சகரியா 7:9-14

சகரியா 7:9-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘நீதியைச் சரியாக வழங்குங்கள். ஒருவரிலொருவர் இரக்கம் காண்பித்து கருணை உள்ளவர்களாய் இருங்கள். விதவையையோ, தகப்பன் இல்லாத பிள்ளையையோ, பிறநாட்டினனையோ, ஏழையையோ ஒடுக்கவேண்டாம். உங்கள் உள்ளத்தில் ஒருவனுக்கெதிராக ஒருவன் தீய திட்டங்களைச் செய்யக்கூடாது.’ “ஆனால் அவர்கள் நான் சொன்னவற்றைக் கவனிக்க மறுத்தார்கள்; பிடிவாதமாக மறுபக்கம் திரும்பி தங்கள் காதுகளை மூடிக்கொண்டார்கள். அவர்கள் தங்கள் இருதயங்களை வைரத்தைப்போல் கடினமாக்கினார்கள். முந்தைய இறைவாக்கினர்மூலம் சேனைகளின் யெகோவா தம் ஆவியானவரால் கொடுத்த சட்டத்தையோ, வார்த்தைகளையோ கேட்க மறுத்தார்கள். ஆதலால் சேனைகளின் யெகோவா கடுங்கோபங்கொண்டுள்ளார். “ ‘நான் கூப்பிட்டபோது அவர்கள் கேட்கவில்லை. அதேபோல் அவர்கள் என்னைக் கூப்பிட்டபோது நானும் கேட்காமலிருந்தேன்,’ என சேனைகளின் யெகோவா சொல்கிறார். ‘அவர்களை நாடுகளுக்குள்ளே ஒரு சுழல்காற்றினால் நான் சிதறடித்தேன்; அங்கே அவர்கள் அந்நியராயிருந்தார்கள். இவ்வாறு அவர்கள் விட்டுச்சென்ற நாடு போக்குவரத்து இல்லாமல் பாழாய்ப் போயிற்று. இவ்வாறே அவர்கள் அந்தச் செழிப்பான நாட்டைப் பாழாக்கினார்கள்.’ ”

சகரியா 7:9-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாக நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து, விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாகத் தன் இருதயத்தில் தீங்கு நினைக்காமலும் இருங்கள் என்றார். அவர்களோ கவனிக்க மனதில்லாமல் தங்கள் தோளை முரட்டுத்தனமாக விலக்கி, கேட்காதபடிக்குத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டார்கள். வேதத்தையும் சேனைகளின் யெகோவா தம்முடைய ஆவியின் மூலமாக முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேட்காதபடிக்குத் தங்கள் இருதயத்தை மிகவும் கடினமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டானது. ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேட்காமற்போனார்களோ, அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேட்காமலிருந்தேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். அவர்கள் அறியாத அன்னியமக்களுக்குள்ளே அவர்களைச் சிதறடித்தேன்; அதினால் அவர்கள் பின்வைத்துப்போன தேசம் போக்குவரத்தில்லாமல் பாழாய்ப்போனது; அவர்கள் இன்பமான தேசத்தைப் பாழாய்ப்போகச் செய்தார்கள் என்றார்.

சகரியா 7:9-14 பரிசுத்த பைபிள் (TAERV)

சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “எது நன்மையும் நேர்மையும் கொண்டதோ அவற்றை நீ செய்ய வேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையும் இரக்கமும் கொள்ளவேண்டும். விதவைகளையும், அநாதைகளையும், அயல் நாட்டாரையும், ஏழைகளையும் துன்புறுத்தாதேயுங்கள். ஒருவருக்கொருவர் தீமைச் செய்ய எண்ணவும் வேண்டாம்!” என்றார். ஆனால் அந்த ஜனங்கள் கேட்க மறுத்தனர். அவர்கள் அவர் விரும்பியதை செய்ய மறுத்தனர். அவர்கள் தங்கள் காதுகளை மூடினார்கள். எனவே, தேவன் என்ன சொல்கிறார் என்பதை கேட்க முடியவில்லை. அவர்கள் மிகவும் கடின மனமுடையவர்கள். அவர்கள் சட்டங்களுக்கு அடிபணிவதில்லை. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தனது ஆவியைக்கொண்டு தனது ஜனங்களுக்குத் தீர்க்கதரிசிகள் மூலமாக செய்திகளை அனுப்பினார். ஆனால் ஜனங்கள் கேட்கவில்லை. எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மிகவும் கோபமுற்றார். ஆகவே சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “நான் அவர்களைக் கூப்பிட்டேன். அவர்கள் பதில் சொல்லவில்லை. இப்பொழுது அவர்கள் என்னைக் கூப்பிட்டால், நான் பதில் சொல்லமாட்டேன். நான் மற்ற நாடுகளை, ஒரு புயலைப்போன்று அவர்களுக்கு எதிராகக் கொண்டுவருவேன். அவர்கள் அந்த நாடுகளை அறியமாட்டார்கள். ஆனால், இந்த நாடு பிற நாடுகள் வந்து போன பிறகு அழிக்கப்படும். இந்த செழிப்பான நாடு அழிக்கப்படும்” என்றார்.

சகரியா 7:9-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து, விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும் இருங்கள் என்றார். அவர்களோ கவனிக்க மனதில்லாமல் தங்கள் தோளை முரட்டுத்தனமாய் விலக்கி, கேளாதபடிக்குத் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டார்கள். வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைரமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று. ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேளாமற்போனார்களோ, அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேளாமலிருந்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைப் பறக்கடித்தேன்; அதினால் அவர்கள் பின்வைத்துப்போன தேசம் போக்குவரத்தில்லாமல் பாழாய்ப்போயிற்று; அவர்கள் இன்பமான தேசத்தைப் பாழாய்ப்போகப்பண்ணினார்கள் என்றார்.