல் இருக்க வேண்டும். 27பந்தியில் அமர்ந்திருப்பவனா அல்லது அதில் பணி செய்கின்றவனா, எவன் பெரியவன்? பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் அல்லவா? ஆனால் நானோ, உங்களிடையே பணி செய்கின்றவனைப் போல் இருக்கின்றேன். 28எனது சோதனைகளில் நீங்களே என்னுடன் நின்றவர்கள். 29எனவே, என் பிதா எனக்கு ஒரு அரசை ஏற்படுத்தித் தந்தது போல, நானும் உங்களுக்கு ஏற்படுத்தித் தருகிறேன். 30இதனால் நீங்களும் என்னுடைய அரசிலே, என்னுடைய பந்தியில் உணவுண்டு, அருந்துவீர்கள். இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கின்றவர்களாய் அரியணையில் உட்காருவீர்கள்.
31“சீமோனே, சீமோனே, கோதுமையைப் புடைப்பது போல் உங்கள் எல்லோரையும் புடைக்கும்படி, சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். 32ஆனாலும் உன் விசுவாசம் குறைந்து போகாதிருக்க, நான் உனக்காக மன்றாடியிருக்கிறேன். அதிலிருந்து நீ திரும்பிய பின்பு, உன் சகோதரர்களையும் பலப்படுத்து” என்றார்.
33அப்போது அவன் அவரிடம், “ஆண்டவரே, நான் உம்முடனே சிறைக்குப் போகவும், உயிர் துறக்கவும் ஆயத்தமாய் இருக்கின்றேன்” என்றான்.
34அதற்கு இயேசு, “பேதுருவே, இன்று சேவல் கூவுவதற்கு முன்னதாக, என்னை உனக்குத் தெரியாது என்று நீ மூன்று முறை மறுதலிப்பாய் என நான் உனக்குச் சொல்கின்றேன்” என்றார்.
35பின்பு, இயேசு அவர்களிடம், “உங்களை நான் பணப்பையோ, பயணப்பையோ, காலணிகளோ இல்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறைவு ஏற்பட்டதா?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “ஒன்றும் குறைவுபடவில்லை” என்றார்கள்.
36அவர் அவர்களிடம், “இப்போது, பணப்பை இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பயணப்பையையும் எடுத்துக்கொள்ளுங்கள். மேலும், வாள் இல்லாதவன் தன்னுடைய மேலாடையை விற்று, வாள் ஒன்றை வாங்கிக்கொள்ளட்டும். 37‘குற்றவாளிகளில் ஒருவராக அவர் கருதப்பட்டார்’ என்று எழுதியிருப்பது என்னில் நிறைவேற வேண்டும் என நான் உங்களுக்குச் சொல்கின்றேன், ஆம், என்னைக் குறித்து எழுதப்பட்டிருப்பது நிறைவேறப் போகின்றது”#22:37 ஏசா. 53:12 என்றார்.
38அப்போது சீடர்கள் அவரிடம், “ஆண்டவரே, எங்களிடம் ஏற்கெனவே இரண்டு வாள்கள் இருக்கின்றன” என்றார்கள்.
அதற்கு அவர், “அதுபோதும்” என்றார்.
ஒலிவமலையில் இயேசுவின் மன்றாடல்
39வழக்கம் போல இயேசு ஒலிவமலைக்குச் சென்றார். அவருடைய சீடர்கள் அவரைப் பின்பற்றிப் போனார்கள். 40அந்த இடத்தைச் சென்றடைந்தபோது, அவர் அவர்களிடம், “நீங்கள் சோதனைக்குட்படாதபடி மன்றாடுங்கள்” என்றார். 41அவர் அவர்களைவிட்டு, ஒரு கல்லெறி தூரம் விலகிப் போய், முழந்தாழிட்டு மன்றாடினார். 42அவர், “பிதாவே! உமக்கு விருப்பமானால் என்னைவிட்டு இந்தப் பாத்திரத்தை எடுத்து விடும்; ஆனாலும் என் விருப்பப்படியல்ல, உமது விருப்பப்படியே ஆகட்டும்” என்றார். 43ஒரு தூதன் பரலோகத்திலிருந்து அவருக்கு முன் தோன்றி அவரைப் பலப்படுத்தினான்.#22:43 சில பழைய பிரதிகளில் 43, 44ம் வசனங்கள் காணப்படுவதில்லை 44அவர் மிகவும் வேதனையடைந்தவராய், அதி தீவிரமாக மன்றாடினார். அவருடைய வியர்வை இரத்தத் துளிகளைப் போல தரையில் விழுந்தது.
45அவர் மன்றாடிவிட்டு எழுந்து, தமது சீடர்களிடம் திரும்பவும் சென்றார். அப்போது அவர்கள் கவலையினால் சோர்வுற்று, நித்திரையாய் இருப்பதைக் கண்டார். 46அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் நித்திரை செய்கின்றீர்கள்? சோதனைக்கு உள்ளாகாதபடி, எழுந்திருந்து மன்றாடுங்கள்” என்றார்.
இயேசு கைது செய்யப்படல்
47இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, ஆட்கள் கூட்டமாய் வந்தார்கள். பன்னிருவரில் ஒருவனான யூதாஸ் என்று அழைக்கப்பட்டவன், அவர்களை வழிநடத்திக்கொண்டு வந்தான். அவன் இயேசுவை முத்தம் இடுவதற்காக அவருக்குச் சமீபமாய் வந்தான். 48இயேசுவோ அவனிடம், “யூதாஸ், நீ மனுமகனை முத்தத்தினால் காட்டிக் கொடுக்கின்றாயோ?” என்றார்.
49இயேசுவைப் பின்பற்றியவர்கள், நடக்கப் போவதைக் கண்டு, “ஆண்டவரே, நாங்கள் எங்கள் வாளினாலே வெட்டட்டுமா?” என்று கேட்டார்கள். 50அவர்களில் ஒருவன், தலைமை மதகுருவின் வேலைக்காரனைத் தாக்கி, அவனது வலது காதை வெட்டினான்.
51ஆனால் இயேசுவோ, “போதும், இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்!” என்று சொல்லி, அவனுடைய காதைத் தொட்டு, அவனைக் குணமாக்கினார்.
52அப்போது இயேசு, தம்மைப் பிடித்துச் செல்ல வந்திருந்த தலைமை மதகுருக்களையும் ஆலயத்தின் காவல் அதிகாரிகளையும் சமூகத் தலைவர்களையும் பார்த்து, “நீங்கள் வாள்களுடனும் தடிகளுடனும் வந்து என்னைப் பிடிப்பதற்கு, நான் ஒரு ஆபத்தான கொள்ளைக்காரனா? 53நான் ஒவ்வொரு நாளும் உங்களுடனே ஆலய முற்றத்தில் இருந்தேன்; அப்போது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை. ஆனால் இது உங்கள் நேரம், இருள் அதிகாரம் செலுத்தும் நேரம்” என்றார்.
பேதுரு, இயேசுவை மறுதலித்தல்
54அவர்கள் அவரைப் பிடித்து, தலைமை மதகுருவின் வீட்டிற்குக் கொண்டுபோனார்கள். பேதுரு சற்றுத் தூரத்திலே பின்தொடர்ந்து போய்க் கொண்டிருந்தான். 55அந்த வீட்டு முற்றத்தின் நடுவில், சிலர் நெருப்பு மூட்டி, அதன் அருகே ஒன்றாய் உட்கார்ந்தார்கள். அப்போது பேதுருவும் அவர்களுடன் உட்கார்ந்து கொண்டான். 56பேதுரு அங்கே உட்கார்ந்திருப்பதை, ஒரு வேலைக்காரப் பெண் நெருப்பின் வெளிச்சத்திலே கண்டாள். அவள் அவனை உற்றுப் பார்த்து, “இவன், இயேசுவோடு இருந்தான்” என்றாள்.
57ஆனால் பேதுருவோ அந்தப் பெண்ணை நோக்கி, “அவரை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்தான்.
58சிறிது நேரத்தின் பின் வேறொருவன் அவனைக் கண்டு, “நீயும் அவர்களில் ஒருவன் தான்” என்றான்.
அதற்குப் பேதுரு அந்த மனிதனை நோக்கி, “இல்லை; நான் அவர்களில் ஒருவன் அல்ல” என்றான்.
59ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பின்பு இன்னொருவன், “நிச்சயமாகவே இவனும் இயேசுவுடனே இருந்தான். ஏனெனில் இவன் கலிலேயன்” என்றான்.
60அதற்குப் பேதுரு அந்த மனிதனை நோக்கி, “நீ எதைப் பற்றிப் பேசுகின்றாய் என்றே எனக்குத் தெரியாது” என்றான். அவன் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில், சேவல் கூவிற்று. 61அப்போது ஆண்டவர் திரும்பி, பேதுருவை நேருக்கு நேராய் பார்த்தார். உடனே, “இன்று சேவல் கூவுவதற்கு முன், நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்று ஆண்டவர் சொன்ன வார்த்தை, பேதுருவின் ஞாபகத்துக்கு வந்தது. 62அவன் வெளியே போய் மனம் வெதும்பி அழுதான்.
காவலாளிகள் இயேசுவை ஏளனம் செய்தல்
63இயேசுவைக் காவல் செய்து கொண்டிருந்தவர்கள், தொடர்ந்து அவரை ஏளனம் செய்யவும் அடிக்கவும் தொடங்கினார்கள். 64அவர்கள் அவருடைய கண்களைக் கட்டிவிட்டு, “உன்னை அடித்தது யார் என்று இறைவாக்காகச் சொல்” என வற்புறுத்திக் கேட்டார்கள். 65அவர்கள் இன்னும் அதிகமாய் ஏளனம் செய்தார்கள்.
பிலாத்து மற்றும் ஏரோதுக்கு முன்பாக இயேசு
66பொழுது விடிந்தபோது, தலைமை மதகுருக்களையும் நீதிச்சட்ட ஆசிரியர்களையும் உள்ளடக்கிய யூத சமூகத் தலைவர்களின் கூட்டம் கூடியது. அவர்கள் இயேசுவை, தங்கள் நியாயசபைக்கு முன்பாக நிறுத்தி, 67அவரிடம், “நீ மேசியா#22:67 மேசியா – கிரேக்க மொழியில் கிறிஸ்து தானா? அப்படியென்றால், அதை எங்களுக்குச் சொல்” என்றார்கள்.
அதற்கு இயேசு, “நான் உங்களுக்குச் சொன்னாலும், நீங்கள் அதை விசுவாசிக்க மாட்டீர்கள். 68நான் உங்களிடம் கேள்வி கேட்டாலும், நீங்கள் அதற்குப் பதில் சொல்ல மாட்டீர்கள். 69ஆனால் இப்போதிலிருந்தே, வல்லமையுள்ள இறைவனுடைய வலது பக்கத்தில் மனுமகன் அமர்ந்திருப்பார்” என்றார்.
70அப்போது அவர்கள் எல்லோரும் அவரிடம், “அப்படியானால் நீ இறைவனின் மகனோ?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், “நானே அவர் என்பதை, நீங்களே சொல்லிவிட்டீர்கள்” எனப் பதிலளித்தார்.
71அப்போது அவர்கள், “இதைவிட நமக்கு வேறு சாட்சிகள் தேவையா? அவனுடைய வாயிலிருந்தே அதை நாம் கேட்டோமே” என்றார்கள்.

Vurgu

Paylaş

Kopyala

None

Önemli anlarınızın tüm cihazlarınıza kaydedilmesini mi istiyorsunuz? Kayıt olun ya da giriş yapın