The Chosen - தமிழில் (பாகம் 4)மாதிரி
நீ குணமடைய விரும்புகிறாயா?
என் வாழ்க்கை எப்போதும் சிக்கல்களால் நிறைந்திருந்தது. நான் சிறுவனாக இருந்தபோது ஒரு விபத்து ஏற்பட்டு, நடக்கக்கூடிய திறனை இழந்ததிலிருந்து, நான் மற்றவர்களுக்கு பாரமாக இருப்பதுபோல் உணர்ந்தேன். நடக்க முடியாதது எனக்கு மிகவும் துன்பமாக இருந்தது!
என்னோடு இருந்த என் இளைய சகோதரன் சீமோன் என்னை விட்டுவிட்டு செலோத் இயக்கத்தில் சேர முடிவு செய்தபோது, என் முழு உலகமும் மீண்டும் வீழ்ச்சியடைவதைப் போல உணர்ந்தேன். நான் என்னவாவென்? என் இருதயம் உடைந்தது. நான் விரும்பியதெல்லாம் மீண்டும் எழுந்து நடக்க வேண்டுமென்று!
அதனால்தான் பெதஸ்தா குளத்திற்குச் சென்றேன். அங்கே அவ்வப்போது, ஒரு தேவ தூதன் தண்ணீரைக் கலக்க வந்ததாகவும், முதலில் தண்ணீரில் இறங்கியவர் குணமடைந்ததாகவும் கூறப்பட்டது.
நான் குளத்தினருகே கிடந்த முதல் வருடம், எனக்கு உதவி செய்ய யாரும் இல்லாததால் நான் தண்ணீரில் முதலில் இறங்க முடியவில்லை. இரண்டாவது வருடம், அதே போல் நடந்தது, மூன்றாவது ஆண்டு, அது மீண்டும் நடந்தது... இப்படி அந்த இடத்தில் நான் என் வாழ்நாளில் 38 வருடங்களை கழித்தேன் என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை!
ஆம், அந்தக் குளம் ஒரு புறஜாதியாரின் இடம் என்பதையும், நீரின் இயக்கம் நிச்சயமாக ஒரு இயற்கையான விளைவேயன்றி தூதனின் செயல் அல்ல என்பதையும் கேட்டறிந்திருந்தேன். அதுமட்டுமின்றி, முதலாவதாக குளத்தில் இறங்க வருவதற்கு நாங்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டும், முண்டிக்கொண்டும், மிதித்துக்கொண்டும் இருந்ததைப் பார்ப்பது கோரமாக இருந்தது. ஆனால் நான் ஒரு அதிசயத்திற்காக மிகவும் ஆசைப்பட்டேன்! எனக்கு நம்பிக்கையூட்ட ஏதாவது ஒரு ஊக்குவிப்பு தேவைப்பட்டது.
ஆனால், ஒரு நாள், ஒன்று நடந்தது. எனக்குத் தெரியாத ஒருவர் என்னிடம் நேரடியாக வந்து, “உனக்கு குணமாக வேண்டுமா?” என்று கேட்டார். என்னை தண்ணீரில் இறக்கி விட, எனக்கு உதவ யாரும் இல்லை என்று நான் விளக்கினேன், ஆனால் அவர் என்னிடம் அந்த குளத்தில் எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்று கூறினார்.
என் உள்ளத்தின் ஆழத்தில், அவர் சொல்வது சரி என்பது எனக்குத் தெரியும். நான் குணமடைய விரும்புகிறேனா என்று அவர் என்னிடம் மீண்டும் கேட்டபோது, நான் தலையசைத்தேன். அவரது வாயிலிருந்து வந்த சில எளிய வார்த்தைகள் என் நிலைமையை முற்றிலும் மாற்றியது : “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்”. (யோவான் 5:8) திடீரென்று, என் கால்கள் மீண்டும் உணர்வடைந்ததை என்னால் உணர முடிந்தது. இருக்கவே முடியாது! என்று எனக்குள் ஐயமிட்டேன்.
சிரித்துக்கொண்டே என்னால் முடிந்தவரை எழுந்து நின்று, அந்த நேரத்தில் நடந்த அதிசயத்தை உள்வாங்க முயற்சித்தேன். 38 ஆண்டுகளுக்குப் பிறகு முடங்கிப்போயிருந்த நான் மீண்டும் நடக்கிறேன்! நாசரேத்தின் இயேசு அன்று என் கால்களைக் குணப்படுத்தினார், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் என் இருதயத்தை குணப்படுத்தினார். அர்த்தமில்லாமல் இருந்த என் வாழ்வை மாற்றி, எனக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுத்தார்.
இன்று, நான் மீண்டும் நடக்கிறேன், ஆண்டவரின் சித்தப்படி.
என் பெயர் ஈசாய், நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டேன்.
குறிப்பு: அன்பரே, ஒருவேளை நீயும் கூட, உன் வாழ்க்கையின் பெரும்பகுதியை பிரயோஜனம் இல்லாத விஷயங்களைச் செய்து வீணடித்ததாக உணரலாம். ஆனால் இன்று, இயேசு உன் பக்கத்தில் இருக்கிறார், மேலும் அவர் உன்னிடம் கேட்கிறார், "நீ குணமடைய விரும்புகிறாயா?" என்று. அவர் உன் இருதயத்தை குணப்படுத்த விரும்புகிறார், மேலும் நீ எப்போதும் அவருடன் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார், ஏனென்றால் இதன்மூலம் உன் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் ஏற்பட்டு அவருடைய ஒளி உன் வாழ்வின் வழியாக பிரகாசிக்கும்..
இன்றிலிருந்து, உன் வாழ்க்கையில் ஒரு "முன்" மற்றும் "பின்" என்ற அனுபவம் இருக்கட்டும்!
நீ ஒரு அதிசயமாக விளங்க தெரிந்துகொள்ளப்பட்டாய்!
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
“The Chosen” ("தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்") என்ற தொடரை சார்ந்த வாசிப்பு திட்டம். இயேசுவிடம் வந்தவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த அற்புதங்களை நாம் நினைவுகூருவது நன்றாக இருக்குமல்லவா? ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்’ (The Chosen) எனும் இத்தொடரின் புதிய ஏற்பாட்டு கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட 25 கவர்ந்திழுக்கும் சம்பவங்களை நீ மகிழ்ச்சியுடன் அறிந்துகொள்ள அழைக்கிறேன். வாசகர்களின் வசதிக்காக இது 5 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் பலதரப்பட்ட, வல்லமை வாய்ந்த சாட்சிகளை நீ அனுபவிக்கவும், மற்றவர்களுக்கு தேவனின் ஒரு அற்புதமாக மாறவும் உன்னை இக்கதைகள் ஊக்குவிக்கட்டும்! நீ தயாரா? நீ ஒரு அற்புதம்! - Christian Misch
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=tamilchosen