சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!மாதிரி

சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!

8 ல் 2 நாள்

தேவ சித்தத்தை செய்ய எத்தனை சாக்குபோக்கு?

நாம் ஒவ்வொருவரும் நம் பிள்ளைகள் எப்படி, யாரைப்போல வாழ வேண்டும் என்பதை மனதில் கொண்டே பெயர்களை தெரிந்தெடுக்கிறோம் அல்லவா?

இன்றைக்கு நாம் இஸ்ரவேலை அடக்கி ஆண்ட யாபீன் என்கிற ராஜாவின் சேனாதிபதி சிசெராவை அழித்து சரித்திரத்தில் இடம் பெற்ற யாகேல் என்ற பெண்ணைப் பற்றிப் படிக்கப் போகிறோம்!

யாகேல் என்ற பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா? வரையாடு! வரையாடுகளைப் பார்த்திருக்கிறீர்களா?

பல வருடங்களுக்கு முன்னால் இந்த வரையாடுகளைப் பார்ப்பதற்காக ஒரு மலைப்பகுதியில் வெகுதூரம் நடந்து சென்றோம். ஆனால் ஒன்று கூட கண்ணில் படவில்லை. அதன் பின்னர் பலமுறை நான், குடும்பமாக குட்டிகளோடு அலைந்த வரையாடுகளைப் பார்த்தேன். இந்த ஆடுகள் மலைப்பிரதேசத்தில் தான் வாழும்! செங்குத்தான மலையின் மேல் கால்கள் சறுக்காமல் ஏறும் திறமையுள்ளவைகள்!

யாகேல் அல்லது வரையாடு என்ற பெயர் கொண்ட இந்த பெண்ணைப் பற்றி அறிந்து கொள்ள நாம் அவள் குடும்பப் பிண்ணணியை சற்றுப் பார்ப்போம்.

இவள் தெற்கு பாலஸ்தீனத்தை சேர்ந்தவள். அவளுடைய குடும்பத்தினர் நாடோடிகளாக கூடாரங்களில் வசித்தவர்கள். பாலைவனத்தில் வாழ்ந்த அவர்களுடைய தினசரி வாழ்க்கையே மிகக் கடினமானது. அவளுடைய கணவனாகிய ஏபேர், கேனியன் என்று வேதம் சொல்லுகிறது. கேனியர் இரும்பு, செம்பு போன்ற உலோகங்களில் ஆயுதம், மற்ற கருவிகள் செய்யும் திறமை வாய்ந்தவர்கள். அதனால் அவர்கள் கானானில் உள்ள மக்களுக்கு வேண்டப்பட்டவர்களாய் இருந்தார்கள்.

நியா: 4: 11 கூறுகிறது, “ கேனியனான ஏபேர் என்பவன்…..கேனியரை விட்டுப் பிரிந்து, கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்” என்று.

ஏன் அவன் இவ்வாறு பிரிந்தான் என்று நமக்குத் தெரியவில்லை! ஒருவேளை குடும்பத்தில் ஏதாவது சண்டை காரணமாயிருந்திருக்கலாம். ஆதலால் அவன் கேதேஸ் அருகே சானாயிம் என்ற இடத்தில் குடியிருந்தான். அங்கே அவன் கானானியருடன் சமாதானத்துடன் வாழ்ந்தான். கானானியரின் ராஜாவாகிய யாபீனுக்கு தொள்ளாயிரம் ரதங்கள் இருந்தன, அவனுக்கு நிச்சயமாக , உலோகத்தில் வேலை செய்யும் ஏபேரின் உதவி தேவைப் பட்டிருக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நம்முடைய வரையாடு என்கிற யாகேல் வாழ்ந்து வந்தாள். அவளுடைய் குடும்பப் பின்னணி அவளை முரட்டுப் பெண்ணாக உருவாக்கியிருந்தது! அவளுடைய கடினமான கூடார வாழ்க்கை, அவளை சொந்தமாக சிந்தித்து முடிவெடுக்கும் பெண்ணாக உருவாக்கியிருந்தது!

அவளுடைய கணவனாகிய ஏபேர் கானானியரிடமும், அவர்கள் ராஜாவாகிய யாபீனிடமும், அவனுடைய சேனாதிபதி சிசெராவிடமும் சமாதானம் கொண்டிருந்தாலும், அவள் இஸ்ரவேலின் எதிரிகளை அழிக்க முடிவெடுத்தாள்! அவள் கானானியரின் நிலத்தில் வாழ்ந்த போதிலும், கர்த்தருடைய பிள்ளைகளை ஒடுக்கி ஆண்ட அவர்களோடு அவள் சமாதானம் பண்ண விரும்பவில்லை!

யாகேல் தேவனுக்கு கீழ்ப்படிந்த ஒரு முரட்டாடு! அவளுடைய குலமோ, கோத்திரமோ, குடும்பமோ, அவளுடைய கணவனோ யாரும் அவள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதைத் தடை செய்ய முடியவில்லை!

நாம் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற எத்தனை சாக்குபோக்கு சொல்லுகிறோம்? நாம் தேவனுடைய சித்தத்தை விட்டு விலகிப் போவதற்கு, நம்முடைய குடும்பத்தை, நம்முடைய சூழ்நிலையை உபயோகப்படுத்துகிறோம்!

இந்த முரட்டுப் பெண்ணின் வாழ்க்கை உங்களுக்கு ஒரு சவாலாக இருக்கட்டும்!

நாளையும் இந்த மலர்த்தோட்டத்துக்கு வாருங்கள்! யாகேலைப் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்!

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!

கானானியரின் ராஜா இஸ்ரவேலரை இருப்புக்கோலால் ஆண்ட பொழுது கர்த்தர் அவர்களை அழிக்க தமக்கென்று ஒரு சில மக்களை எழுப்பினார். அப்படியாக தேவனுடைய கரத்தில் ஒரு கருவியாக உபயோகப்படுத்தப்பட்டவள்தான் யாகேல் என்ற கூடாரவாசி! தேவன்நம்மையும் அவருடைய பணியில் உபயோகப்படுத்த முடியும் என்பதற்கு அவள் ஒரு எடுத்துக்காட்டு! நட்பு என்னும் பெயரில் தன்னுடைய கூடாரத்துக்குள் நுழைந்த சிசெராவை அவள் அழித்தவிதம் நாம் சாத்தானுக்கு எவ்வாறு எதிர்த்து நிற்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம்! இந்த 8 நாட்கள் திட்டம் நம்மை, தெபோராவின் காலத்தில் வாழ்ந்த இந்த பாலஸ்தீனிய கூடாரவாசியின் வாசலில், சிசெரா என்ற சாத்தானின் தலை நசுக்கப்பட்ட சம்பவத்தைக் காண அழைத்துச் செல்லும்!

More

இந்த திட்டத்தை வழங்கிய Rajavin Malargal க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://rajavinmalargal.com