சகரியா 7:9-14

சகரியா 7:9-14 TAERV

சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “எது நன்மையும் நேர்மையும் கொண்டதோ அவற்றை நீ செய்ய வேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையும் இரக்கமும் கொள்ளவேண்டும். விதவைகளையும், அநாதைகளையும், அயல் நாட்டாரையும், ஏழைகளையும் துன்புறுத்தாதேயுங்கள். ஒருவருக்கொருவர் தீமைச் செய்ய எண்ணவும் வேண்டாம்!” என்றார். ஆனால் அந்த ஜனங்கள் கேட்க மறுத்தனர். அவர்கள் அவர் விரும்பியதை செய்ய மறுத்தனர். அவர்கள் தங்கள் காதுகளை மூடினார்கள். எனவே, தேவன் என்ன சொல்கிறார் என்பதை கேட்க முடியவில்லை. அவர்கள் மிகவும் கடின மனமுடையவர்கள். அவர்கள் சட்டங்களுக்கு அடிபணிவதில்லை. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தனது ஆவியைக்கொண்டு தனது ஜனங்களுக்குத் தீர்க்கதரிசிகள் மூலமாக செய்திகளை அனுப்பினார். ஆனால் ஜனங்கள் கேட்கவில்லை. எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மிகவும் கோபமுற்றார். ஆகவே சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “நான் அவர்களைக் கூப்பிட்டேன். அவர்கள் பதில் சொல்லவில்லை. இப்பொழுது அவர்கள் என்னைக் கூப்பிட்டால், நான் பதில் சொல்லமாட்டேன். நான் மற்ற நாடுகளை, ஒரு புயலைப்போன்று அவர்களுக்கு எதிராகக் கொண்டுவருவேன். அவர்கள் அந்த நாடுகளை அறியமாட்டார்கள். ஆனால், இந்த நாடு பிற நாடுகள் வந்து போன பிறகு அழிக்கப்படும். இந்த செழிப்பான நாடு அழிக்கப்படும்” என்றார்.