இயேசு கிறிஸ்துவின் கொலை ஏன் நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது?மாதிரி
இயேசு தமது ஜீவனை “ஒப்புக்கொடுத்தார்” என்பதின் உண்மையான அர்த்தம் என்ன?
யோவான் 10:11-18 வரை உள்ள வசனங்களில், பாவிகளின் இரட்சிப்புக்காக இயேசு தம்மை மனமுவந்து ஒப்புக்கொடுத்தார் என்பதை ஐந்து முறை வாசிக்கிறோம். யோவான் 10:11ல் இயேசு “நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்” என்று சொல்கிறார். 15ம் வசனத்தில் “ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்” என்று சொல்லும் இயேசு 17ம் வசனத்தில் “நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறேன்” என்கிறார். 18ம் வசனத்தில் “ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன்” என்று பறைசாற்றுகிறார்.
எந்த மனிதனும் இயேசுவின் ஜீவனை பலவந்தப்படுத்தி எடுக்கவில்லை, மாறாக அவரே உங்களுக்காகவும் எனக்காகவும் தமது ஜீவனை தாமே கொடுத்தார். நாம் வாசித்த வேதபகுதியில் இயேசு கிறிஸ்து, தமது ஜீவனைக் கொடுக்கவும், மீண்டும் எடுத்துக் கொள்ளவும் தமக்கு அதிகாரம் உண்டு என்று சொல்கிறார்.
சிலுவை மரணத்திலிருந்து இயேசுவால் எளிதாக தப்பித்திருக்க முடியும். ஆனாலும் தெய்வீக அன்பு அவரை “என் சித்தமல்ல, உம்முடைய சித்தமே ஆகக்கடவது” என்று சொல்லி அனுப்பி வைத்தது. இந்த வல்லமை நிறைந்த வார்த்தைகள் நம்மேல் அவர் கொண்ட அன்பின் வெளிப்பாடாகவே புறப்பட்டு வந்தன.
யோவான் 15:13ல் இயேசு “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” என்று சொல்கிறார்.
நமது இரட்சிப்புக்காக நாமே உழைத்து, ஒருநாளும் அதை வாங்க முடியாது. நாம் செய்யக்கூடியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். சிலுவையிலிருந்து புறப்பட்டு வரும் அவரின் அன்பின் அழைப்புக்கு அடிபணிந்து, அதனால் கிடைக்கும் பலனாகிய பாவமன்னிப்பை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
சுவிசேஷங்களில் பல இடங்களில் இயேசு தாம் கடந்து செல்லப்போகிற பாடுகளைக் குறித்து தம்முடைய சீஷருக்கு முன் அறிவித்தார். அவருடைய சீஷருக்கு அவர் சொல்வதின் அர்த்தம் புரியாவிட்டாலும், அந்த கொடூர பாடுகள் அவருடைய சரீரத்திலும் ஆவியிலும் தாங்கொணா வேதனைகளை உருவாக்கும் என்பதை நன்கு அறிந்த போதிலும், இயேசு சிலுவை மரணத்திலிருந்து விலகி ஓடவில்லை. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு நாளிலும் அதற்காக தம்மையே ஒப்புக் கொடுத்தார். தமது மரணம் நிறைவேற இயேசு அனுமதி கொடுத்தார் என்று கூட சொல்லலாம். இதையே “பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பினார்” என்ற வசனம் (லூக்கா 9:51) உறுதிப்படுத்துகிறது.
“என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னை விட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று” இயேசு கிறிஸ்து ஜெபம் பண்ணியதாக நாம் மத்தேயு 26:42ல் வாசிக்கிறோம். இப்படிச் சொல்லிய பின்பு இயேசு தம்மைத் தாமே பாடுகளுக்கு ஒப்புக்கொடுத்து, பாவிகளாகிய நமது இரட்சிப்புக்கான வழியை நிரந்தரமாக ஏற்படுத்தினார்.
இயேசு தம்முடைய ஜீவனை தாமாக மனமுவந்து உங்களுக்காகவும் எனக்காகவும் ஒப்புக் கொடுத்தார். அவர் மட்டுமே அருளக்கூடிய இரட்சிப்பு என்ற பரிசை பெற்றுக் கொள்ள நீங்கள் ஆயத்தமா? இன்று அவரை உங்கள் வாழ்வின் இரட்சகராக ஏற்றுக் கொள்வீர்களா? இரட்சிப்பு நமக்காகவே ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது.
மேற்கோள் :
ஆணிகள் மட்டுமே இயேசுவை அந்த கொடூர சிலுவையில் அறைந்து விடவில்லை. அவரின் தன்னலமற்ற தீர்மானம், பிதாவின் மேல் அவர் கொண்ட அன்பு, பிதாவின் சித்தம் செய்ய தீவிரம் – எல்லாவற்றுக்கும் மேலாக என்னைப் போன்ற பாவிகளின் மேல் அவர் கொண்ட தணியாத அன்பு. இவைகளே அவரை சிலுவையில் அறைந்தன” – டி.ஏ. கார்சன்.
ஜெபம் :
ஆண்டவரே, என்மேல் நீர் கொண்ட அன்பினிமித்தம் சிலுவை சென்றதற்காக நன்றி. இன்று என் வாழ்க்கையை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். இனிமேல் என் வாழ்க்கை எனக்கு உரியதல்ல. நீர் உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே அதை வாங்கி விட்டீர். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இயேசு கிறிஸ்து கொல்லப்பட்டாரா? ஒரு சதித்திட்டத்தினால் அவர் பாதிக்கப்பட்டவரா? இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்கு யார் காரணம்? இயேசு கிறிஸ்துவின் மரணம் எப்படி நல்ல வெள்ளி என்று அழைக்கப்பட முடியும்? அது நல்லது என்றால், நாம் துக்கப்பட வேண்டுமா அல்லது கொண்டாட வேண்டுமா? மேற்கண்ட கேள்விகளுக்கு இந்த 7 நாட்கள் தியானத்திட்டத்தில் விடைகளைக் காணலாம்.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Vijay Thangiah க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://www.facebook.com/ThangiahVijay க்கு செல்லவும்.