இயேசு கிறிஸ்துவின் கொலை ஏன் நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது?மாதிரி
பெரிய வெள்ளி நமக்கு எதை கற்றுக் கொடுக்கிறது?
பெரிய வெள்ளியின் ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் - மரணம் ஓர் முடிவல்ல!
பாஸ்டர் எஸ்.எம்.லாக்ரிட்ஜ் தமது சிறந்த பிரசங்கமாகிய “இது வெள்ளிக்கிழமை இரவு, ஆனால் ஞாயிற்றுக்கிழமை வருகிறது” என்பதில் பின்வருமாறு எழுதுகிறார் :
அது வெள்ளிக்கிழமை. இயேசு ஜெபிக்கிறார். பேதுரு தூங்கிக் கொண்டிருக்கிறார். யூதாஸ் மறுதலிக்கிறார்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
அது வெள்ளிக்கிழமை. பிலாத்து திண்டாடுகிறார். ஆலோசனை சங்கம் சதி செய்கிறது. திரள் கூட்டம் பழிசுமத்துகிறது.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை வருகிறது என்பதுகூட அவர்களுக்கு தெரியவில்லை.
அது வெள்ளிக்கிழமை. மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல சீஷர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். மரியாள் அழுகிறார், பேதுரு மறுதலிக்கிறார்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை வருகிறது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
அது வெள்ளிக்கிழமை. ரோமர்கள், என் இயேசுவை அடிக்கின்றனர். சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்மூடி சூட்டுகின்றனர்.
ஆனால் அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறது என்பது தெரியவில்லை.
அது வெள்ளிக்கிழமை. இயேசு கல்வாரிக்கு நடந்து செல்கிறார், பாருங்கள். அவர் இரத்தம் சொட்டுகிறது, அவர் சரீரம் நடுங்குகிறது, அவரின் ஆத்துமா பாரத்தினால் நிறைந்திருக்கிறது.
ஆனால் கவனியுங்கள், அது வெள்ளிக்கிழமை மட்டுமே. ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
அது வெள்ளிக்கிழமை, உலகம் வெற்றி பெறுகிறது, மனிதர்கள் பாவம் செய்கிறார்கள், தீயவன் பல்லிளித்துக் கொண்டிருக்கிறான்.
அது வெள்ளிக்கிழமை. போர்ச்சேவகர் என் இரட்சகரின் கரங்களையும், கால்களையும் சிலுவையில் அடிக்கின்றனர். இரண்டு கள்வர்களின் நடுவில் அவரை தொங்க விடுகின்றனர்.
அது வெள்ளிக்கிழமை. ஆனால் உங்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன், ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
அது வெள்ளிக்கிழமை, பூமி நடுங்குகிறது, வானம் கருக்கிறது. என் இராஜா தன்னுடைய ஜீவனை ஒப்புக்கொடுக்கிறார்.
அது வெள்ளிக்கிழமை, நம்பிக்கை பறிபோனது, மரணம் வெற்றி பெற்றது, பாவம் மேற்கொண்டது, சாத்தான் சிரித்துக் கொண்டிருக்கிறான்.
அது வெள்ளிக்கிழமை, இயேசு புதைக்கப்படுகிறார். போர்ச்சேவகர் காவலிருக்க பெரிய கல், கல்லறையின் வாசலை முடிப்போடுகிறது.
ஆனால் அது வெள்ளிக்கிழமை. அது வெறும் வெள்ளிக்கிழமை. ஞாயிற்றுக்கிழமை வருகிறது!
மரணத்தைக் குறித்த நமது கருத்தை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மரணம் ஓர் முடிவல்ல. மாறாக அது ஒரு ஆரம்பம். மரணத்தின் கொடுக்கும், மரண பயமும் இயேசுவின் சிலுவை மரணத்தால் அகற்றப்பட்டுள்ளன.
இந்த உண்மையின் ஆவிக்குரிய பிரயோகத்தைக் குறித்து இயேசு கிறிஸ்து, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்” என்று யோவான் 12:24ல் சொல்கிறார்.
நாம் மரிக்க வேண்டும், அப்போதுதான் உயிரோடிருக்க முடியும் என்று இயேசு சொல்கிறார். எதுவெல்லாம் ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்கும் என்று, நாம் கொண்டுள்ள பிரம்மைகள் அனைத்தையும் சமர்ப்பித்து, தம்மிடமே சரணாகதி அடைய இயேசு நம்மை அழைக்கிறார். அப்படி நாம் செய்தால் நித்திய ஜீவனை கண்டடையலாம். அதைத் தொடர்ந்து, நாம் அவரோடு நடக்க ஆரம்பிக்கிறோம். அவருடைய ஜீவன் நமக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்ந்து செல்லத் துவங்குகிறது. தேவையற்ற ஆயிரமாயிரம் காரியங்களுக்கு நாம் செத்து, அவரில் உயிர் வாழத் துவங்குகிறோம்.
“சிலுவையை எடுத்துக் கொண்டு” (மாற்கு 8:34-35), சுயத்துக்கு மரித்து, அவரின் உயிர்த்தெழுதலின் வல்லமை உங்களுக்குள் ஊடுருவிப் பாய்ந்து, பரிபூரண ஜீவனை பெற்றுக் கொள்ள நீங்கள் ஆயத்தமா? ஏனெனில் ஆண்டவருக்கு முடிவுகள் எல்லாம் ஆரம்பமே!
முடிந்து விட்டதைப் போல காணப்படும் துவக்கங்கள், மரணத்தைத் தொட்டு விடும் நிறைவாழ்வு – கடவுள் இவை எல்லாவற்றிலும் நம்மை பிரமிக்க வைப்பார்.
அது வெள்ளிகிழமை இரவு, ஆனால் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. பெரிய வெள்ளி இல்லாவிட்டால், உயிர்தெழுந்த காலை கிடையாது.
மேற்கோள் :
“சிலுவையின் மகிமையை புரிந்து கொள்ளாத பட்சத்தில், வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும். அது ஒரு பொக்கிஷம், பிடித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆனந்தத்துக்கும் மிகப்பெரிய கிரயமும், ஒவ்வொரு துயரத்துக்கும் அர்த்தமுள்ள ஆறுதலையும் அது கொண்டுவருகிறபடியால், அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். கடவுள் சிலுவையில் அறையப்படுவது, முன்னொரு நாளில் நமக்கு பைத்தியமாகத் தோன்றியது. இன்றோ அது நமக்கு ஞானமும், நமது வல்லமையும், அதைப் பற்றியே இவ்வுலகில் பெருமைப்படவும் வழிவகை செய்கிறது” – ஜாண் பைப்பர்.
ஜெபம் :
ஆண்டவரே, எனக்காக நீர் மரித்தபடியால் நன்றி. நான் இனி மரணத்தைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. மரணம் ஒரு முடிவல்ல, அது ஒரு துவக்கமே என்பதை நீர் எனக்கு வெளிப்படுத்தியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நானும் என்னுடைய சுயத்துக்கு மரித்து, உம்மிலே புதுவாழ்வு பெற்றுக் கொள்ள எனக்கு அருள் புரியும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இயேசு கிறிஸ்து கொல்லப்பட்டாரா? ஒரு சதித்திட்டத்தினால் அவர் பாதிக்கப்பட்டவரா? இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்கு யார் காரணம்? இயேசு கிறிஸ்துவின் மரணம் எப்படி நல்ல வெள்ளி என்று அழைக்கப்பட முடியும்? அது நல்லது என்றால், நாம் துக்கப்பட வேண்டுமா அல்லது கொண்டாட வேண்டுமா? மேற்கண்ட கேள்விகளுக்கு இந்த 7 நாட்கள் தியானத்திட்டத்தில் விடைகளைக் காணலாம்.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Vijay Thangiah க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://www.facebook.com/ThangiahVijay க்கு செல்லவும்.