துக்கத்தை கையாளுதல்மாதிரி
மரணம் வாழ்வின் ஒரு அங்கம்
மரணம் என்பது நாம் எப்பொழுதும் வெளிப்படையாக பேச சங்கடப்படும் ஒரு தலைப்பு. பலருக்கு அது வசதியாக இருப்பதில்லை. சிலர் அதைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆனால் மரணம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது.
மரணம் பற்றிய புள்ளிவிவரங்கள் தன்னை மிகவும் திகைக்க வைக்கின்றன என கூறின ஜார்ஜ் பெர்னார்ட் ஷா – “ஒவ்வொரு மனிதரும் மரித்து விடுகிறார்." இந்த வாழ்க்கையில் மரணம் மட்டுமே உறுதி” என கூறுகிறார்.
நாமோ அல்லது நம் அன்புக்குரியவர்களோ மரிப்பதில்லை என்று தேவன் ஒருபோதும் வாக்குறுதி அளித்ததில்லை. உண்மையில், அவர் அதற்கு நேர்மாறாக வாக்குறுதியளித்தார் - அன்றியும், ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” என்று எபிரெயர் 9:27 கூறுகிறது.
எல்லோரும் மரிக்கிறார்கள். தேவன் மக்களை மரிக்க அனுமதிக்கும் வாக்குறுதியையும் மீறவில்லை. அவர் சொன்னவைகள் நடந்தேறும்படி அனுமதித்திருக்கிறார். ஆதாமும் ஏவாளும் நம் உலகில் மரணத்தையும் அழிவையும் கொண்டு வந்ததிலிருந்து, மரணம் பேரம் பேசும் ஒரு பகுதியாக மாறிப்போனது. எனவே, நாம் மரணத்தை சந்திக்க ஆயத்தமாக இருக்க வேண்டும்.
யோவான் 11:11ல், விசுவாசிகளின் மரணத்தைப் பற்றி கிறிஸ்து எவ்வளவு கனிவாகப் பேசுகிறார் என்பதைப் பார்க்கிறோம். லாசரு மரித்துவிட்டான் என்ற உண்மையை “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான்” என்ற ஒரு அழகு மற்றும் மென்மையான மொழியில் அறிவிக்கிறார்.
தனடோபோபியா (Thanatophobia) என்று கூறப்படும் மரண பயம், மற்ற எல்லா பயங்களுக்கும் வேர் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். நீங்கள் பயத்தின் ஆவியை உடையவர்களாக இருந்தால், அதை தேவனிடமிருந்து பெறவில்லை. உங்கள் வாழ்க்கையிலுள்ள பயத்தை விசுவாசத்தால் மாற்றுவதன் மூலம் நீங்கள் அதிலிருந்து விடுபடுவீர்கள். விசுவாசம் வந்தால் பயம் போகும்! விசுவாசம் வந்தால் பயம் விலகும்!
தம்மை இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்களுக்காக இயேசுகிறிஸ்து ஏற்கனவே மரணத்தின் கூரை பிடுங்கியிருக்கிறார் (1 கொரி. 15:55-57). மரணத்தின் மீதான இயேசுகிறிஸ்துவின் வெற்றியின் மூலம், "மரண பயத்தினால் வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனத்திற்கு உட்பட்டவர்களை" அவர் விடுவிக்கிறார் (எபிரெயர் 2:14-15). கர்த்தரை நம்பும் தேவனுடைய பிள்ளைக்கு, மரணம் எந்த பயத்தையும் கொடுக்காது, மாறாக இந்த பூமிக்குரிய வாழ்க்கையின் வரம்புகளிலிருந்து விடுப்படு பரலோக வாழ்க்கையின் விடுதலையை பெறுவதற்குரிய மகிமையான எதிர்பார்ப்பை அளிக்கிறது. பவுல் சொன்னது போல், “சாவு ஒரு ஆதாயம்" (பிலி. 1:21).
டொனால்ட் பார்ன்ஹவுஸின் மனைவி புற்றுநோயால் அவரை விட்டுச்சென்றபோது 12 வயதிற்குட்பட்ட மூன்று குழந்தைகள் அவருக்கு இருந்தனர். தனது குழந்தைகளுக்கு நம்பிக்கையின் செய்தியை எவ்வாறு கொண்டு வருவது என்று யோசித்துக்கொண்டிருந்தார். அவர்கள் இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெரிய டிரக் அவர்களைக் கடந்து சென்றது, அவர்களின் காரின் குறுக்கே ஒரு நிழலை ஏற்படுத்தியது. ஜன்னலுக்கு வெளியே சோகமாகப் பார்த்துக் கொண்டிருந்த தனது மூத்த மகளின் பக்கம் திரும்பி, “என் அன்பு மகளே, நீ அந்த டிரக் வண்டியால் பாதிக்கப்படுவாயா அல்லது அதன் நிழலால் பாதிக்கப்படுவாயா? என்று கேட்டார். அதற்கு அவள் தன் தந்தையை ஆர்வமாகப் பார்த்து, “நிழலால் தான் என்று நினைக்கிறேன், அது நம்மை பாதிக்காது" என்று பதிலளித்தாள். பின்னர் அவர் தன் மற்ற குழந்தைகளிடமும் பேசும்போது, “உன் அம்மா மரணத்தால் அல்ல, மரணத்தின் நிழலால் பாதிக்கப்பட்டிருக்கிறாள், அதில் பயப்படப்படுவதற்கு ஒன்றுமில்லை." என்று கூறினார்.
மரணத்திற்கான கவுண்டவுன் பிறப்பிலிருந்தே தொடங்குகிறது. மரணத்தைப் பற்றி பேசுவதற்கு வேதம் பயப்படுவதில்லை: அதின் தன்மை எப்படியிருக்கிறதோ அப்படியே அழைக்கிறது. ஆனால் கிறிஸ்தவத்தின் மையப்பொருளாக இயேசுகிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் உள்ளது.
இயேசுகிறிஸ்து தமது சிலுவையின் மூலம் இந்த உலகின் துக்கத்தையும் துன்பத்தையும் அடைந்தார்; அவர் கைவிடப்படுவதையும் மரணத்தின் ஆழத்தையும் அனுபவித்தார். உயிர்த்தெழுதலில், இயேசு மரணத்தின் வல்லமையை உடைத்தார்; அது இனி மனிதகுலத்தின் மீது நீடித்து நிற்கும் ஒரு முடிவல்ல; அது அவரில் மறுவரையறை செய்யப்பட்டு, நமக்கு நித்திய ஜீவனை அளிக்கிறார்.
நமது இறையியல் சிலுவையை மட்டுமே சார்ந்ததாக இருந்தால், நற்செய்தியின் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் நாம் தவறவிடுகிறோம். நமக்கு சிலுவை மற்றும் உயிர்த்தெழுதல் ஆகிய இரண்டும் தேவை.
மேற்கோள்: பாவம் நீக்கப்பட்ட இடத்தில் மரணமானது பூமிக்குரிய வாழ்வில் மட்டுமே குறுக்கிட்டு, பரலோகத்தின் நுழைவு வாயிலாக அமைகிறது.-ஜான் மக்ஆர்தர்
ஜெபம்: ஆண்டவரே, மரணம் முடிவல்ல, வாழ்க்கையின் ஆரம்பம் என்பதற்கு நன்றி. ஆமென்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் நேசிக்கும் ஒருவர் மரித்துவிட்டால், பலவிதமான உணர்வுகளை எதிர்கொள்கிறோம். இந்த 10 நாள் தியானத்தில், நம் அன்புக்குரியவர்கள் கர்த்தருடன் குடியிருக்க செல்லும்போது துக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். ஜூன் 2021 இறுதியில் கர்த்தருடன் இருக்க என் அன்பு மனைவி அவருடைய வீட்டிற்குச் சென்ற பிறகு, கர்த்தர் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள் இவை.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய விஜய் தங்கையாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.facebook.com/ThangiahVijay