சகரியா 12:9-14
சகரியா 12:9-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அந்த நாளிலே எருசலேமை தாக்குகிற எல்லா நாடுகளையும் அழிப்பதற்கு நான் புறப்படுவேன். “நான் தாவீதின் குடும்பத்துக்கும், எருசலேமில் வசிப்பவர்களுக்கும் தயவின் உள்ளத்தையும், மன்றாடும் மனநிலையையும் கொடுப்பேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தியவரான என்னை நோக்கிப் பார்ப்பார்கள். ஒருவன் தன் ஒரே பிள்ளைக்காகப் புலம்புவதைப் போலவும், ஒருவன் தன் தலைப்பிள்ளை இறந்துபோனதால் மனங்கசந்து துயரப்படுவதைப்போலவும், அவர்கள் எனக்காக மனங்கசந்து அழுது புலம்புவார்கள். அந்த நாளில் எருசலேமில் எழும்பும் புலம்பல் பெரிதாயிருக்கும். அது மெகிதோ சமவெளியிலுள்ள அதாத்ரிம்மோன் பட்டணத்தில் ஏற்பட்ட புலம்பலைப்போல இருக்கும். நாடு துக்கங்கொண்டாடும், ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாக புலம்பும், அவர்களுடைய மனைவிமாரும் புறம்பாயிருந்து புலம்புவார்கள். தாவீதின் குடும்பத்தின் வம்சமும் அவர்களின் மனைவியரும், நாத்தானின் குடும்பத்தின் வம்சமும் அவர்கள் மனைவிமாரும், லேவியின் குடும்பத்தின் வம்சமும் அவர்களின் மனைவியரும், சீமேயின் வம்சமும் அவர்களின் மனைவியரும், மீதமுள்ள எல்லா வம்சங்களும் அவர்களின் மனைவியரும் புலம்புவார்கள்.
சகரியா 12:9-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாக வருகிற எல்லா மக்களையும் அழிக்கப் பார்ப்பேன். நான் தாவீது குடும்பத்தார்கள் மேலும் எருசலேம் குடிமக்கள் மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைமகனுக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாக இருக்கும். தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், நாத்தான் குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், லேவி குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், சீமேயி குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், மீதமுள்ள எல்லா குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனிதர்கள் தனித்தனியாகவும் அவர்களுடைய பெண்கள் தனித்தனியாகவும் புலம்புவார்கள்.
சகரியா 12:9-14 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் கூறுகிறார்: “அந்நேரத்தில், எருசலேமிற்கு எதிராகப் போரிட வரும் நாடுகளை நான் அழிப்பேன். நான் எருசலேமில் உள்ள தாவீதின் குடும்பத்தாரையும் மற்ற ஜனங்களையும் கருணையின் ஆவியாலும், இரக்கத்தின் ஆவியாலும் நிரப்புவேன். அவர்கள் தாங்கள் குத்தின ஒருவரான என்னைப் பார்ப்பார்கள். அவர்கள் மிகவும் துக்கமாக இருப்பார்கள். அவர்கள், ஒருவன் தன் ஒரே குமாரனின் மரணத்துக்காக அழுகிறவனைப் போன்றும், ஒருவன் தன் மூத்த குமாரனின் மரணத்துக்காக அழுகிறவனைப் போன்றும் துக்கம் கொள்வார்கள். எருசலேமில் பெருந்துக்கத்துக்கும், அழுகைக்கும் உரியகாலம் இருக்கும். இது மெகிதோன் பட்டணத்து பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத் ரிம்மோனின் புலம்பலைப் போன்றிருக்கும். அங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்குள் அழுவார்கள். தாவீதின் குடும்பத்திலுள்ள ஆடவர்கள் தங்களுக்குள் அழுவார்கள். அவர்களின் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள். நாத்தானின் குடும்பத்திலுள்ள ஆண்கள் தங்களுக்குள் அழுவார்கள். அவர்களின் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள். சீமேயின் குடும்பத்து ஆண்களும் தங்களுக்குள் அழுவார்கள். அவர் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள். லேவியின் குடும்பத்திலுள்ள ஆண்கள் தங்களுக்குள் அழுவார்கள். அவர்களின் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள். சிமியோன் குடும்பத்திலுள்ள ஆண்களும், அவர்களின் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள். அங்குள்ள மற்ற கோத்திரங்களிலும் இது போல் நிகழும். ஆண்களும் பெண்களும் தங்களுக்குள் அழுவார்கள்.”
சகரியா 12:9-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன். நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும். தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், லேவி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சீமேயி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், மற்றுமுண்டான சகல குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனுஷர் தனித்தனியேயும் அவர்களுடைய ஸ்திரீகள் தனித்தனியேயும் புலம்புவார்கள்.