சகரியா 12:9-14

சகரியா 12:9-14 TCV

அந்த நாளிலே எருசலேமை தாக்குகிற எல்லா நாடுகளையும் அழிப்பதற்கு நான் புறப்படுவேன். “நான் தாவீதின் குடும்பத்துக்கும், எருசலேமில் வசிப்பவர்களுக்கும் தயவின் உள்ளத்தையும், மன்றாடும் மனநிலையையும் கொடுப்பேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தியவரான என்னை நோக்கிப் பார்ப்பார்கள். ஒருவன் தன் ஒரே பிள்ளைக்காகப் புலம்புவதைப் போலவும், ஒருவன் தன் தலைப்பிள்ளை இறந்துபோனதால் மனங்கசந்து துயரப்படுவதைப்போலவும், அவர்கள் எனக்காக மனங்கசந்து அழுது புலம்புவார்கள். அந்த நாளில் எருசலேமில் எழும்பும் புலம்பல் பெரிதாயிருக்கும். அது மெகிதோ சமவெளியிலுள்ள அதாத்ரிம்மோன் பட்டணத்தில் ஏற்பட்ட புலம்பலைப்போல இருக்கும். நாடு துக்கங்கொண்டாடும், ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாக புலம்பும், அவர்களுடைய மனைவிமாரும் புறம்பாயிருந்து புலம்புவார்கள். தாவீதின் குடும்பத்தின் வம்சமும் அவர்களின் மனைவியரும், நாத்தானின் குடும்பத்தின் வம்சமும் அவர்கள் மனைவிமாரும், லேவியின் குடும்பத்தின் வம்சமும் அவர்களின் மனைவியரும், சீமேயின் வம்சமும் அவர்களின் மனைவியரும், மீதமுள்ள எல்லா வம்சங்களும் அவர்களின் மனைவியரும் புலம்புவார்கள்.