சகரியா 7
7
நீதியும் இரக்கமும்
1தரியு அரசன் ஆட்சி செய்த நான்காம் வருடம் கிஸ்லேவ் என்னும் ஒன்பதாம் மாதம் நான்காம் நாள், யெகோவாவின் வார்த்தை சகரியாவுக்கு வந்தது. 2பெத்தேல் நகரத்து மக்கள் சரெத்செர், ரெகெம்மெலெக் என்பவர்களைத் தங்கள் மனிதர்களோடு, யெகோவாவிடம் மன்றாடும்படி அனுப்பினார்கள். 3அவர்கள் வந்து சேனைகளின் யெகோவாவின் ஆலய ஆசாரியர்களிடமும், இறைவாக்கினரிடமும், “பல வருடமாக நாம் கடைப்பிடித்து வந்ததுபோல, ஐந்தாம் மாதத்தில் அழுது புலம்பி உபவாசம் இருக்க வேண்டுமா?” என்று கேட்டார்கள்.
4அப்பொழுது எல்லாம் வல்ல யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: 5“நீ இந்த நாட்டின் மக்கள் எல்லோரையும், ஆசாரியர்களையும் கேட்கவேண்டியதாவது: கடந்த எழுபது வருடமாக ஐந்தாம் மற்றும் ஏழாம் மாதங்களில் உபவாசமிருந்து துக்கங்கொண்டாடியபோது, உண்மையாக எனக்காகவா உபவாசமிருந்தீர்கள்? 6நீங்கள் சாப்பிடும்போதும், குடிக்கும்போதும் உங்களுக்காக அல்லவா விருந்து கொண்டாடினீர்கள்? 7முந்திய இறைவாக்கினரைக்கொண்டு யெகோவா இதைப்பற்றி உங்களுக்கு அறிவிக்கவில்லையா? எருசலேமும் அதன் சுற்றுப்புற பட்டணங்களும் அமைதியாயும் செழிப்பாயும் இருந்தபோதும், தெற்குப் பிரதேசங்களிலும், மேற்கே மலையடிவாரங்களிலும் குடியிருப்புகள் சமாதானமாய் இருந்தபோதும் அவர் இவற்றை அறிவிக்கவில்லையா?”
8யெகோவாவின் வார்த்தை திரும்பவும் சகரியாவுக்கு வந்தது: 9“சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘நீதியைச் சரியாக வழங்குங்கள். ஒருவரிலொருவர் இரக்கம் காண்பித்து கருணை உள்ளவர்களாய் இருங்கள். 10விதவையையோ, தகப்பன் இல்லாத பிள்ளையையோ, பிறநாட்டினனையோ, ஏழையையோ ஒடுக்கவேண்டாம். உங்கள் உள்ளத்தில் ஒருவனுக்கெதிராக ஒருவன் தீய திட்டங்களைச் செய்யக்கூடாது.’
11“ஆனால் அவர்கள் நான் சொன்னவற்றைக் கவனிக்க மறுத்தார்கள்; பிடிவாதமாக மறுபக்கம் திரும்பி தங்கள் காதுகளை மூடிக்கொண்டார்கள். 12அவர்கள் தங்கள் இருதயங்களை வைரத்தைப்போல் கடினமாக்கினார்கள். முந்தைய இறைவாக்கினர்மூலம் சேனைகளின் யெகோவா தம் ஆவியானவரால் கொடுத்த சட்டத்தையோ, வார்த்தைகளையோ கேட்க மறுத்தார்கள். ஆதலால் சேனைகளின் யெகோவா கடுங்கோபங்கொண்டுள்ளார்.
13“ ‘நான் கூப்பிட்டபோது அவர்கள் கேட்கவில்லை. அதேபோல் அவர்கள் என்னைக் கூப்பிட்டபோது நானும் கேட்காமலிருந்தேன்,’ என சேனைகளின் யெகோவா சொல்கிறார். 14‘அவர்களை நாடுகளுக்குள்ளே ஒரு சுழல்காற்றினால் நான் சிதறடித்தேன்; அங்கே அவர்கள் அந்நியராயிருந்தார்கள். இவ்வாறு அவர்கள் விட்டுச்சென்ற நாடு போக்குவரத்து இல்லாமல் பாழாய்ப் போயிற்று. இவ்வாறே அவர்கள் அந்தச் செழிப்பான நாட்டைப் பாழாக்கினார்கள்.’ ”
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
சகரியா 7: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.